ஜார்ஜுக்கு இயேசுவைப் பற்றி பிறரிடம் சொல்வதில் மிகுந்த வாஞ்சை இருந்தது. அவர் தனது உயர்நிலைப் பள்ளியில் ஒரு நற்செய்தி கூட்டத்தை ஏற்பாடு செய்தார். தனது கல்லூரி நண்பர்கள் இருவரை, மெக்சிகோவில் வேதாகமத்தை விநியோகிக்க நியமித்தார். ஜார்ஜ் வெர்வர் பின்னர், ஆபரேஷன் மொபைலைசேஷன் (Operation Mobilization) என்ற சர்வதேச ஊழியத்தை நிறுவினார்.

அவர் பெரியளவில் வெற்றி பெற்றிருந்தாலும், வெர்வர் தான் செய்த தவறுகளையும் அறிந்திருந்தார். அவர் எழுதிய மெஸ்சியாலாஜி (Messiology) என்ற புத்தகத்தில், “நமது அலங்கோலங்களின் மத்தியில், அத்தருணத்தில் நாம் உணர்ந்ததைக் காட்டிலும் தேவன் அதிகமாகச் செய்து கொண்டிருந்தார் என்பதை வரலாறு உணர்த்தும் என்று நான் நம்புகிறேன்” என்றெழுதினார்.

கடைசி இராபோஜன மாலையில் இயேசு பேதுருவிடம் ஒன்றைச் சொன்னார், அது வெர்வரின் வாதத்தை உறுதிப்படுத்துகிறது. பேதுருவின் கால்களைக் கழுவச் சென்ற கிறிஸ்து, “நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய்” (யோவான் 3:7) என்றார். சுவாரஸ்யமாக, பேதுருவின் “அலங்கோலம்” இன்னும் அரங்கேறவில்லை: “சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய்” (வ.38). ஆனால் இயேசு மிகப் பெரிய அலங்கோலத்தையே குறிப்பிடுகிறார்: அது அனைத்து மனுகுலத்தின் பாவம். தாங்கள் உணர்ந்ததை விட மகாபெரியதை தேவன் செய்கிறார் என்று சீடர்களுக்குத் தெரியாது.

இயேசுவுக்காக வாழ்வதில், நம்முடைய சொந்த “மெசியாலஜியில்” நாமும் இருப்பதைக் காண்கிறோம். சிறந்த பணியில் கூட, நாம் தவறு செய்கிறோம், காரியங்களை அலங்கோலப்படுத்துகிறோம், விரக்தியில் விழுகிறோம். ஆனால் இயேசு தம் சீடர்களிடம், “நானே அவரென்று” (வ.19) (மேசியா) கூறுகிறார். அது நமக்கு உண்மையான நம்பிக்கையைத் தருகிறது. தேவன் என்ன செய்கிறார் என்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவர் யார் என்பதில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். நாம் புரிந்துகொள்வதை விட அவர் மிக மேலானவர்.

-கென்னத் பீட்டர்சன்

உங்கள் வாழ்க்கையில் எதைப் புரிந்துகொள்வது கடினம்? தேவனின் நோக்கங்கள் உங்களுக்கு எவ்வாறு குழப்பமாக இருக்கிறது?

அன்பு தேவனே, உமது வழிகள் எப்போதும் நான் அறியாதவை என்பதை ஏற்றுக்கொள்ள எனக்கு உதவும்.

யோவான் 13:6-20

6 அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது,
அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என்
கால்களைக் கழுவலாமா என்றான்.
7
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது
இன்னதென்று இப்பொழுது நீ அறியாய்,
இனிமேல் அறிவாய் என்றார்.
8
பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக்
கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப்
பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால்
என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.
9
அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என்
கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும்
என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான்.
10
இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன்
கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும்,
மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்;
நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும்
எல்லாரும் அல்ல என்றார்.
11
தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர்
அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும்
சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார்.
12
அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு,
தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு,
திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான்
உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?
13
நீங்கள் என்னைப் போதகரென்றும் ஆண்டவரென்றும்
சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே,
நான் அவர்தான்.
14
ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள்
கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும்
ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.
15
நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும்
செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
16
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச்
சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும்
பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை
அனுப்பினவரிலும் பெரியவனல்ல.
17
நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால்,
இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
18
உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை,
நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும்
வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே
அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
19
அது நடக்கும்போது நானே அவரென்று நீங்கள்
விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு
முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
20
நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்கிறவன்
என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை
ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை
ஏற்றுக்கொள்ளுகிறான் என்று, மெய்யாகவே
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

யோவான் 13:7

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்