மத்தேயு 2:13-15

13. அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்;  ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். 14. அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய், 15. ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன். மத்தேயு 2:15

இங்கிலாந்தில் சமீபத்திய குளிர்காலம் மிகவும் கடினமாக இருந்தன. அதிகரித்து வரும் செலவுகள், வயதானவர்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை வெப்பமடையச் செய்வதா அல்லது உணவை மேஜையின் மீது வைப்பதா என்பதைத் தேர்ந்தெடுக்கும் நிலையை எதிர்கொள்கின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஆயிரக்கணக்கான தேவாலயங்கள் “தி வார்ம் வெல்கம்” (அன்பான வரவேற்பு) பிரச்சாரத்தில் இணைந்துள்ளன. தேவையில் இருப்பவர்களுக்கு திருச்சபையில் சூடான தட்பவெட்பத்தில் தங்குவதற்கு இடமளிக்கின்றனர்.

“கிறிஸ்துமஸ் கதையில், இயேசு ஒரு பழமையான தங்குமிடத்தில் பிறந்து பின்னர் ஒரு அகதியாக எகிப்துக்கு கொண்டுபோகப்பட்டார். அவர் ஏழ்மையில் வாடிய மக்கள் மத்தியில் தன் ஊழியத்தை உற்சாகமாய் செய்தார்” என்று பிரச்சாரத்தின் நிறுவனர் விளக்குகிறார். தேவையில் உள்ளவர்களுக்கு இந்த அன்பான வரவேற்பைக் கொடுப்பதின் மூலம் யுனைட்;;டட் கிங்டம் தேசங்களில் உள்ள திருச்சபைகள் இயேசுவின் இந்த சம்பவத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

இந்தப் பிரச்சாரமானது இயேசுவின் தனிப்பட்ட பாடுகளின் அனுபவத்திலும், பாடனுபவிப்பவர்கள் மீதான அவரது அன்பிலும் வேரூன்றியது. இயேசு இந்த உலகத்தில் குழந்தையாய் அவதரித்த ஆரம்ப நாட்களில், அவரது பூமிக்குரிய தந்தையிடம் தேவன், “ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து… எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு” என்றார் (மத்தேயு 2:13). சிறிது காலம் கழித்து தான் இயேசு இஸ்ரவேலுக்குத் திரும்ப முடிந்தது. இதன் மூலம் “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” (வச. 15) என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறியது. இயேசு பாடனுபவிப்பார் என்பது ஆரம்பகாலத்திலிருந்தே நம்பப்பட்டிருந்த ஒரு வெளிப்பாடு.

கிறிஸ்துமஸ் கதையில் உள்ள பாடுகள் மற்றும் இழப்புகள், ஏழ்மையிலிருப்பது என்னவென்றும் தேவையிலிருப்பது என்னவென்றும் நமது இரட்சகருக்கு தெரிந்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள். நாம் இதேபோல் துன்பப்படும்போது, அவரிடமிருந்து எப்போதும் “அன்பான வரவேற்பை” பெறுவோம் என்பதில் உறுதியாக இருக்கலாம்.

இயேசு பாடுகளைப் புரிந்துகொண்டார் என்பதை அறிந்துகொள்வது உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது? இந்த பண்டிகை நாட்களில் மற்றவர்களுக்கு அவரது “அன்பான வரவேற்பை” நீங்கள் எவ்வாறு கொடுக்க முடியும்?

அன்பான இயேசுவே, வாழ்க்கை சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு மிகவும் கடினமாக இருக்கும்போது, நீர் என்னை அறிந்திருக்கிறீர் என்னும் சத்தியத்தை தெரிந்துகொள்வது எனக்கு ஆறுதலாயிருக்கிறது. எல்லாவற்றையும் ஜெபத்தில் உம்மிடத்திற்கு கொண்டு வர நான் எப்போதும் வரவேற்கப்படுகிறேன் என்பதற்காய் உமக்கு நன்றி.