மேசியாவின் கடைசி வார்த்தைகள் (Messiah's Last Words) | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

“அவைகள் நீண்ட காலம் பூத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” எங்கள் தோட்டத்தில் பூத்திருந்த இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை பூக்களைப் பார்த்து என் மனைவி ஏக்கத்துடன் சொன்னாள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவள் நட்ட அந்த செடிகளில் பூத்திருந்த பூக்களின் நறுமணத்தை நுகர அவள் குனிந்தாள். அவை என் அம்மாவிடமிருந்து கிடைத்த பரிசு. அவர்கள் இந்த உலகத்தில் நீண்ட காலம் வாழப் போவதில்லை என்பதை அறிந்து, தனக்கு பின்பாக உயிர்வாழ வேண்டும் என்று இந்த பூச்செடிகளை நட்டார்கள்.

விரைவிலேயே எங்கள் மூன்று வயது பேத்தி தோட்டத்தின் நடைபாதையில் துள்ளி நடந்துவந்தாள். அவள், எங்கள் மகனின் சிநேகிதனாகிய காலேபிடம் ஒரு சிறிய கல்லை பரிசாகக் கொடுத்தாள். அவன் தன் பதினேழு வயது ஞானத்துடன் அதை வாங்கி, தன் பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு, “இந்த கல் வெகுநாள் நிலைத்திருக்கும், ஆனால் பூக்கள் சீக்கிரம் வாடிவிடும்” என்று அவளிடம் சொன்னான். அதைக் கேட்ட எங்கள் பேத்தி, ஒரு வெட்கப் புன்னகையுடன் தோட்டத்தின் மற்ற அழகை ரசிக்க கடந்து சென்றாள். வாழ்க்கையின் சொற்பத் தன்மை, அழகு, மற்றும் வாக்குறுதி ஆகிய அனைத்தையும் ஒரே நொடியில் அன்று நாங்கள் அனுபவிக்க நேர்ந்தது.

வெகு காலத்திற்கு முன்பு மேல் வீட்டறையில் நடந்த இன்னொரு சம்பவம், வாழ்க்கையில் வேதனை, அன்பு மற்றும் நம்பிக்கை ஆகிய அனைத்து உணர்வுகளையும் சில மணித்துளிகளில் பிரதிபலித்தது. “இயேசு இவ்வுலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து,” (யோவான் 13:1), என்று திருவிருந்து பந்தியை சீஷனாகிய யோவான் விவரிக்கிறார். அந்த முக்கியமான தருணத்தில், மெய்யான தலைமைத்துவம் என்றால் என்ன என்பதை இயேசு காண்பிக்கிறார் (வச. 3-17). யூதாஸினால் அவர் விரைவில் காட்டிக்கொடுக்கப்படுவதை அவர் முன்னமே அறிந்து (வச. 18-30) எச்சரிக்கிறார். பேதுருவினால் மறுதலிக்கப்படுவதையும் முன்னறிவிக்கிறார் (வச. 38).

அவர் சீக்கிரம் தன்னுடைய சீஷர்களை விட்டு கடந்து செல்லவிருக்கிறார் என்பதையும் முன்கூட்டியே அறிந்து, “நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன், உங்களிடத்தில் வருவேன்” (14:18) என்று வாக்களிக்கிறார். மேலும் அவர்களுக்கு “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” (வச. 16-17) என்றும் வாக்களிக்கிறார்.

தம்முடைய கொடூரமான மரணத்தை அவர் எதிர்பார்த்திருந்தபோதும், இயேசு மற்றவர்களுக்கு ஆறுதல் அளித்தார். “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (14:27).

சீக்கிரத்தில் இயேசுவும் சீஷர்களும் மேல்வீட்டறையை விட்டு வெளியேறி ஒலிவ மலைக்குச் செல்லப்போகின்றனர். மற்ற இரவைப் போல அதுவும் ஒரு அழகான இரவாய் இருந்திருக்கக்கூடும். ஆனால் அந்த இரவு அப்படியில்லை. கெத்சமெனே தோட்டத்தில் இயேசு சீஷர்களை நோக்கி, “அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது” (மத்தேயு 26:38) என்று கூறுகிறார். மேலும் அவர், “என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்” (வச. 39) என்றும் ஜெபிக்கிறார்.

இங்கே இயேசுவின் மனுஷீகத்தின் முழு வீரியத்தை நாம் பார்க்கமுடியும். ஆகிலும், “என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று பிதாவின் சித்தத்திற்கு தன்னை முற்றிலும் அர்ப்பணிப்பதை நம்மால் காணக்கூடும்.

அந்தத் தோட்டத்தில் கைது செய்யப்பட்ட இயேசு இரண்டு போலிச் சோதனைகளையும், வரலாற்றிலேயே மிகவும் அநீதியான தீர்ப்பையும் சகித்தார். உலகத்தைப் படைத்தவர், எருசலேமின் மலையொன்றில், அவருடைய படைப்புகளினாலேயே சிலுவையில் அறையப்பட்டார். அந்த உபத்திரவத்தின் ஸ்தலத்தில் இருந்தே இயேசு இந்த “ஏழு கடைசி வார்த்தைகளை” பேசுகிறார்.

பின்வரும் கட்டுரைகளில் இந்த ஏழு வார்த்தைகளில் ஒவ்வொன்றின் பிரதிபலிப்புகளையும் நீங்கள் காணலாம். இந்த ஆவிக்குரிய கட்டுரைகளைப் படிக்கும்போது, அவற்றின் முக்கியத்துவத்தை நீங்கள் சிந்தித்து, என்றென்றும் பூக்கும் நம்பிக்கையின் வாக்குறுதியிலிருந்து ஊக்கத்தைப் பெறவேண்டும் என்று நாங்கள் ஜெபித்துக்கொள்கிறோம்.

