இயேசு ஒரு புலம் பெயர்ந்தவர்

நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். ~ லூக்கா 9:58

புலம்பெயர்தல் என்பது ஒரு பொதுவான வேதாகம கருப்பொருள். பழைய ஏற்பாட்டில் ஆபிராமும் சாராயும் ஊர் தேசத்திலிருந்து கானான் தேசத்திற்கு குடிபெயருமாறு கட்டளையிடப்பட்டனர் (ஆதியாகமம் 12:1-2). இஸ்ரவேலர்களுக்கு 40 வருட புலம்பெயர் அனுபவம் இருந்தது. அதை அவர்கள் எப்போதும் நினைவு கூற வேண்டும் என்று தேவன் விரும்பினார். ஆகவே அவர் சொன்னதென்னவெனில்: யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம். உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே (லேவியாராகமம் 19: 33-34).

கிறிஸ்து பிறப்பதற்காக அவரது தாயார் மரியாள் நல்ல இடம் ஒன்று தேடி அங்கும் இங்கும் அலைந்தாள். ஆனால் அவள் மாட்டு தொழுவத்திற்கு வழிநடத்த படவேண்டும் என்பதற்காகவே வேறு எந்த கதவும் அவளுக்கு திறக்கப்படவில்லை. ஆகவே இயேசு சச்சரவுக்கும் பயங்கரத்திற்கும் ஊடே உலகத்தில் உதித்தார். தனது குழந்தை பருவத்தை புலம் பெயர்ந்த ஒரு அகதியாக எகிப்தில் கழித்தார். இறுதியாக பெத்லகேமுக்கு அவரைக் கொண்டு செல்லும்போது – வரவேற்பின்மை, மாடுகளின் மத்தியில் பிறப்பது, ஏரோதுவின் துன்புறுத்தல், அப்பாவி குழந்தைகள் படுகொலை, எகிப்திற்கு தப்பி ஓடுவது – இவ்விதமான கடின பாதையை வேதாகமத்தில் நற்செய்தி நூல்கள் விவரிக்கின்றன. அப்போஸ்தலர் யோவான் எழுதுகிறார்: “அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” (யோவான் 1:11). புலம்பெயர்ந்தவராக இருப்பது என்ன என்பதை இயேசு புரிந்து கொண்டார்.

ஒரு கணம் இங்கே நிறுத்தி ‘மூடிய கதவுகள்’ நமக்கு கற்பிக்கும் பாடங்களை கவனிப்போம். தேவன் சில சமயம் நம்மை ஆபத்திலிருந்து காப்பதற்காக கதவுகளை மூடுகின்றார்; அச்சமயங்களில் எப்போதுமே அவர் இன்னொரு கதவை நமக்காக திறப்பதில்லை. ஆனால் அவர் செய்வதெல்லாம் நம்முடைய நன்மைக்காகவே. ஆனால், நம்முடைய சக மனிதர்களுக்கு நாம் கதவுகளை மூடும்போது, நாம் கடவுளாக செயல்படத் தொடங்குகிறோம், அவ்வாறு செய்யும்போது நாம் யாரை வைத்திருக்க வேண்டும், யாரை வெளியே வைத்திருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்கிறோம். நீதியின் தராசை  நம் கையில் எடுத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் அளவிட வேண்டிய நியாயத்தை  நாம் தீர்மானிக்கிறோம்.

கொளுத்தும் வெயிலில், காலணி இல்லாமல், உணவும் தண்ணீருமின்றி தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்றடைய நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்து செல்லும் புலம்பெயர்ந்தவர்களை இன்று பார்க்கும்போது இயேசு அவர்களுடைய சஞ்சலத்தை நன்றாக உணர்ந்துகொள்கிறார். ஏனென்றால் அவரும் இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் பிறந்தவர்தான். நடந்து அல்லது கழுதை மேல் ஏறித்தான் செல்ல வேண்டும் என்னும்போது பெத்தலகேமிலிருந்து எகிப்து போவது எளிதல்ல. அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும் என்றுகூட அவருக்கு தெரியாது. அதனால்தான் அவர் வளர்ந்தபின் பேசும்போது சொல்லுகிறார்: “ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? (மத்தேயு 6). இறைவன் கவனித்துக்கொள்வார் என்ற உறுதியுடனும் நம்பிக்கையுடனும் அவர் தனது சொந்த அனுபவத்திலிருந்து இவ்வாறு பேசினார்.

