வாசிக்கவும்: எரேமியா 31:1-14

அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன் (வ.3).

நண்பர் ஒருவர் அவரது மனைவி மற்றும் பல குழந்தைகளை விட்டுவிட்டு எதிர்பாராதவிதமாக இறந்தார். அவர் இறந்த சில நாட்களுக்குப் பிறகு அவரது விதவையான மனைவுயுடன் (அன்புள்ள நண்பரும்) பேசினேன். அவள் மனம் உடைந்துபோன நிலையிலும், இயேசுவின் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள இரண்டு நபர்களை ஊக்குவிக்கும்படி கடவுள் ஏற்கனவே தன் கணவரின் மரணத்தைப் பயன்படுத்தியதைக் கண்டு வியப்படைந்தாள். தன் குழந்தைகளைக் கூட்டிச் சென்று இப்படிச் சொன்னதாக அவள் விளக்கினாள்: “கோபமாக இருப்பதும், உங்கள் உணர்ச்சிகளை கடவுளிடம் வெளிப்படுத்துவதும் தவறில்லை, ஆனால் தயவு செய்து அவை கடவுள் மீதான உங்கள் நம்பிக்கையைப் பாதிக்கவிடாதீர்கள். இந்த மக்கள் கடவுளைவிட்டு திரும்பியதுபோல் நீங்களும் கடவுளிடமிருந்து விலகிச் சென்றால் அது எவ்வளவு துயரமானது?

அவள் துக்கத்திலும் வேதனையிலும் இருந்தபோதிலும், அவள் கடவுளையும் அவருடைய நித்திய அன்பையும் பற்றிக்கொண்டாள்.

எரேமியாவும் யூதாவின் மக்களும் வலியையும் மனவேதனையையும் அறிந்திருந்தனர். அவர்கள் பாபிலோனியாவின் அடக்குமுறையின்கீழ் வந்து தங்கள் தாயகத்திலிருந்து துண்டிக்கப்பட்டனர். தோல்வியும் அழிவும் துக்கத்திற்கும் நம்பிக்கையின்மைக்கும் கடத்திச் சென்றது. ஆனால் கடவுள் எரேமியா தீர்க்கதரிசிக்கு நம்பிக்கையூட்டும் சில வார்த்தைகளைக் கொடுத்தார்: “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.” (எரேமியா 31:3). ஒரு நாள் அவர் தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவார், மீண்டும் தோட்டங்கள் தேசத்தில் செழிக்கும், மகிழ்ச்சியும் நடனமும் மீண்டும் மக்களால் அனுபவிக்கப்படும் (வவ. 4-7) என்று அவர் விளக்கினார். சாராம்சத்தில், “சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்” (சங்கீதம் 30:5).

என் நண்பரின் மனைவி தனது குழந்தைகளுக்கு நம்பிக்கையின் ஞானமான வார்த்தைகளை வெளிப்படுத்த முடிந்தது, ஏனென்றால் கடவுளின் அன்பிலும் ஏற்பாட்டிலும் அவள் நம்பிக்கையாயிருக்கலாம் என்று அவளுக்குத் தெரியும். அவருடைய “நல்ல வரங்கள்” நிலைத்திருக்கும் (எரேமியா 31:14). அவள் பயத்தையும் துக்கத்தின் வாடையையும் அனுபவித்தாலும், “அவர்களின் துக்கத்தை நான் சந்தோஷமாக மாற்றுவேன்” (வச. 13) என்று தம் மக்களிடம் கூறியவரின் கரங்களில் அவள் ஓய்வெடுக்க முடியும். அவருடைய அன்பு நிரந்தரமானது.

—டாம் ஃபெல்டன்

மேலும்

சங்கீதம் 23:1-6-ஐப் படித்து, கடவுள் உங்கள் மீது வைத்திருக்கும் “விழுப்பில்லாத அன்பை” சிந்தித்துப் பாருங்கள்.

அடுத்தது

நம்பிக்கை நெருக்கடிக்கு வழிவகுத்த ஓர் சூழ்நிலையை நீங்கள் எதிர்கொள்கிறீர்களா? இப்போது இல்லையென்றால், நீங்கள் ஒன்றை எதிர்கொள்ளும்போது, கடவுளின் நித்திய அன்பையும் நற்குணத்தையும் எப்படி நினைவுபடுத்த முடியும்?