வாழ்க்கையானது வலியையும் மரணத்தையும் கொடுப்பது தவிர்க்கமுடியாதது. நாம் நேசிக்கிறவர்களிடமிருந்து நாம் வெகுவிரைவில் விடைபெறவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தன் மரண தருவாயில் தாவீது ராஜா, “நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன்” (1 இராஜாக்கள் 2:2) என்று கவிதையாக விவரிக்கிறார்.

கோடை காலத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் போன்று நாம் வாழும் இந்த வாழ்க்கையும் அபரிவிதமான அழகைக் கொண்டுள்ளது. இயேசுவினிமித்தம் எதிர்கால மகிழ்ச்சியை நாம் இப்போதே அனுபவிக்கிறோம்.

என்னுடைய மனைவிக்கு அவருடைய அம்மா பரிசளித்த இந்த பூக்களானது, உலகத்தை அஸ்திபாரப்படுத்தும்போது, நம்முடைய சிருஷ்டிகராகிய தேவன் அவற்றிற்கு கொடுத்த விதிகளின் நிமித்தம் இனப்பெருக்கம்செய்து பெருகுகிறது. அம்மாவின் பெருமை அவளுடைய பிள்ளைகள் மூலமாகவும், பேரப்பிள்ளைகளின் மூலமாகவும் வளர்ந்து பெருகுகிறது. ஆனால் அதைவிட அற்புதமாக, தேவனை நேசிப்பவர்களுடனும், அவருடைய குமாரனை நம்பி அவரைப் பின்தொடர விரும்புகிறவர்களுடனும் என்றென்றும் மீண்டும் இணைவதை நாம் எதிர்பார்க்கிறோம்.

பூக்கள் கடைசியில் இறக்கின்றன. நமக்கு கிடைக்கும் பரிசுகள் சிறியதோ அல்லது பெரியதோ, அவற்றையும் நாம் மறந்துபோகக்கூடும். ஆனால் இந்த நாட்களில், என்னுடைய பேத்தி கொடுத்த கல் பரிசு போன்ற சிறிய மகிழ்ச்சிகள் வேறொரு தோட்டத்தில் இருந்த பெரிய கல்லை எனக்கு நினைவூட்டுகிறது. “வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக்கண்டாள்” (யோவான் 20:1). இயேசு தம் சீஷர்களிடம் கூறியதை நாம் நினைவுகூர்கிறோம்: “நான் பிழைக்கிறபடியினால் நீங்கள் பிழைப்பீர்கள்” (14:19). மரணத்தை வென்றவர் தனது கடைசி ஏழு வார்த்தைகளில் நமக்கு என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

~டிம் கஸ்டாப்சன், ஆசிரியர், நமதுஅனுதினமன்னா

 

இன்றைய வேதப்பகுதி | லூக்கா 23:26-34

26. அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர்பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள். 27. திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள். 28. இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். 29. இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும். 30. அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள். 31. பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார். 32. குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள். 33. கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். 34. அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.

ஜனவரி 23, 1999 அன்று, கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு இளம் மகன்கள் பிலிப் மற்றும் திமோத்தி ஆகியோர் தங்கள் ஜீப்பில் தூங்கிக் கொண்டிருந்தபோது, எரித்து கொலைசெய்யப்பட்டனர். இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஏழைகள் மத்தியில் அவர்களின் அர்ப்பணிப்பான சேவை, அதுவரை வெளி உலகிற்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை.

இப்படிப்பட்ட சோகத்தின் மத்தியில், அவரது மனைவி கிளாடிஸ் மற்றும் மகள் எஸ்தர், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். அவர்கள் வெறுப்பை வெளிப்படுத்தாமல், மன்னிப்பை தெரிந்துகொண்டனர். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வழக்கு விசாரணை முடிவடைந்தபோது, கிளாடிஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில்நான் கொலையாளிகளை மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது எனக்கு எந்தக் கசப்பும் இல்லைஆண்டவராகிய கிறிஸ்து என்னை மன்னித்திருக்கிறார். மேலும் அவரைப் பின்பற்றுபவர்களும் அவ்வாறே செய்வார்கள் என்று அவர் எதிர்பார்க்கிறார்.” இந்த குற்றவாளிகளை மன்னிக்கும் தைரியத்தையும் வலிமையையும் கிளாடிஸ் மற்றும் எஸ்தர் செயல்படுத்தியது ஆச்சரியமாக இருந்தாலும், நம்மை புண்படுத்துபவர்களை அல்லது தவறாக நடத்துபவர்களை மன்னிப்பதற்கான கிருபையை நாம் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதற்கான சிறந்த உதாரணத்தை இயேசு நமக்கு விட்டுச்சென்றார் என்பதை நாம் அறிவோம்.

நம்முடைய எதிரிகளை நேசிக்கவும், நம்மைத் துன்புறுத்துபவர்களுக்காக ஜெபிப்பதையும் வெறும் போதனையாய் மட்டும் அவர் செய்யவில்லை (மத்தேயு 5:43-48). அவர் சிலுவையில் தீவிர மன்னிப்பை முன்மாதிரியாக பிரதிபலித்தார். கிறிஸ்து நமக்காக அடிக்கப்பட்டு, நிந்திக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டார் (ரோமர் 5:10). ஆனால் இயேசு தம்மைத் துன்புறுத்தியவர்களை சபிப்பதற்கு பதிலாக, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களேஎன்று மன்னிப்பை செயல்படுத்தினார் (லூக்கா 23:34).

