“உனக்கு மிகவும் பிடித்த அந்த துறையின் அளவை குறைக்கவேண்டுமென்றதால் இன்னும் வருத்தமா?” எவிலினின் மேனேஜர் அவளிடம் கேட்டார். “இல்லை” என்று வாயை மூடிக்கொண்டாள். அதைப்பற்றி அவர் கேலிசெய்து கொண்டேயிருந்ததால், அவள் வருந்தினாள். அவள் பல திறமையான நபர்களை கம்பெனியில் சேர்த்து, நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு உதவ முயன்றாள். ஆனால் இடப்பற்றாக்குறை அம்முயற்சியை முடமாக்கிவிட்டது. எவிலின் கண்ணீரோடு போராடினாள், ஆனாலும் தன் மேலாளர் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்க தீர்மானித்தாள். அவள் நம்பியிருந்த சில மாற்றங்களை அவளால் கொண்டுவர முடியாமல் போயிருக்கலாம், ஆனால் அவளுடைய வேலையை தன்னால் இயன்றமட்டும் சிறப்பாக அவளால் செய்ய முடிந்தது.
அப்போஸ்தலன் பேதுரு தன் முதல் நிருபத்தில், முதலாம் நூற்றாண்டு விசுவாசிகளுக்கு, “மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர் நிமித்தம் கீழ்ப்படியுங்கள்” (1 பேதுரு 2:13) என்று வலியுறுத்துகிறார். கடினமான பணிச்சூழலில் உத்தமமாயிருப்பது கடினம். ஆனால் நாம் ஏன் தொடர்ந்து நன்மை செய்ய வேண்டுமென்ற காரணத்தை, “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி” (வச. 12) பேதுரு விவரிக்கிறார். கூடுதலாக, நம்மை காணும் மற்ற விசுவாசிகளுக்கு பக்தியான எடுத்துக்காட்டாக நம்மை காட்டிக்கொள்ளலாம்.
நம்முடைய வேலைக்கு துரோகம் இழைக்கும் பணிச்சூழலில் நாமிருந்தால், கூடுமானால் வேலையை விட்டுவிடுவதே சிறந்தது (1 கொரிந்தியர் 7:21). “அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்” (1 பேதுரு 2:20) என்பதை நினைவுகூர்ந்து, ஆவியானவரின் துணையோடு நம் வேலையில் நன்மை செய்வதை தொடருவோமாக. நாம் அதிகாரத்திற்கு கீழ்ப்படிகையில், பிறர் தேவனை பின்பற்றவும், அவரை மகிமைப்படுத்தவும் காரணமாயிருக்க நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.
மற்றொருவரின் அதிகாரத்தின் கீழ் நீங்கள் இருக்கையில், கடினமான சூழ்நிலையில் பொதுவாக நீங்கள் என்ன செய்வீர்கள்? இச்சூழலில் தேவன் உங்கள் மூலமாக எவ்விதம் கிரியை நடப்பிப்பார்?
பரலோகத் தகப்பனே, நான் எதிர்கொள்ளும் கடினமான சூழலைப் பொருட்படுத்தாமல், அதிகாரத்தில் உள்ளவர்களுக்குத் தக்க நடக்கையின் மூலம் உம்மை தொடர்ந்து கனப்படுத்த எனக்கு உதவும். உம்மை மகிமைப்படுத்தும் வழிமுறைகளில் ஒவ்வொரு நாளும் வாழ எனக்கு உதவும்.