2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று, இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு விடுதிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகின. செய்தி பரவியதால், சில தேவாலயங்கள் தங்கள் ஆராதனைகளைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டன. மக்கள் திகைத்து, பயந்து வீட்டிற்கு விரைந்தனர். அவர்களின் மகிழ்ச்சியான கொண்டாட்டம் சோகமாக மாறியது.

அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், ஈஸ்டர் இப்போது “ஈஸ்டர் குண்டுவெடிப்பு” என்று குறிப்பிடப்படும் அர்த்தமற்ற வன்முறையால் மாண்ட அன்புக்குரியவர்களின் நினைவுகளை மீண்டும் கொண்டுவருகிறது. ஆயினும்கூட துயரம், அப்பாவிகளின் படுகொலை மற்றும் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் சோகம் ஆகியவை உயிர்த்தெழுதலில் உள்ள முரண்பாட்டிற்கு அப்பட்டமான நினைவூட்டல்களே ஆகும். நாம் பிழைக்கும்படி இயேசு மரித்தார். நாம் ஒரு நாள் மரித்தாலும், அவருடைய ஜீவனில் பங்கடைவதால், நாம் மீண்டும் உயிர்த்தெழுவோம் என்பதையும் அறிவோம். அதுதான் உயிர்த்தெழுதலின் நம்பிக்கை.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், பவுலின் கேள்வியை நாமும் நம்பிக்கையுடன் உறுதிப்படுத்தச் செய்கிறது, “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?” மேலும், “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (வ.55-57) எனலாம்.

உயிர்த்தெழுதல் ஞாயிறு என்பது பாவம் மற்றும் மரணத்தின் மீதான கிறிஸ்துவின் வெற்றியின் கொண்டாட்டமாகும், மேலும் இது நாம் பெறக்கூடிய மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கிறது. 4 ஆம் நூற்றாண்டின் சபை முற்பிதா ஜான் கிறிசோஸ்டம், “கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், நீ (மரணம்) தூக்கி எறியப்பட்டாய்! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், பேய்கள் வீழ்ந்தன! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், தேவதூதர்கள் களித்தனர்! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், ஜீவன் ஆள்கிறது! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், கல்லறையில் ஒருவர் கூட மரித்திருக்கவில்லை!” என்றார். எதிர்பாராத அல்லது காலத்திற்கு முன்னான இழப்பை நாம் சந்திக்கும்போது, இயேசு ஜீவிப்பதால் அவருடைய ஜெயமான உயிர்த்தெழுதலில் களிகூர முடியும் என்ற இந்த உறுதியையே மையமாகக் கொண்டு நமது நம்பிக்கை இருப்பதாக.