யாரோ ஒருவரை தவறாக நடத்துவதற்கு எந்த காரணமும் இல்லை என்றாலும், நாம் உணரக்கூடிய எந்த கோபத்தையும் கசப்பையும் விடுவிக்க தேவனுடைய கிருபையை நாடுவோம். நாம் அவருடனும் மற்றவர்களுடனும் ஆரோக்கியமான உறவில் வாழ வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். நம்மை தேவன் மன்னித்ததைப் போல நாமும் பிறரை மன்னிப்போம் (மத்தேயு 6:12); அன்பில் நடந்து கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுவோம்.

~நான்சி கேவிலேன்ஸ்

நீங்கள் மன்னிக்கிறவர்களாய் எவ்வாறு மாறக்கூடும்?


இன்றைய வேதப்பகுதி | லூக்கா 23:32-43

32.குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள். 33. கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். 34. அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். 35. ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள். 36. போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து: 37. நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள். 38. இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது. 39. அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். 40. மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? 41. நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்;குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, 42. இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். 43. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ் ஒரு பிரபலமான நாத்திகர். அவர் கிறிஸ்தவர்களிடம் அதிகம் விவாதம் செய்தார். அவர் தன்னுடைய ஆதரவாளர்களை நோக்கி, நான் புற்றுநோயால் இறக்கும் போது, எனது மரணப் படுக்கையில் நான் ஒரு கிறிஸ்தவனாய் மாறிவிடடேன் என்று ஒருவேளை நீங்கள் கேள்விப்படுவீர்களானால், எனக்கு புத்தி பேதலித்துவிட்டது என்பதை புரிந்துகொள்ளுங்கள் என்று முன்கூட்டியே அவர்களை எச்சரித்தார். கிறிஸ்டோபர் இறந்த பிறகு, ஒரு விவாத எதிர்ப்பாளரும் நண்பரும், ஹிச்சன்ஸ் தனது ஆதரவாளர்களை இவ்விதம் முன்கூட்டியே எச்சரித்ததாகக் குறிப்பிட்டார். ஏனெனில் மரண தருவாயில் அவர் விரக்தியடைந்து கிறிஸ்துவிடம் திரும்பலாம் என்று அவருக்குத் தெரியும். யாருக்குத் தெரியும்? அவர் அவ்வாறு கிறிஸ்துவிடம் திரும்பியிருக்கலாம். ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதும் தேவனுடன் போராட முடியும்; ஆகிலும் வாழ்நாளின் கடைசி சில நொடிகளில் கிருபையாய் இரட்சிப்பை அடையவும் முடியும். அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது

இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளன் பாவ வாழ்க்கை வாழ்ந்தவன். ஆனால் அவன் மற்றொரு கள்ளனை நோக்கி, “நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்;குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையேஎன்று கூறுகிறான் (லூக்கா 23:41). இப்போது அவன் மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறான். அவனுடைய சரீரப்பிரகாரமான வேதனை ஆவிக்குரிய தேவையை முக்கியப்படுத்தியது.

மேலும் அவன் பொன்னான நிமிடங்களை வீணடித்துக் கொண்டிருந்தான். அவன் ஆரம்பத்தில் இயேசுவை பரியாசம் செய்த மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டான் (மாற்கு 15:32). ஆனால் அவன் இயேசுவோடு சிலுவையிலறையப்பட்ட போது, மரண தருவாயில் தன்னுடைய கடைசி வாய்ப்பை கிருபையாய் பெற்றுக்கொண்டான். அவன் இயேசுவை நோக்கி: “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்” (லூக்கா 23:42).

வாழ்க்கையின் இறுதி நிமிடங்களில் இருப்பவர்கள் உட்பட, அனைத்து ஜனங்களையும் இரட்சிப்பதற்கு தேவன் ஆவலாயிருக்கிறார். நாம் செய்த தவறு எதுவாயினும், அதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, இயேசுவை நோக்கிப் பார்ப்போம்.

~மைக் விட்மெர்

உங்களுடைய பெரிய மனவருத்தங்கள் என்னென்ன? உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படாது என்று ஏன் எண்ணுகிறீர்கள்?

அன்பான இயேசுவே, நாம் உம்மை மாத்திரம் நோக்கிப் பார்க்கிறேன். உம்மால் மாத்திரமே என்னை இரட்சிக்க முடியும்.

இன்றைய வேதப்பகுதி | யோவான் 19:25-27

25. இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். 26. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். 27. பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.

என் பெற்றோரின் நாற்பதாவது ஆண்டுவிழா நிறைவடைந்தவுடன் என் அப்பா மரித்துவிட்டார். என் அம்மா மிகவும் வருந்தினார். மேலும் அவர், கடன்களை யார் செலுத்துவார்கள்? அவரிடம் போதுமான பணம் இருக்குமா? வீட்டை பழுதுபார்க்க வேண்டுமென்றால் என்ன செய்வது? என்று கவலைப்பட்டார். அவர்களுடைய கவலை தேவையற்றது என்பதை அவர் விரைவில் அறிந்தார். என் அப்பா தனது மரணத்திற்குப் பிறகு அம்மாவின் ஒவ்வொரு நிதித் தேவைக்காகவும் பல ஆண்டுகளுக்கு முன்பே சிரமப்பட்டு சில ஏற்பாடுகளை செய்திருந்தார். நானும் என் சகோதரியும் எங்கள் அம்மாவின் மற்ற தேவைகளை சந்திப்பதாக வாக்குக்கொடுத்தோம்

குடும்பத்தின் மீது காண்பிக்கும் அக்கறையை ஆண்டவராகிய இயேசுவின் கடைசி வார்த்தைகள் முக்கியத்துவப்படுத்துகிறது. சிலுவையில் தொங்கிய நிலையிலும், இயேசு தம் தாயாகிய மரியாளையும் தனக்கு பிரியமான சீஷன் யோவானையும் நோக்கிப் பார்த்தார். மரியாளை நோக்கி, “ஸ்திரீயே, அதோ, உன் மகன்என்றும், யோவானை நோக்கி, “அதோ, உன் தாய்என்றும் கூறுகிறார் (யோவான் 19:26-27).