அவருடைய ஊழியக்காலம் முழுவதிலும் இயேசு யூதேயா மற்றும் சமாரியா பகுதிகளில் திரியும் ஒரு நாடோடியாக, உபதேசியாக, சுகம் அளிப்பவராக சித்தரிக்கப்படுகிறார்; அன்பின் செய்தியையும் இரட்சிப்பின் மகத்துவத்தையும் யாவருக்கும் பகிர்ந்து கொள்கிறார். ‘சொந்தம்’ என்று அவருக்கு ஒரு இடம் இல்லை. தன்னுடைய தேவைகளுக்காகவும், தன்னுடைய சீஷர்களுடைய தேவைகளுக்காகவும் மற்றவர்களுடைய தாராள மனப்பான்மையை மட்டுமே சார்ந்திருந்தார்.

இந்நாட்களில் நாம் ‘புலம்பெயர்ந்தோர்’ என்று சொல்லும்போது அவர்களை தரக் குறைவாகவே கருதுகின்றோம். ஆனால் அது தவறு. அவர்கள் தான் நம்முடைய நகரங்களில் நம்மை வாழ வைக்கிறார்கள்; பாத்திரம் கழுவிகிறார்கள், துணி துவைக்கிறார்கள், வாகனங்களை சரி பண்ணுகிறார்கள், உணவகங்களில் சேவை செய்கிறார்கள், நீர் வடிப்பான்களை பழுது பார்க்கிறார்கள். ஏன், நம்முடைய கைபேசிகளில் சில சொடுக்குகள் செய்தால் நமக்கு பிடித்த உணவுப்பண்டங்களை கூட கொண்டுவருகிறார்கள். நமக்கு பிடித்த மில்லாத வேலைகளையெல்லாம் அவர்கள் செய்து, நம்முடைய வாழ்க்கையை எளிதாக்குகிறார்கள்.

அப்போஸ்தலனாகிய பேதுரு, 1 பேதுரு 2:11-ல் எழுதும்போது எல்லா கிறிஸ்தவர்களையும் “அந்நியர்கள், பரதேசிகள்” என்று குறிப்பிடுகிறார். இஸ்ரவேலர்கள் ஒரு காலத்தில் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் என்று தேவன் நினைவூட்டியது போல, இந்த உலகத்தை கடந்து செல்லும் நாமும் புலம்பெயர்ந்தவர்கள் என்று தேவன் நமக்கு நினைவூட்டுகிறார். நம் நாட்டில் காணப்படும்  இன்றைய நிலைமை தேவனின் நீதியை பிரதிபலிக்கவில்லை; ஆனாலும் நாம் தேவனை நேசிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு பிறருடைய தேவைகளை கவனிக்காமல் இருப்பது தகாதது என்று இயேசு குறிப்பாகச் சொல்லுகிறார். ஆம், தேவை உள்ளவர்களை தள்ளி விட்டு கதவை மூடக்கூடாது. அந்நியர்களுக்கு நாம் கதவைத் திறக்கும் போது தேவன் நம் மூலம் செயல்படுகிறார் என்று எபிரேயர் 13: 2 சொல்கிறது: “அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு”  ஆகவே என்ன செய்யலாம்? அவர்களுக்கு கை கொடுத்து, நம்முடைய ஜெபங்களில் அவர்களை தாங்கி, தேவைப்பட்டால் அவர்களை விசாரித்து உபசரிக்க வேண்டும். ஒவ்வொரு புலம்பெயர்ந்தவரின் முகத்திலும் தேவனுடைய ‘சாயலை’ காண்கிறோம். இயேசுவில் புலம்பெயர்த்தோரின் சாயலை காண்பது போலவே ஒவ்வொரு புலம்பெயர்ந்தோரிலும் இயேசுவின் சாயலை காண்போம்.

-போதகர் ஆனந்த் பீகாக்