சிறுவனாக இருந்தபோது, ஜீவன் தனது தந்தையை மிகவும் கடுமையானவராகவும் தூரமாகவும் கண்டான். ஜீவன் உடல்நிலை சரியில்லாமல், குழந்தை மருத்துவரைப் பார்க்க நேரிட்டபோதும், அவனுடைய அப்பா, தொந்தரவாய் கருதி முணுமுணுத்தார். ஒருமுறை அவனுடைய பெற்றோர் சண்டையிடும்போது, அவனை கருக்கலைப்பு செய்ய தீர்மானித்ததை அவன் தகப்பன் சொல்ல கேட்டான். அவன் ஒதுக்கப்பட்ட குழந்தை என்னும் உணர்வு அவன் வளர்ந்த பிறகும் அவனை நெருக்கியது. ஜீவன் இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டபோது, தேவனை தகப்பனாய் அடையாளப்படுத்துவதற்கு அவனுக்கு கடினமாகவே இருந்தது. 

ஜீவனைப் போல, நம்முடைய மாம்ச தகப்பனை நாம் நேசிக்காவிடில், தேவனுடனான நம்முடைய உறவில் நமக்கு அவ்வப்போது சந்தேகங்கள் எழக்கூடும். நான் அவருக்கு பாரமாயிருக்கிறேனா? அவர் என்னைப் பற்றி கவலைப்படுகிறாரா? என்று ஒருவேளை நாம் ஆச்சரியப்படலாம். ஆனால் நமது பூமிக்குரிய தகப்பன்மார்கள் மௌனமாகவும் தூரமாகவும் இருந்திருக்கையில், பரலோகத் தகப்பனாகிய தேவன் நம் அருகில் வந்து, “நானும் உன்னைச் சிநேகித்தேன்” (ஏசாயா 43:4) என்று கூறுகிறார்.

ஏசாயா 43இல், தேவன் நம்முடைய சிருஷ்டிகராகவும் தந்தையாகவும் பேசுகிறார். அவருடைய குடும்பத்தின் அங்கத்தினராய் நீங்கள் வாழவேண்டும் என்று அவர் விரும்புவாரோ என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், அவர் தன்னுடைய ஜனங்களைப் பார்த்து என்ன சொல்கிறார் என்பதைக் கேளுங்கள்: “தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும்… கொண்டுவா என்பேன்.” எந்த விதத்தில் அவருடைய அழைப்பிற்கு நாம் தகுதியானவர்கள் என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், அவருடைய உறுதிமொழியைக் கேளுங்கள்: “நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்” (ஏசாயா 43:4). 

தேவன் நம்மை அதிகமாய் நேசித்தபடியினால், அவருடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக மரிக்க ஒப்புக்கொடுத்து, அவரை விசுவாசிக்கிற நாம் என்றென்றும் அவருடையவர்களாய் வாழ தயை செய்தார் (யோவான் 3:16). அவர் சொன்னதையும் அவர் நமக்காய் செய்ததையும் வைத்து, அவர் நம்மை விரும்பகிறார் என்று நாம் உறுதியாய் நம்பமுடியும்.