துக்கமான நேரத்தில் பகிரப்பட்ட அன்பின் குறிப்பிடத்தக்க வார்த்தைகள் இவைகள். யூத கலாச்சாரத்தில், இறக்கும் ஒரு மகன் தனது தாயின் பராமரிப்பை தன்னுடைய ஆண் உடன்பிறப்பிடம் ஒப்படைப்பது வழக்கம். இயேசுவின் விஷயத்தில், அவர் தன்னுடைய உடன்பிறப்புகளிடம் ஒப்படைத்திருக்கவேண்டும் (மத்தேயு 13:55 ஐப் பார்க்கவும்). ஏனென்றால் மரியாளின் கணவர் யோசேப்பு ஏற்கனவே இறந்துவிட்டார். ஆனால் இயேசுவின் சகோதரர்கள் அவரை கிறிஸ்துவாக, அதாவது மேசியாவாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

மரியாளின் நலனில் கவனம் செலுத்திய இயேசு, தம் சீஷனான யோவானை அவளுடைய பராமரிப்பாளராக நியமித்தார். “அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்” (யோவான் 19:27). இங்ஙனம் கிறிஸ்து செய்த செயலானது, விசுவாசிகள் அனைவரும் தேவனுடைய குடும்பத்தின் அங்கத்தினர்கள் என்ற பிணைப்பை வலியுறுத்துகிறது.

~பேட்ரிசியா ரேபோன்

மற்றவர்கள் மீது நீங்கள் எவ்விதம் அக்கறை காண்பிக்கிறீர்கள்? விசுவாசிகளை குடும்பமாய் கருதுவது என்பது உங்களுக்கு என்ன அர்த்தம் கொடுக்கிறது?

அன்பான இயேசுவே, விசுவாசிகளுக்கு மனப்பூர்வமாகவும் உற்சாகமாகவும் உதவிசெய்வதற்கு என்னை பெலப்படுத்தும்.

இன்றைய வேதப்பகுதி | மத்தேயு 27:45-50

45. ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. 46. ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். 47. அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். 48. உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். 49. மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். 50. இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.

என் தாத்தா இறக்கும் போது, அவருக்கு இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடைகொடுத்து வழியனுப்ப நான் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அந்த ஹால் வெறுமையாக இருந்தது; அவருடைய அறை, ஃப்ளோரசன்ட் விளக்குகள், லினோலியம் தளம், ஒரு பூந்தொட்டி, ஒரு குடும்ப படம் என்று மந்தமாக வெறிச்சோடி இருந்தது. அந்த இடம் முழுவதும் வினிகர் மற்றும் எலுமிச்சை வாசனையினால் நிரம்பியிருந்தது. ஒரு நபர் இறப்பதை நான் இதற்கு முன்பு நேரில் பார்த்ததில்லை, ஆனால் அவரது சுவாசத்தில் மரண ஓலம் கேட்டது. நான் அவரிடம் விடைபெற விரும்பினேன். இந்த இருண்ட இடத்தில் கூட அவர் தனியாக இல்லை என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன்.

உங்களுடைய கடினமான தருணத்தில் தனியாய் இருப்பது எவ்வளவு வேதனையான ஒன்று? ஆனாலும் இயேசு இந்த துக்கத்தை உணர்ந்தார். சிலுவையில் தொங்கிக்கொண்;டு, “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” (மத்தேயு 27:46) என்று அழுதார். அவர் தனது சொந்த அனுபவத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை, முழு உலகத்தின் வேதனையையும் வெளிப்படுத்தினார். கிறிஸ்து தன்னுடைய தனிப்பட்ட வலியை வெளிப்படுத்தவில்லை; மாறாக, இஸ்ரவேலின் ஜெபங்களில் ஒன்றை உபயோகித்தார் (சங்கீதம் 22:1). தேவன் அவர்களை கைவிட்டுவிடுவாரோ என்ற இஸ்ரவேலின் பயத்தை அவர் எதிரொலித்தார். மேலும் அவர் நம்முடைய சொந்த விரக்தியின் தருணங்களில் நாம் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் அதே பயத்தைப் பிரதிபலித்தார். நம்முடைய பிரியமான பிள்ளையை இழக்கும்போது, திருமணம் தோல்வியில் முடியும்போது, தேவன் நம்மை கைவிட்டுவிடுவார் என்று நாம் எண்ணுவது இயல்பு.

இருப்பினும், சிலுவையில் தொங்கியிருக்கும் இந்த இயேசுவும் அவருடைய மரணத்தைத் தொடர்ந்து நடைபெறப்போகிற உயிர்த்தெழுதலும் நம்முடைய பாடுகளுக்கு பதிலளிக்கிறது. நாம் கைவிடப்பட்டதாக உணரலாம். ஆனால் மரணப்பள்ளத்தாக்கிலும் தேவன் எப்போதும் நம்மோடே இருக்கிறார் என்னும் உண்மையை இயேசு வெளிப்படுத்துகிறார். நாம் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை.

~விண் கோலியர்

நீங்கள் எங்கே கைவிடப்பட்டதாக உணர்ந்தீர்கள்? அதுபோன்ற தருணங்களில் தேவன் உங்களை எவ்விதம் சந்தித்தார்?

