“ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்.
ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான்.
அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:
யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.
அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து:
நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்.
ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.
அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். ~ மத்தேயு 2:1-12
என்னுடைய ஆஸ்திரேலிய நண்பர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை பார்ப்பதை நான் அதிகம் விரும்புவேன். அவர்களின் அலங்கரிப்புகளுக்காகவும் விமரிசையான கொண்டாட்டத்திற்காகவும் அல்ல; மாறாக, அவர்கள் தங்களுடைய கிறிஸ்துமஸை கடற்கரையில் கொண்டாடுவது வழக்கம். ஏனென்றால் அங்கே கிறிஸ்துமஸ் கோடை காலத்தில் வரும். பூமியின் வடதிசையில் இருக்கும் மக்கள், தென் திசையில் இருக்கும் மக்கள் தங்களுடைய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை கோடைக் காலத்தில் கொண்டாடுகின்றனர் என்பதை முற்றிலும் மறந்துவிட்டோம். ஆனால் கிறிஸ்துமஸ் நாளில் நான் பார்க்க விரும்பியது இதுவன்று.
இந்த கோடைக் கால கிறிஸ்துமஸ் கொண்டாட்டமானது, எதிர்பாராத முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை எனக்கு நினைவுபடுத்தியது. இயேசுவின் பிறப்பின் போது, கிழக்கில் உதித்த நட்சத்திரத்தைக் கண்ட சிலர், வாக்குப்பண்ணப்பட்ட இஸ்ரவேலின் மேசியா உதித்திருக்கிறார் என்பதை அறிந்துகொண்டனர் (மீகா 5:2).
இந்த கற்றுத் தேர்ந்த ஞானிகள் தங்களுடைய வீடுகளை விட்டுவிட்டு, இஸ்ரவேலுக்கு வந்து, தங்களுடைய புதிய ராஜாவை பார்ப்பதற்கு அரண்மனையை தேடிச் செல்லுகிறார்கள். ஆனால் இயேசு அங்கே இல்லை. தங்கள் தவறை உணர்ந்தவர்களாய், தங்களை வழிநடத்திய நட்சத்திரத்தை பின்பற்றி, பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்தை வந்தடைந்தனர். அங்கே தான் அவர்கள் இயேசுவைக் கண்டனர் (மத்தேயு 2:10-11).
நாம் கோடைக் காலத்தில் கொண்டாடுகிறோமோ அல்லது குளிர் காலத்தில் கொண்டாடுகிறோமோ என்பது முக்கியமில்லை. ஆனால் அந்த நாளில் பிறந்த ஒரு குழந்தை வளர்ந்து, தேவனைக் குறித்து நமக்கு போதித்து, ஆச்சரியமான பரிசுகளை நமக்குக் கொடுத்து, தேவனோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ளது என்பதை நாம் நினைவுகூருகிறோம். அந்த சாஸ்திரிகளைப் போலவே நாமும் அவரைத் தேடிச் சென்று அவருடைய பரிசுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய எண்ணங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்ட நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் பெற்றுக்கொள்ளலாம்.
– லிசா சாம்ரா
இயேசுவின் பிறப்பில் எதிர்பாராத மற்ற நிகழ்வுகள் என்னென்ன? மக்களின் எதிர்பார்ப்புகளை இயேசு எவ்விதம் தலைகீழாய் மாற்றினார்?
இயேசுவே, தேவனோடு எங்களை ஒப்புரவாக்க நாங்கள் எதிர்பாராத இடத்திற்கு வந்ததற்காய் நன்றி.