நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,
காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.
மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய்த் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய். ~ கலாத்தியர் 4:4-7
“நான் சில வேளைகளில் தனிமையாய் உணர்கிறேன். அந்த தனிமையிலிருந்து வெளிவரவேண்டியது மற்றவர்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை அந்த தனிமை எனக்குக் கற்பிக்கிறது.” இதைச் சொன்னது ஆஸ்டீரியா. இவர், போதை பழக்கத்திற்கு அடிமையானோர் அதிகம் வசிக்கும் எல் கேம்பமெண்டோ என்ற நகரத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை அனுசரிக்கும் ஃபெயித் பேஸ்ட் கம்யூனிட்டி குழுமத்தின் செயலாளர். தெருவில் வசிப்பவர்களுக்கு இந்த பண்டிகை நாட்கள் எவ்வளவு கடினமானதாய் இருக்கும் என்பதை அவர் உணர்ந்தார். ஆகையால் கிறிஸ்துவின் அன்பை அவர்களுக்கு பிரதிபலிக்கும் விதத்தில், அவர்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம் கிறிஸ்துமஸ் மரங்களை ஏற்படுத்தி, பாடல்களைப் பாடி, அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பரிசுளை அவர்களுக்கு கொடுக்கத் தீர்மானித்தார். அதன் விளைவு ஆச்சரியமாயிருந்தது. ஆதரவற்றவர்களில் பெரும்பாலானோர், தங்கள் வீடுகளில் வசிப்பவர்கள் தங்களை மன்னித்து ஏற்றுக்கொள்வதன் அவசியத்தை உணர்ந்து, அவர்களுக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
எல் கேம்பமெண்டோ பகுதியில் உள்ள மக்களுக்கு சேவை செய்ததன் மூலம், ஆஸ்டீரியாவும் அவரது குழுவினரும், தம் குமாரன் மூலமாக நம்மை சந்தித்த தேவனுடைய மெய்யான பரிசாகிய கிறிஸ்துவை பிரதிபலித்தனர். பவுல் கலாத்தியருக்கு எழுதும்போது, “நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்” (கலாத்தியர் 4:4-5) என்று கூறுகிறார். நாமெல்லோரும் பாவிகளாய் இருந்தபோதிலும், தேவன் அவருடைய புத்திரர்களாகும்படி நமக்கு அழைப்புக் கொடுக்கிறார் (வச. 7). அவர் ஆதரவற்றவர்களுக்கும் வீடுகளில் வசிப்பவர்களுக்கும் தம்முடைய இரட்சிப்புக்கேதுவான கிருபை என்னும் பரிசை பெற்றுக்கொள்ளும்படி அழைப்பு விடுக்கிறார்.
நாமிருக்கும் இடத்திற்கே கிறிஸ்துவின் மூலமாய் தேவன் நமக்கு இந்த கிறிஸ்துமஸ் பரிசைக் கொண்டுவருகிறார். இந்த அன்பின் பரிசை பெற்றுக் கொண்ட நாம் அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வோம்.
எமி பவுச்சர் பை
மெய்யான கிறிஸ்துமஸ் என்றால் என்ன என்பதை எப்போது நீங்கள் புரிந்துகொண்டீர்கள்? இந்த மெய்யான கிறிஸ்துமஸ் பரிசை எப்படி மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டீர்கள்?
இயேசுவே, இன்று ஆதரவில்லாமல் தவிக்கும் மக்களுக்கு ஆறுதலைத் தாரும். உம்முடைய கிருபையின் பிரதிநிதியாய் அவர்களுக்கு உதவிசெய்வதன் மூலம் அந்த அன்பை பிரஸ்தாபப்படுத்த எனக்கு உதவிசெய்யும்.