அன்பான தேவனே, கைவிடப்படுவதலின் வேதனையை நான் அறிந்திருக்கிறேன். நான் தனிமையாய் இல்லை என்பதை உம்மால் அறிந்திருக்கிறேன்.

இன்றைய வேதப்பகுதி | யோவான் 4:5-14

5. யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார். 6. அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்; அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது. 7. அவருடைய சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள். 8. அப்பொழுது சமாரிய நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ளவந்தாள், இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார். 9. யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். 10. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே  அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். 11. அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும். 12. இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப்பார்க்கிலும் நீர் பெரியவரோ? அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள். 13. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு  மறுபடியும் தாகமுண்டாகும். 14. நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.

போர்வெல் மற்றும் எளிமையான வீட்டு நீர் வடிகட்டி அமைப்பை வழங்குவதற்காக இந்தியாவின் கிராமப்புற பகுதிக்குச் சென்ற தன்னார்வலர்களின் குழுவிற்கு ஒரு குடும்பத்தினர் உற்சாகமாக தங்கள் கதவைத் திறந்து கொடுத்தனர். அவர்களின் தாகத்தைத் தணிக்க அந்த வாட்டர்ஃபில்டர் பாதுகாப்பான தண்ணீரை எவ்வாறு வழங்கும் என்பதை விளக்கிக் காட்டிய குழுவினர், அவர்களின் ஆழ்ந்த தேவையைப் பூர்த்திசெய்யும்ஜீவத்தண்ணீராகியதேவனுடைய சமாதானத்தின் சுவிசேஷத்தை குடும்பத்தினரிடம் பகிர்ந்துகொண்டனர்.

குழு உறுப்பினர்கள், ஒருவருடைய தண்ணீர் தாகத்தை ஆவிக்குரிய தாகத்தோடு தொடர்புபடுத்தி கிறிஸ்துவின் மாதிரியை பிரதிபலித்தனர். தன் பயணத்தில் ஏற்பட்ட களைப்பின் நிமித்தம், இயேசு கிணற்றின் அருகே அமர்ந்தார். அங்கு வந்த ஒரு ஸ்திரீயிடம் தண்ணீர் கேட்ட பிறகு, அவளுடைய ஆழ்ந்த தேவையை அவர் நிவர்த்தி செய்தார்: “இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு  மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது” (யோவான் 4:13-14). தேவனுடனான உறவினிமித்தம் இயேசு அவளுக்கு ஆத்தும புத்துணர்ச்சி அளித்தார்.

இந்த ஜீவத் தண்ணீரை எல்லா ஜனங்களுக்கும் கொடுப்பதற்காக கிறிஸ்து மீண்டும் தாகத்தின் வேதனையை அனுபவிக்க வேண்டியிருந்தது. அவர் சிலுவையில் தொங்கியபோது, “தாகமாயிருக்கிறேன்” (யோவான் 19:28) என்று கூக்குரலிட்டார். இது அவருடைய வாழ்க்கை தணிந்து கொண்டிருந்தது என்பதற்கான அடையாளம். தேவன் தன்னை மீண்டும் உயிரோடு எழுப்புவார் என்பதை அறிந்து, சரீர தாகத்தின் வலியை அவர் மனமுவந்து அனுபவித்தார். கிணற்றடியில் சந்தித்த பெண்ணைப் போல, இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையின் மூலம் தாகத்தால் வாடும் ஆத்துமாக்களுக்கு நாமும் ஜீவத் தண்ணீரைக் கொடுக்கக்கூடும். குடும்பத்தினர் சுத்தமான தண்ணீரை ருசித்து மகிழ்ந்ததை தன்னார்வக் குழு கொண்டாடியதுடன், கிறிஸ்து வழங்கும் ஜீவத் தண்ணீரையும் அவர்கள் ஏற்றுக்கொண்டபோது மகிழ்ச்சியடைந்தனர். ஆத்துமதாகம் கொண்ட எவருக்கும் இது ஒரு அழகிய பரிசு.

~லிசா சாம்ரா

தண்ணீர் தாகம் எவ்விதத்தில் ஆவிக்கேற்ற தாகத்தோடு ஒப்பிடப்படுகிறது? ஜீவத்தண்ணீரை உங்களுக்கு கொடுத்தபோது நீங்கள் எவ்விதம் அதை ஏற்றுக்கொண்டீர்கள்?

இயேசுவே, ஆத்துமா உம்மில் திருப்தியடைகிறது.

 

இன்றைய வேதப்பகுதி | யோவான் 19:28-37

28. அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். 29. காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். 30. இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். 31. அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள். 32. அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள். 33. அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. 34. ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது. 35. அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான். 36. அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. 37. அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது:

பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த 2.6 பில்லியன் பவுண்டுகள் (சுமார் 2420 கோடிகள்) கடனைத் திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுப்பதாக 2014 இல் பிரிட்டன் அரசு அறிவித்தது. 1720 ஆம் ஆண்டில் தென் கடல் குமிழி (ளுழரவா ளுநய டீரடிடிடந) என்று அழைக்கப்படும் ஒரு நிதிச் சரிவுக்குப் பிறகு, அரசாங்கம் பிணை எடுப்பு எடுத்தது. இதன் விளைவாக பல மில்லியன் பவுண்டுகள் கடன் ஏற்பட்டது. இப்போது, குறைந்த வட்டி விகிதங்கள் காரணமாக, தற்போதைய அரசாங்கம் வருங்கால சந்ததியினருக்கு பல ஆண்டுகளாக செலுத்தப்பட்ட பல்வேறு கடன்களை திருப்பிச் செலுத்த தயாராக உள்ளது.

