இந்திய அரசியலமைப்பின் அதிகாரப்பூர்வ நகல் ஒரு சட்டப் புத்தகம் மட்டுமல்ல, இது கறுப்புத் தோலினால் கட்டப்பட்டு தங்கத்தால் பொறிக்கப்பட்ட கலைப் படைப்பும் கூட. பிரேம் பிஹாரி நரேன் ரைஸ்தா 15 வகையான மை முனைகளைப் பயன்படுத்தி கையால் எழுதப்பட்ட இந்த ஆவணம் கலை முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது அழகான எழுத்து கலை அரசியலமைப்பின் பக்கங்களுக்குக் காலத்திற்கும் நிலைக்கும் நேர்த்தியளிக்கிறது. சாந்திநிகேதனைச் சேர்ந்த கலைஞர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தின் சித்திரங்களால் அதின் பக்கங்களை அலங்கரித்து, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பழங்குடியினரின் கலைவடிவங்களைக் கொண்ட ஓவியங்கள் கொண்டு மேலும் அழகு சேர்க்கின்றனர். தற்போது ஹீலியம் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது, இது இந்தியக் குடியரசின் மிகவும் பொக்கிஷமான உடைமைகளில் ஒன்றாகும்.
குடிமக்களாகிய நமக்கு விலையேறப்பெற்ற அரசியலமைப்பைப் போலவே, கிறிஸ்துவின் விசுவாசிகளாகிய நமக்கு வேதாகமம் ஒரு பொக்கிஷமான உடைமையாகும். காரணம், இந்த வார்த்தைகள் சரியான பாதையில் நாம் நடக்க உதவுகின்றன (வ.9). இது ஒரு சுமை அல்ல, மாறாக மகிழ்ச்சியும் களிப்புமாகும் (வ.14-16). சங்கீதக்காரன் வேதாகமத்தை “திரளான” செல்வத்தோடு ஒப்பிடுகிறார் (வ.14) இது அவரது இதயத்தில் “பொக்கிஷமாக” இருப்பதாக அவர் கூறுகிறார், ஏனெனில் அது அவரது அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு மதிப்பைச் சேர்க்கிறது என்பதை அவர் அறிவார் (வ.11).
வேகமான நம் உலகில், தேவனுடைய வார்த்தையுடன் நேரத்தைச் செலவிடுவது முக்கியத்துவமற்ற ஒரு வேலையாகத் தோன்றுகிறது. ஆனால் அது ஒரு பொக்கிஷம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பெரும்பாலும் கடினமான முடிவுகளை நாம் எதிர்கொள்ளும்போது, தேவனுடைய வார்த்தையே நமக்கு வழிகாட்டுதலையும், ஆறுதலையும், கண்டிப்பையும் தருகிறது. பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலின் கீழ் நாம் தினமும் வேதவசனங்களைப் படித்து, தியானித்து, அதில் ஈடுபடும்போது, தேவனின் மாறாத வார்த்தை எவ்வளவு பொக்கிஷமாக இருக்கிறது என்பதை நாம் உண்மையில் புரிந்துகொள்வோம்.
– ரெபேக்கா விஜயன்
தேவனுடைய வார்த்தை உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு
மாற்றத்தை ஏற்படுத்தியது? வேதத்தின் பொக்கிஷத்தை
ஆராய உங்களுக்கு நேரிடும் சில தடைகள் யாவை?
அன்பு இயேசுவே, மாறாத மற்றும் உண்மையுள்ள உமது வார்த்தைக்காக உமக்கு நன்றி. அது கூறுவதைப் பொக்கிஷமாகக் கருதவும்,
அதற்குக் கீழ்ப்படியவும் எனக்குக் கற்று தாரும், அதனால் நான் உமது ஞானத்தால் வாழ்க்கையை நடத்த முடியும்.
