மீண்டும் ஆரம்பித்தல்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முடிவுற்று டிசம்பர் மாதக் கடைசியை அடைந்தபோது, என்னுடைய எண்ணங்கள் வரப்போகும் ஆண்டிற்கு நேராகத் திரும்பின. என்னுடைய குழந்தைகள் பள்ளி விடுமுறையில் இருந்ததால், எங்களுடைய அன்றாடக வேலைகள் சற்று நிதானமாகச் சென்றபோது, நான் கடந்த ஆண்டு என்னை எங்கு கொண்டுவந்துள்ளது எனவும், அடுத்த ஆண்டு என்னை எங்கு கொண்டு, செல்லுமென்ற நம்பிக்கையைக் குறித்தும் சிந்திக்கலானேன். நான் செய்த தவறுகளை எண்ணிய போது சிலவேளைகளில் அந்நினைவுகள் வேதனையையும், மன வருத்தத்தையும் கொடுத்தன. ஆனாலும் புதிய ஆண்டின் துவக்கத்தின் எதிர்நோக்கல் என்னுள்ளத்தை நம்பிக்கையாலும் எதிர்பார்ப்புகளாலும் நிறைத்தது. பழைய ஆண்டு எவ்வாறு இருந்தாலும் இப்பொழுது எனக்கு ஒரு புதிய துவக்கத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக எண்ணினேன்.
என்னுடைய இந்த புதிய ஆரம்பத்தின் எதிர்பார்ப்பு எழுபது ஆண்டுகள் பாபிலோனில் சிறைப்பட்டிருந்த இஸ்ரவேலரை பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் யூதேயாவிலுள்ள தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பிச் செல்லுமாறு விடுவித்தபோது அவர்களுக்கிருந்த நம்பிக்கையை ஒப்பிடும்போது அற்பமானதாக உணர்ந்தேன். முந்திய பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இஸ்ரவேலரை அவர்களின் நாட்டை விட்டு வெளியேற்றினான். ஆனால் கர்த்தர் கோரேஸின் ஆவியை ஏவினதினால் அவன் இஸ்ரவேலரை எருசலேமிற்குப் போய் தேவனுடைய ஆலயத்தைக் கட்டும்படி அவர்களை விடுவித்தான் (எஸ்றா 1:2-3). மேலும், நேபுகாத்நேச்சார் தேவனுடைய ஆலயத்திலிருந்து எடுத்துவந்த பொக்கிஷங்களையும் கோரேஸ் திருப்பிக்கொடுத்தான். தங்கள் பாவத்தின் விளைவாக நீண்ட காலம் பாபிலோனில் கஷ்டங்களைச் சகித்தபின்பு தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள், தேவன் அவர்களுக்கு கொடுத்த தேசத்தில் ஒரு புதிய வாழ்வைத் துவங்கினார்கள்.
நமது கடந்த காலம் எவ்வாறிருந்தாலும் பொருட்படுத்தாமல் நாம் நமது பாவங்களை அறிக்கை செய்தால் தேவன் நம்மை மன்னித்து நமக்கு ஒரு புது துவக்கத்தைத் தருகிறார். இது நம்பிக்கைக்கு எத்தனை பெரிய தூண்டுதல்!