இயேசுமுடிந்ததுஎன்று கூக்குரலிட்டபோது (யோவான் 19:30), மனிதகுலத்தின் நீண்டகால கடனாகிய பாவம் முழுமையாக செலுத்தப்பட்டுவிட்டதாக அவர் அறிவித்தார். இயேசு சிலுவையில் இருந்து பேசிய ஏழு வார்த்தைகளில் ஆறாவது வார்த்தை ஒரே கிரேக்க வார்த்தையானடெட்டலெஸ்டாய்என்பதாகும். வரிகள் அல்லது கடன்கள் முழுமையாக செலுத்தப்பட்டு தீர்ந்ததை குறிக்கவும், வேலையாட்கள் பணிகளை முழுமையாக முடிப்பது மற்றும் பலவற்றை விவரிக்க இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இங்ஙனம், தன்னுடைய பணியை நேர்த்தியாய் நிறைவுசெய்த தேவ ஆட்டுக்குட்டியான இயேசுவைக் குறிக்கிறது (வச. 28).

கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது, அவர் நியாயப்பிரமாணத்தின் நியாயமான கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றினார். உலகின் அனைத்து பாவங்களையும் தம்மீது சுமந்தார் (1 பேதுரு 2:24). அவர் பாவத்தை மூடியது மட்டுமல்லாமல், “உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்(த்தார்)” (யோவான் 1:29). இயேசு நம் கடனை செலுத்தியதால், நாம் அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் நித்திய ஜீவனை பெற்று, தற்போது மகிழ்ச்சியோடு வாழ முடியும் (யோவான் 10:10). நம்முடைய கடன் யாவும் நிவிர்த்தியாயிற்று

~மார்வின் வில்லியம்ஸ்

உங்கள் பாவத்தின் கடனை இயேசு முழுமையாக செலுத்தினார் என்பதை நீங்கள் அறிவதன் அர்த்தம் என்ன? உங்களுக்காக அவர் தியாகம் செய்ததற்காக இன்று அவருக்கு எப்படி நன்றி சொல்வீர்கள்?

அன்புள்ள இயேசுவே, கடனை முழுமையாக செலுத்தியதற்கு நன்றி.

இன்றைய வேதப்பகுதி: மாற்கு 15:33-41

33. ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம்  உண்டாயிற்று. 34. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். 35. அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். 36. ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில்மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்க வருவானோ பார்ப்போம் என்றான். 37. இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். 38. அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. 39. அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக் கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான். 40. சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று ஊழியஞ்செய்துவந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், 41. அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள்.

மார்ட்டின் லூத்தர் மரண படுக்கையில் இருந்தபோது, ஒரு போதகர் அவரை எழுப்பி, “ஐயா, நீங்கள் கிறிஸ்துவிலும், நீங்கள் பிரசங்கித்த கோட்பாடுகளிலும் உறுதியாக மரணமடைவீர்களா?” என்று கேட்டார். அதற்கு லூத்தர், “ஆம்என்று பதிலளித்து, பின்னர் தன் கண்களை மூடினார். என்ன அழகான சாட்சி! என்னுடைய கடைசி வார்த்தைகளும் அதே அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். என் வாழ்க்கையை தொலைத்துவிட்டு, ஏனோ தானோ என்று நான் மரிக்க விரும்பவில்லை. வாழ்க்கையில் முக்கியமானது எதுவென அறிந்து, நானும் லூத்தரைப் போல மரிக்க விரும்புகிறேன்.

இயேசுவின் கடைசி வார்த்தைகள் என்ன சொல்லுகிறது? “இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்” (மாற்கு 15:37) என்று மாற்கு நற்செய்தி கூறுகிறது. மத்தேயுவின் பதிவும் அதை ஒப்புக்கொள்கிறது: “இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்” (மத்தேயு 27:50). அவருடைய கடைசி கூச்சல் எதை நிரூபிக்கிறது? அது வெற்றியின் சத்தமா அல்லது வேதனையின் சத்தமா? அது இயேசுவின் பாடுகளின் கீழான நிலைமையை வெளிப்படுத்துகிறதா அல்லது அவருடைய வெற்றியின் துவக்கத்தை வலியுறுத்துகிறதா?

லூக்கா வெற்றிடத்தை நிரப்புவதால் நாம் யூகிக்க வேண்டியதில்லை. அவர் எழுதும்போது, “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார் (23:46) என்று எழுதுகிறார். ஆனால் யோவான் சொல்லும்போது, “முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்” (19:30) என்று கூடுதலாகப் பதிவிடுகிறார்

இயேசுவின் இறுதிக் கூக்குரல், தேவன் மீதான இயேசுவின் நம்பிக்கையின் வலிமிகுந்த ஓசையாக வெளிவந்தது. அவைகள் விசுவாசத்துடன் வெளிவந்ததால், அவைகள் இயேசுவின் இறுதி வார்த்தைகளாய் இருக்கமுடியாது. தேவன் தன்னுடைய விலையேறப்பெற்ற குமாரானாகிய இயேசுவை உயிரோடு எழுப்பினதுபோல, கிறிஸ்துவை விசுவாசிக்கிற அனைவரையும் ஒருநாளில் உயிரோடு எழும்பப்பண்ணுவார் என்பது அதிக நிச்சயம்.

~மைக் விட்மர்

உங்கள் கடைசி வார்த்தைகள் என்னவாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அவற்றை எழுதுங்கள், நீங்கள் மரித்த பிறகு உங்களுடைய அன்புக்குரியவர்கள் அவற்றைப் படிக்கலாம். இந்த கடைசி வார்த்தைகளை இன்று நீங்கள் எவ்வாறு பிரதிபலிக்கலாம்?

