banner image

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம். கலாத்தியர் 5:22-23

பிப்ரவரி 2020 இல், கோவிட்-19 நெருக்கடி துவங்கிய காலம். ஒரு செய்தித்தாள் கட்டுரையாளரின் கரிசனை என் கவனத்தை ஈர்த்தது. “நாம் விருப்பத்துடன் தனிமைப்படுத்திக் கொள்வோமா? மற்றவர்கள் நோய்வாய்ப்படாமல் இருக்க நமது வேலை, பயணம் மற்றும் கடையில் வாங்கும் பழக்கங்களை மாற்றிக் கொள்வோமா?” என்று வியந்தார். மேலும் “இது வெறும் மருத்துவம் சார்ந்த சோதனை மட்டுமல்ல, மற்றவர்களுக்காக நம்மை இழக்கும் நமது விருப்பத்திற்குமான சோதனையும்தான்” என்று அவர் எழுதினார். திடீரென்று அன்பு தேவை என்பது முதல் பக்கச் செய்தியானது.

நமது சொந்த தேவைகளைப் பற்றியே நாம் கவலைப்படும்போது, பிறரின் தேவைகளைக் கருத்தில் கொள்வது கடினமாக இருக்கலாம். அதிர்ஷ்டவசமாக, அந்த குறையைப் பூர்த்திசெய்ய மன உறுதி மட்டும் நம்மிடம் இல்லை. அதற்குமேல் நம்மிடமுள்ள வேறுபாடுகளைக் களைய அன்பையும், சோகத்தை எதிர்கொள்ள மகிழ்ச்சியையும், கவலையை மாற்றியமைக்கச் சமாதானத்தையும், மனக்கிளர்ச்சியை விரட்டும் சகிப்புத்தன்மையையும் (பொறுமை) , பிறர் மீது அக்கறை கொள்வதற்கான தயவையும், அவர்களின் தேவைகளைக் கவனிக்கும் நற்குணத்தையும், நமது வாக்குறுதிகளைக் காத்துக்கொள்ளும் விசுவாசத்தையும், கடுமைக்குப் பதிலாக சாந்தம் மற்றும் சுயநலத்துக்கு அப்பால் நம்மை உயர்த்தும் சுயகட்டுப்பாட்டையும் பரிசுத்த ஆவியானவரிடம் கேட்கலாம் (கலாத்தியர் 5:22–23). இவைகளெல்லாவற்றையும் நாம் பூரணமாய் கடைப்பிடிக்க இயலாவிடினும், ஆவியின் நற்கனிகளையே நாம் எப்போதும் நாட அழைக்கப்பட்டுள்ளோம் (எபேசியர் 5:18).

ரிச்சர்ட் ஃபாஸ்டர் ஒருமுறை பரிசுத்தம் என்பது, தியாகம் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டிய போது அதைச் செய்யும் திறன் என்று விவரித்தார். ஒரு தொற்றுநோய்க்கு மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அத்தகைய பரிசுத்தம் தேவைப்படுகிறது. மற்றவர்களுக்காகத் தியாகம் செய்யும் திறன் நமக்கு இருக்கிறதா? பரிசுத்த ஆவியானவரே, செய்ய வேண்டியதைச் செய்யும் வல்லமையால் எங்களை நிரப்பும்.
எழுதியவர்: ஷெரிடன் வாய்ஸி

சிந்தனை
மற்றவர்களுக்காக நீங்கள் எப்போது தியாகம் செய்தீர்கள்? இன்று உங்களைச் சுற்றியுள்ளவற்றில் எவற்றை எதிர்கொள்ளப் பரிசுத்த ஆவியின் கனிகள் தேவைப்படுகிறது?
பரிசுத்த ஆவியானவரே, இன்று என்னைப் புதுப்பித்து, நற்குணசாலியாக்கும்.