Archives: அக்டோபர் 2023

அழகான வடிவமைப்பு

ஒரு சர்வதேச ஆராய்ச்சிக் குழு, உழவாரன் என்னும் ஒரு குறிப்பிட்ட பறவையின் அசைவுகளைப் பிரதிபலிக்கும் ஃபிளாப்பிங்-விங் ட்ரோனை உருவாக்கியுள்ளது. இந்த உழவாரன் குருவிகள் மணிக்கு தொண்ணூறு மைல்கள் வரை பறக்கவும், வட்டமடிக்கவும், மூழ்கவும், விரைவாக திரும்பவும், திடீரென்று நிறுத்தவும் முடியும். இருப்பினும், ஆர்னிதோப்டர் ட்ரோன் என்னும் பறக்கும் எந்திரம் இன்னும் பறவையை விட தாழ்வானது. பறவைகளுக்கு “பல தசைகள் உள்ளன, அவை நம்பமுடியாத வேகத்தில் பறக்கவும், இறக்கைகளை மடக்கவும், திருப்பவும், இறகு துளைகளைத் திறக்கவும் மற்றும் ஆற்றலைச் சேமிக்கவும் உதவுகின்றன” என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார். அவரது ஆய்வின் முடிவில், “பறக்கும் உயிரின விமானத்தின் 10 சதவிகிதத்தை” மட்டுமே எங்களால் கண்டறிய முடிந்தது என்று அவர் ஒப்புக்கொள்கிறார். 

இந்த உலகத்தில் வாழும் உயிரினங்களுக்கு தேவன் அனைத்து சிறப்பியல்புகளையும் அருளியிருக்கிறார். அவற்றை தன்மைகளை ஆய்வுசெய்து அறிந்துகொள்வது நம்முடைய ஞானத்திற்கு பலம் சேர்க்கும். வாழ்க்கைக்கு தேவையான வாழ்வாதாரங்களை சேகரிக்கும் எறும்பு, தங்கள் வீட்டை கன்மலையில் தோண்டிவைக்கும் குழிமுசல்கள், கூட்டமாய் அணிவகுத்து வரும் வெட்டுக்கிளிகள் (நீதிமொழிகள் 30:25-27) ஆகியவைகள் நமக்கு விலைமதிப்பற்ற பாடங்களை கற்பிக்கிறது. 

தேவன் தன்னுடைய ஞானத்தினாலே பூமியை சிருஷ்டித்தார் என்று வேதம் சொல்லுகிறது (எரேமியா 10:12), அவருடைய அன்றாட சிருஷ்டிப்பின் இறுதியில் அவர் தன்னுடைய படைப்பை நல்லது” என்று கண்டார் (ஆதியாகமம் 1:4,10,12,18,21,25,31). “வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும்” (வச. 20) சிருஷ்டித்த அதே தேவன், அவற்றை புரிந்துகொள்வதற்கான ஞானத்தையும் நமக்கு அருளியிருக்கிறார். இன்று, அவருடைய இந்த அழகான இயற்கை படைப்பிலிருந்து நாம் கற்றுக்கொள்ள பிரயாசப்படுவோம்.