பிதாவே, உமது கரங்களில் என் ஆவியை இப்பொழுதும் எப்போதும் ஒப்படைக்கிறேன்.

இல்லினாய்ஸின் சிகாகோவில் உள்ள திருச்சபைக்கு நான் செல்வதற்கு முன்பு கிறிஸ்துவின் இந்த ஏழு கடைசி வார்த்தைகளைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை.  இயேசு மரிப்பதற்கு முன்பு சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றையும் எண்ணிப் பார்க்கஏழு கடைசி வார்த்தைகள்பிரசங்கத்தை நான் கேட்ட பிறகு வேதவசனங்களைத் தேடியதை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். ஏழு வார்த்தைகளை மட்டும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் பின்னர் எனது திருச்சபையில் புனித வெள்ளி அன்று முதன்முறையாக ஏழு கடைசி வார்த்தைகள் ஆராதனையில் பங்கேற்றேன். இந்தக் கூட்டத்திற்கு ஏறக்குறைய எங்களுடைய சபை மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் சரணாலயத்தில் திரண்டிருந்தனர். நாங்கள் ஏழு வெவ்வேறு ஊழியர்களிடமிருந்து செய்தியை கேட்க நேர்ந்தது. சிலுவையில் தொங்கும் போது இயேசு கூறிய ஏழு வார்த்தைகளை நற்செய்திகளிலிருந்து இந்த ஊழியர்கள் பகிர்ந்து கொண்டனர். அப்போதுதான் நான் அதை தெரிந்துகொண்டேன். மரிப்பதற்கு முன் இயேசு சொன்ன ஏழு வார்த்தைகளைக் குறித்து கற்றுக்கொண்டேன்.

ஒவ்வொரு புனித வெள்ளியிலும் நான் இந்த ஆராதனையில் பங்குபெற்று, இயேசுவின் இந்த ஏழு கடைசி வார்த்தைகளால் உந்தப்பட்ட ஏழு வித்தியாசமான செய்திகளை ஒரே அமர்வில் கேட்பது என்பது, புதிதாகவும், வித்தியாசமாகவும், ஊக்கமளிக்கக்கூடியதாகவும் எனக்கு இருந்தது. நான் இன்னும் இயேசுவிடம் நெருங்கினேன். அவருடைய அற்புதமான குணாதிசயமும், தன்னுடைய மரணத்திலும் சீஷர்களுக்கு முன்மாதிரியாய் செயல்பட்ட விஷயமும் என்னை வெகுவாய் பாதித்தது.

பிதாவே, இவர்களுக்கு மன்னியும்” (லூக்கா 23:34) என்று நான் கேட்கும்போது, என்னுடைய அன்புக்குரியவர்கள் எனக்கு செய்த மிகவும் வேதனையான செய்கைகள் போன்ற கடினமான சூழ்நிலைகளையும் நாம் மன்னிக்கவேண்டும் என்ற விலையேறப்பெற்ற பாடத்தின் முன்மாதிரியாக இயேசுவை நான் காண்கிறேன். நான் எப்படி மன்னிப்பது? இயேசுவின் வார்த்தைகளை மனதில்கொண்டு, தேவனுடைய உதவியை நாடும்போது அது சாத்தியமாகிறது.

இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்” (லூக்கா 23:43) என்று நான் கேட்கும்போது, இயேசு மன்னிப்பது மட்டுமல்லாமல், ஒரு பாவியை மீட்டெடுப்பதையும் நான் காண்கிறேன். நம்முடைய கடந்த காலத்தைப் பொருட்படுத்தாமல், தம்மிடம் திரும்பும் அனைவரின் பாவங்களையும் அவர் சுத்திகரித்து, பிரம்மாண்டமான நித்திய வாழ்க்கையையும் அவர் அளிப்பார் என்று வாக்குப்பண்ணும் வேதவாக்கியங்களை அவர் கூறுவதை இங்ஙனம் நான் காண்கிறேன் (மத்தேயு 9:2; யோவான் 3:16 ஐப் பார்க்கவும்). என்றென்றும் நாம் அவருடன் இருக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தை நான் காண்கிறேன்.

ஸ்திரீயே, அதோ, உன் மகன்..”, “அதோ, உன் தாய்” (யோவான் 19:26-27) என்று இயேசு சொன்னதை நான் கேட்கும்போது, கிறிஸ்து கடுமையான வலியின் மத்தியிலும் மற்றவர்கள் மீது அக்கறைகொள்வதை நான் காண்கிறேன். குடும்பத்தை இழந்தவர்களுக்கு குடும்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதையும், ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ளும்படி கட்டளையிடுவதையும் நான் காண்கிறேன்.

