மத்தேயு 2:1-2, 9-12
1. ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, 2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். 9. ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. 10. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். 11. அவர்கள் அந்த வீட்டுக்குள்பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். 12. பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். மத்தேயு 2:10
எங்கள் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் ஈவ் ஆராதனையில் கலந்துகொள்வதை நானும் என் கணவரும் எப்போதும் விரும்புவோம். எங்கள் திருமணத்தின் ஆரம்ப ஆண்டுகளில், எங்கள் சிறிய நகரத்தின் தெருக்களில் மெதுவாக நடந்து சென்று, நட்சத்திரங்களின் வடிவத்தில் உயரமான கம்பங்களிலிருந்து கட்டப்பட்ட ஒளிரும் விளக்குகளின் காட்சியைப் பார்த்து ரசிப்பது வழக்கம். இயேசுவின் அற்புதமான பிறப்பைப் பற்றி நாங்கள் பேசினோம். அதே நேரத்தில் நகரத்தில் உள்ள பல மக்களுடன் சேர்ந்து, கீழே உள்ள பள்ளத்தாக்கிலிருந்து பிரகாசமான நட்சத்திரங்களைப் பார்த்து மகிழ்ந்தோம்.
அது நமது இரட்சகரின் பிறப்பை நினைவூட்டுகிறது. “கிழக்கிலிருந்து” வந்த சாஸ்திரிகள் “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?” என்று தேடி எருசலேமுக்கு வந்ததாக வேதாகமம் கூறுகிறது (மத்தேயு 2:1-2). அவர்கள் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள், “கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தை” கண்டார்கள் (வசனம் 2). அவர்களின் பயணம் அவர்களை எருசலேமிலிருந்து பெத்லகேமுக்கு அழைத்துச் சென்றது. “நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது” (வச. 9). அங்கே, அவர்கள் “சாஷ்டாங்கமாய் விழுந்து” பணிந்துகொண்டனர் (வச. 11).
கிறிஸ்துவே நம் வாழ்வில் ஒளியின் ஆதாரமாகவும் (நம்மை வழிநடத்துபவராகவும்) வானத்தில் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களைப் படைத்தவராகவும் (கொலோசெயர் 1:15-16) இருக்கிறார். அவருடைய நட்சத்திரத்தைக் கண்டபோது “ஆனந்த சந்தோஷமடைந்த” சாஸ்திரிகளைப் போல (மத்தேயு 2:10), பரலோகத்திலிருந்து இறங்கி நம்மிடையே வசிக்க வந்த இரட்சகராக அவரை அறிவதில் நமக்கும் மிகுந்த சந்தோஷமிருக்கிறது. “அவருடைய மகிமையைக் கண்டோம்” (யோவான் 1:14)!
இயேசு உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு ஒளியைக் கொண்டு வந்தார்? இன்று நீங்கள் அதை யாருடன் பகிர்ந்து கொள்ளலாம்?
இயேசுவே, என் வாழ்க்கையின் ஒளியாக இருப்பதற்காய் உமக்கு நன்றி.