தேவனிடம் சில கேள்விகள்
நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென தேவன் ஓர் செய்தியுடன் தோன்றினால் என்ன செய்வீர்கள்? இஸ்ரவேலனாகிய கிதியோனின் வாழ்வில் அப்படி ஓர் சம்பவம் நடந்தது. “கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: ‘பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்’ என்றார்.” எதுவும் பேசாமல் தலையசைத்துவிட்டு சும்மா இருக்க கிதியோனால் முடியவில்லை. தேவன் ஏன் தம் ஜனத்தை கைவிட்டுவிட்டார் என்பதற்கான பதிலை அறிந்துகொள்ள விரும்பினான். ஆகவே, “ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்?” என்று கேட்டான் (நியா. 6:12-13).
தேவன் அந்த கேள்விக்கான பதிலைக் கூறவில்லை. ஏழு வருடங்களாக, எதிரியின் தாக்குதல்கள், குகைக்குள் வாசம்செய்யும் அனுபவங்கள், பசி பட்டினி போன்றவற்றை சந்தித்து வந்த கிதியோனிடம் அவர் இடைபட்டதற்கான நோக்கத்தை தேவன் தெரிவிக்கவில்லை. இஸ்ரவேலின் பாவங்களைக் குறித்து தேவன் பேசியிருக்கலாம், ஆனால் அவ்வாறு செய்யாமல் எதிர்காலத்தை குறித்த நம்பிக்கையை மாத்திரம் தேவன் கிதியோனிடம் தந்தார். “உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்... நான் உன்னோடேகூட இருப்பேன்”
(வச. 14,16) என்று சொல்லி கிதியோனை உற்சாகப்படுத்தினார்.
உங்களுடைய வாழ்வில் துன்பங்களைச் சந்திக்க தேவன் ஏன் அனுமதிக்கிறார் என்று எண்ணியுள்ளீர்களா? அந்த கேள்விக்கான பதிலை இன்றைக்கு அவர் தராமல் போகலாம், ஆனால் உங்கள் அருகில் வந்து தமது பிரசன்னத்தால் உங்களை நிறைத்து, சோர்ந்து போகும் நாளில் அவரது பலத்தினால் உங்களை தாங்குவார் என்ற உறுதியை உங்களுக்கு தருகிறார். தேவன் நிச்சயமாகவே அவனோடிருந்து அவனுக்கு உதவிசெய்வார் என்று கிதியோன் நம்பியவுடன், அவருக்காக ஓர் பலிபீடத்தை கட்டி “யெகோவா ஷாலோம்” (சமாதானத்தின் தேவன் – வச. 24) என்று அதற்கு பெயரிட்டான்.
தம்மைப் பின்பற்றுபவர்களை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை என்று வாக்குறுதியை அளித்த தேவன், நாம் என்ன செய்தாலும் எங்கு சென்றாலும், எப்பொழுதும் நம்மோடு இருந்து நம் கூடவே வருகிறார் என்பதை நினைக்கும்பொழுது சமாதானத்தினால் மனம் நிறைகின்றதே.