என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று நான் கேட்கும்போது (மத்தேயு 27:46), நான் ஒரு பெரிய கேள்வியைக் கேட்கிறேன். நான் மனச்சோர்வைக் கேட்கிறேன். நான் தனிமையைக் கேட்கிறேன். இயேசு தாம் அழைக்கப்பட்ட, தன் சீஷர்களிடம் பகிர்ந்துகொண்ட ஊழியத்தின் நிறைவேறுதலுக்கு மத்தியில் ஏற்பட்ட காயத்தின் சத்தத்தைக் கேட்கிறேன் (மாற்கு 8:31-33 ஐப் பார்க்கவும்). அவர் நம்முடைய பாவங்களுக்காகவும், வாழ்வதற்கான வழியைக் காட்டுவதற்காகவும் அனுப்பப்பட்டார் என்பதை அவர் அறிந்திருந்தார். இருப்பினும் அவர் தனிமை மற்றும் விரக்தி போன்ற உணர்ச்சிகளுடன் போராடினார். இயேசுவின் இதயத்தைப் பிளக்கும் கேள்வியின் மூலம், வாழ்க்கையின் கேள்விகளுடன் தேவனை எவ்விதம் சார்ந்துகொள்வது என்பதை நான் கற்றுக்கொள்ளுகிறேன். புலம்புவது சரியென்று ஏற்றுக்கொள்கிறேன். எனது கேள்விகளையும் கவலைகளையும் அவரிடம் நேர்மையாக முன்வைக்க முடியும். சில கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமல் போகலாம் என்பதையும், புலம்புதல் என்பது என் தேவனை அங்கீகரிப்பது மற்றும் அந்த கேள்விகளை அவரிடம் ஒப்படைப்பது என்பதையும் அறிகிறேன்;.

தாகமாயிருக்கிறேன்” (யோவான் 19:28) என்று கேட்கும் போது, இயேசு முழுமையான தேவனாக இருந்தாலும், அவர் முழுமையான மனிதன் என்பதையும் அறிகிறேன். ஒரு மனிதனாய் நான் என்ன உணர்கிறேன் என்பதை அவர் உணர்கிறார்.

முடிந்ததுஎன்று அவர் சொன்னதை நான் கேட்கும்போது (யோவான் 19:30), நம்முடைய இரட்சகர் தம்முடைய பணியை அவருடைய சொந்த நிபந்தனைகளின்படி முடிப்பதை நான் காண்கிறேன். அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை நிறைவுசெய்ததால் அவர் மரித்தார். மரணம் உட்பட அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது. அவர் எதை செய்வதற்காய் இந்த பூமிக்கு வந்தாரோ, அதை நிறைவேற்றிவிட்டு தன் ஜீவனை விட்டார்.

மேலும், “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:46), கிறிஸ்து தம் பிதாவாகிய தேவனிடத்தில் தன்னுடைய ஆவியை முழுமனதுடன் ஒப்படைக்கிறதை நான் பார்க்கிறேன். எல்லாவற்றையும் உண்மையில் யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதை உணர்ந்து, சரணடைதல், அமைதி மற்றும் உண்மையான நம்பிக்கை ஆகியவற்றை நான் காண்கிறேன். நான் தேவனிடத்தில் அனைத்தையும் ஒப்புவிக்கும்போது, அவர் இளைப்பாறுதலைத் தருகிறவர் என்பதற்கு நினைவூட்டலாய் அமைகிறது.

இயேசுவின் கடைசி ஏழு வார்த்தைகளை நினைத்துப் பார்ப்பது நான் அறியாத ஒரு சிலுவைக்கு என்னை மீண்டும் அழைத்துச் செல்கிறது. கிறிஸ்து யார் என்பதையும் அவர் நமக்கு எப்படி முன்மாதிரியாய் திகழ்கிறார் என்பதையும் சிந்திக்க தூண்டுகிறது. அவருடைய ஆவி மற்றும் வல்லமையின் மூலம் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இயேசு உண்மையிலேயே ஒரு பிரகாசமான உதாரணமாக திகழ்ந்தார்.

இயேசுவின் கடைசி வார்த்தைகள் அவருடைய இருதயம், உணர்ச்சிகள், அக்கறை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை எனக்கு நினைவுபடுத்துகின்றன. மறுரூப வாழ்க்கைக்கு வழிவகுக்கும் அவருடைய வார்த்தைகள் உங்களுக்கும் முன்மாதிரியாய் இருக்கவேண்டும் என்று நான் ஜெபித்துக்கொள்கிறேன். கடினமான சூழ்நிலையின் மத்தியிலும், மகிழ்ச்சியான தருணங்களிலும், அவரைப் போலவே செயல்படுவதற்கு அவருடைய மறுரூப வல்லமையோடு நாம் செயல்படும் விதமாக, அவருடைய வார்த்தைகள் உங்களை ஊக்குவிக்கின்றன. மற்றவர்கள் உங்களைக் காயப்படுத்தும் தருணத்திலும், அவர்களை மன்னிக்க தூண்டும் விதத்தில் கர்த்தருடைய வார்த்தை உங்களுக்கு உறுதுணையாயிருக்கும் என்று நம்புகிறேன். இயேசுவின் வார்த்தைகளும் செயல்களும், நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்தையும் தேவனுடைய கைகளிலும், அவருடைய பராமரிப்பிலும், அவருடைய உதவியோடு எப்படி விட்டுவிடுவது என்று உங்களுக்குக் காண்பிக்கும் என்றும் நம்புகிறேன்.

கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுவது நம்முடைய சுயத்தால் இயலாது. அதற்கு மேசியாவின் மீது விசுவாசமும், தேவனுடைய வல்லமை மற்றும் கிருபையின் மீது நிலையான நம்பிக்கையும் அவசியம். நாம் ஒவ்வொரு நாளும் நம்மை அவரிடத்தில் பூரணமாக ஒப்புவிக்கவேண்டும். இயேசு நமக்கு வழியை காண்பித்திருக்கிறார். அவரை பின்பற்றுவது முற்றிலும் நம்முடைய சுய தீர்மானமே

நீங்கள் அவரை பின்பற்றுவீர்களா?

~கடாரா பேட்டன், ஆசிரியர், நமதுஅனுதினமன்னா

 

நாம் மன்னிப்பை புரிந்துகொண்டு பெற்றிருக்கிறோம் என்பதற்கு இயேசுவுக்கு நாம் அளித்த பதில் இன்றியமையாத சான்றாய் அமைகிறது.” 

~கேரி இன்ரிக்