C.S. லூயிஸ், ஸ்குரு டேப் கடிதங்கள் என்ற அவரது புத்தகத்தில் ஒரு மூத்த பிசாசும், ஒரு இளைய பிசாசும் ஒரு கிறிஸ்துவனை விசுவாசத்திலிருந்து விழவைக்க எந்தமுறையில் சோதிக்கலாம் என்று பேசிக்கொண்ட கற்பனை உரையாடலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அந்த இரு பிசாசுகளும் அந்த விசுவாசிக்கு தேவன்மேல் இருந்த விசுவாசத்தை அழித்துவிட விரும்பின. “ஏமாற்றப்பட்டு விடாதே. இந்த அண்டசராசரத்தில் தேவனைப் பற்றிய அனைத்து அடையாளங்களும் மறைந்து விட்டதுபோல் காணப்பட்டாலும், தேவன் அவனை ஏன் கைவிட்டுவிட்டார் என்ற கேள்வியை தனக்குள்ளே கேட்டுக்கொண்டாலும், தேவனுக்கு கீழ்ப்படிகிறவனாக அவன் இருந்தால் நாம் எடுக்கும் முயற்சிகள் பயனற்றதாகிவிடும்” என்று மூத்த பிசாசு கூறியது.
கைவிடப்பட்டு விட்டோம் என்று உணர்ந்த நிலைமையிலும், விசுவாசத்துடன் செயல்பட்ட அநேக மக்களைப் பற்றி வேதாகமம் கூறுகிறது. ஆபிராமிற்கு ஒரு புத்திரனை அருளுவேன் என்று தேவன் அவனிடம் கூறின வாக்குத்தத்தம் நிறைவேறவில்லையே என்று அவன் எண்ணினான். (ஆதி 15:2-3) சங்கீதக்காரன் அவனுடைய உபத்திரவங்கள் மத்தியில் தேவன் அவனை மறந்துவிட்டதாக எண்ணினான். (சங் 10:1) தேவன் அவனை கொன்றுவிடுவாரோ என்று எண்ணும் அளவிற்கு யோபின் துன்பங்கள் மிக அதிகமாக இருந்தன. (யோபு 13:15) இயேசு சிலுவையிலிருந்து “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கதறினார். (மத்தேயு 27:46) ஆயினும் மேற்கூறிய அனைத்து நிகழ்ச்சிகளிலும் தேவன் உண்மையுள்ளவராகவே இருந்தார் (ஆதி 21:1-7, சங் 10:16-18, யோபு 38:1-42 : 17, மத்தேயு 28:9-20)
நீங்கள் தேவனால் கைவிடப்பட்டுவிட்டீர்கள் என்று நீங்கள் எண்ணும்படி சாத்தான் சோதித்தாலும், தேவன் உங்கள் அருகிலேயே இருக்கிறார். அவருக்கு சொந்தமானவர்களை தேவன் ஒருக்காலும் கைவிடுவதில்லை. “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரேயர் 13:5) என்று தேவன் சொல்லிருக்கிறார். ஆகவே நாம் “கர்த்தர் எனக்குச் சகாயர், பயப்படேன்” (வச. 6) என்று தைரியமாக கூறலாம்.