நேரத்தை சரி செய்யவும்
எங்கள் வீட்டின் உட்புறத்திற்கு ஒரு சுத்தமான புதிய தோற்றத்தைக் கொடுக்கவேண்டிய நேரம் வந்தது. வண்ணம் பூசுவதற்கு நான் ஒரு அறையைத் தயார் செய்துக்கொண்டிருந்தபோது, நம்முடைய மாநில அரசாங்கம் கோவிட்-19 தொற்று நோய்க் காரணமாக பல வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் நான் கடைக்கு விரைந்துச் சென்று எனக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டேன். சரியான பொருட்கள் இல்லாவிட்டால் மறுவடிவமைக்க முடியாது.
பவுல், எபேசியர் 4ம் அதிகாரத்தை எழுதும்போது ஒரு மறுவடிமைக்கும் திட்டம் அவருக்கு மனதில் இருந்தது. ஆனால் அவர் எந்த மாற்றங்களைக் குறித்துப் பேசினாரோ, அவை மேலோட்டமான மாற்றங்களுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தது. இயேசுவை இரட்சகராக நம்புவது நம்மை புது சிருஷ்டியாக மாற்றினாலும், பரிசுத்த ஆவியானவர் நம்மில் சில காரியங்களைத் தொடர்ந்து செய்யவேண்டியிருக்கிறது. நம்மை “மெய்யான நீதியிலும், பரிசுத்தத்திலும்” (எபேசியர் 4:24) நடத்த அவருக்கு சமயமும் செயல்பாடும் தேவைப்படுகிறது.
பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் நமக்குள் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தி நம்முடைய சொல்லிலும் செயலிலும் இயேசுவை பிரதிபலிக்கச் செய்கிறது. பொய்க்கு பதிலாக “சத்தியத்தை” (வச. 25) பேச உதவி செய்கிறார். கோபத்தினால் நாம் செய்யும் பாவங்களைத் தவிர்க்க உதவி செய்கிறார் (வச. 26). “மற்றவர்களுக்குப் பிரயோஜனம் உண்டாகும்படி பேச” அவர் நம்மை வழிநடத்துகிறார் (வச. 29). பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்படுத்தப்படும் இப்படிப்பட்ட செயல்கள் நம்முடைய உள்ளான மனிதனில் ஏற்படும் மாற்றத்தின் ஒரு பகுதி. இவை கருணை, இரக்கம் மற்றும் மன்னிப்பு (வச. 32) போன்றவைகளில் வெளிப்படும். இயேசுவைப்போல நடக்கவும், நம்முடைய பரலோகத் தகப்பனின் இருதயத்தைப் பிரதிபலிக்கவும், ஆவியானவர் நமக்கு உதவி செய்கிறார் (வச. 25; 5:1).