நாங்கள் ஒரு புதிய வீட்டிற்கு குடியேறி வந்தோம். எங்களது வீட்டின் அருகில் கூடுகட்டி வாழ்ந்த வாத்துக்களின் அழகை மிகவும் ரசித்தேன். ஒன்றை ஒன்று அவைகள் கவனித்துக் கொள்ளும் விதமும், தண்ணீரில் சரியான நேர்கோட்டில் நீந்திச் செல்லும் முறையும், ஆகாயத்தில் மிக அழகாக ஏ வடிவத்தில் பறந்து செல்லும் முறையையும் நான் மிகவும் ரசித்தேன். பெரிய வாத்துக்கள் அவைகளின் குஞ்சுகளைப் பேணி வளர்க்கும் முறையைக் கவனிப்பதும் மிக மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தது.
பின்பு கோடை காலம் வந்தது. சிறகுள்ள எனது சிநேகிதர்களைப் பற்றி, பிடித்தமில்லாத சில உண்மைகளை அறிந்து கொண்டேன். புல்லை உண்பது வாத்துக்களுக்கு மிகவும் பிடிக்கும். அவ்வாறு அவைகள் புல்லைத்தின்பதால், வீட்டிலுள்ள புல்வெளியின் அழகு பாதிக்கப்படுகிறது என்பது பற்றி அவைகளுக்கு கவலை இல்லை. புல்வெளியில் அவைகள் இட்டுச் செல்லும் எச்சத்தினால், புல்வெளியில் நடைபயில்வது மிகவும் அருவருப்பாக இருக்கும்.
நட்பிணக்கமற்ற மக்களிடம் நான் பழகும் பொழுது இந்த வாத்துகளைப் பற்றி எண்ணுகிறேன். எனது வாழ்க்கையிலிருந்து அவர்களை விரட்டிவிட சில சமயங்களில் விரும்புகிறேன். மிகவும் நட்பிணக்கமற்ற மக்களிடம் நெருங்கிப் பழகினால், அவர்களிடம் கூட ரசிக்கத்தக்க சில குணங்கள் உண்டென்றும், அவர்கள் பிறருக்கு அளிக்கும் வேதனைகள், அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளின் பிரதிபலிப்பே என்றும் தேவன் எனக்கு நினைப்பூட்டுகிறார்.
“கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.” (ரோமர் 12:18) என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். ஆகவே மக்களின் “கடினமான” பகுதியைப் பார்க்கும் பொழுது நான் பொறுமையோடு இருக்க உதவும்படி தேவனிடம் கேட்கிறேன். இது எப்பொழுதுமே மகிழ்ச்சியான விளைவை உண்டாக்காது. ஆனால் தேவன் எப்படியாக இந்த உறவுகளை மீட்டெடுக்கிறார் என்பது ஆச்சரியமானது.
நட்பிணக்கமற்ற மக்களை நாம் சந்திக்க நேரிடும் பொழுது, தேவனுடைய கிருபையையால் அவருடைய கண்கள் மூலம் அவர்களைப் பார்க்கவும், அவர்களை நேசிக்கவும் இயலும்.