மனச் சோர்வு என்னும் மனநோயில் நான் தினமும் வாழ்கின்றேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆசிரியராக வேலை செய்து சோர்வுற்ற போது எனக்கு மனச் சோர்வு இருந்ததாக கண்டறியப்பட்டது.
என் மனச் சோர்வின் அத்தியாயங்களை விவரிக்கின்றேன்: சோகம் மற்றும் பயனற்ற சிந்தனைகள் போன்ற எண்ணங்களும் எதிர்மறை உணர்ச்சிகளையும் மேற்கொள்வது போல என் மனதிற்கு தோன்றும். அவை திடீர் அலைகள் போன்றோ அல்லது விரக்தி மற்றும் உதவியற்ற தன்மை என்னும் உளையான சேற்றில் மெதுவாக மூழ்குவது போன்றோ இருக்கும். அந்நிலை பல வாரங்களுக்கு நீடிக்கும்.
மனச்சோர்வு மோசமாக இருக்கும்போது நான் உணர்ச்சிகள் அற்ற நிலையிலோ அல்லது ஆழமான மன உளைச்ச லோ அடைகின்றேன். எனக்கு நீண்ட நேரம் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கின்றது. என்னைச் சுற்றி உள்ளவர்கள் வாழ்க்கையைக் நன்றாக அனுபவிக்கும் போதும் என்னுடைய இருதயம் வலிக்கின்றது, ஏனெனில் நான் ஒரு பார்வையாளராக உணர்கின்றேன்.
நான் மனச்சோர்வை எதிர்க்க மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளை நாடாமல்; ஆரோக்கியமான உணவையும் உடற்பயிற்சியையும் நாடினேன். நான் மன அழுத்தத்தை தவிர்க்க முயன்றேன் மற்றும் தொழில்முறை வல்லுநரிடம் உதவியைத் தொடர்ந்து நாடினேன்.
இறுதியாக, பரிகாரியாகிய கர்த்தரின் வல்லமையால் நான் குணமாவேன் என்று விசுவாசிக்கின்றேன். அதற்காக நான் வேதாகமத்தை படிக்கவும் மனனம் செய்யவும் அதிக நேரத்தை செலவு செய்தேன். எப்பொழுதெல்லாம் நான் மன உளைச்சலை அனுபவிக்கின்றேனோ, அப்பொழுதெல்லாம் நான் என் சூழ்நிலைக்கேற்ற வேதாகம வசனங்களை உரத்த குரலில் படிக்கின்றேன். நான் பயத்துடன் இருக்கும் பொழுது ஏசாயா 41:10 வாசிப்பேன்; உணர்வு நிரம்பி வழியும் போது ஏசாயா 26:3 வாசிப்பேன்; நான் உளையான சேற்றில் மன இருளில் மூழ்கும் போது சங்கீதம் 40:1-3 நினைவு கூருவேன். நான் உரத்த குரலில் வாசிக்கும் போது அவை எனக்குள் கிரியை செய்வதாக விசுவாசிக்கிறேன். அவை தேவன் மீது கவனத்தை வைக்கவும் உதவுகின்றன.
எனக்காக தொடர்ந்து ஜெபிக்கும் என் சபை மக்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
இயேசு மீண்டும் வரும்போது நான் முழுமையாக குணமடைவேன் என்று நான் விசுவாசிக்கின்ற போதும் தேவன் இன்றே என்னை சுகமாக்குவார் மற்றும் என்னுடைய வாழ்க்கையை நான் “பரிபூரணம் அடைந்து”(யோவான் 10:10) இவ்வுலகிலேயே கொண்டாடுவேன் என்று விசுவாசிக்கின்றேன். என் விண்ணப்பங்களை தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்தி அவரின் நன்மைக்காய் நன்றி செலுத்துகிறேன் (பிலிப்பியர் 4 :6). தினந்தோறும் விடுதலைக்காக நான் நம்பிக்கையுடன் காத்திருப்பேன் (மீகா7:7).
ஆரோக்கியமாக செயல்படும் வாழ்க்கையை மனச்சோர்வு தடுக்கின்றது. குறிப்பாக தேவன் என்னை எழுதும் ஊழியத்தை துவங்க அழைத்தார், ஆனால் கீபோர்டு அருகில் அமர பெலனுக்காகவும் கவனத்துக்காகவும் போராடுகிறேன்.
அந்த சில நேரங்களில், நான் வேலை செய்வதற்கு தேவன் என்னை ஏன் குணப்படுத்தவில்லை என்று என்னை நானே கேட்டுக் கொள்வேன். எப்படியிருப்பினும் வேதாகமத்தில் உள்ள எண்ணிலா நபர்களைப் பார்க்கும் போது தேவன் அவர் இராஜ்ஜியத்திற்காக பயன்படுத்திய அவர்கள் துயரத்தையும் மன உளைச்சலையும் அழிவையும் சந்தித்துள்ளனர். தேவனால் அவர்களை பயன்படுத்த முடியுமானால் என்னையும் பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்தேன்.
சங்கீதம் 69:1, 2 -இல் தாவீது தம்முடைய விரக்தி மற்றும் துன்ப உணர்வுகளை, நிற்க நிலையில்லாத ஜலத்தில், ஆழமான உளையில் அமிழ்ந்து இருப்பதற்கு ஈடாகக் கருதுகிறார். எனினும் தேவன் தாவீதை “தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனாக” கருதி (1 சாமுவேல் 13 :14), இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகித்து, எதிரிகளை வீழ்த்தி ஜெயத்தை கொடுத்து, நீங்காத உடன்படிக்கையை செய்தார்.
எரேமியா “புலம்பும் தீர்க்கதரிசி”(எரேமியா 9:1), தனிமை, கிண்டல் மற்றும் நிராகரிப்பை அனுபவித்ததால், தான் பிறந்தநாளை சபித்தார் (எரேமியா 20:14). இருப்பினும் தேவன் எரேமியாவை “ஜாதிகளுக்கு தீர்க்கதரிசியாக” (எரேமியா 1:4-10) ஏற்படுத்தி யூத மக்களின் பாவங்களையும், விக்கிரக ஆராதனையால் ஏற்படும் விளைவுகளையும் வெளிப்படுத்தினார்.
இயேசுவும் கூட, சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தின நாள், துன்பம் மற்றும் வேதனை உணர்வுகளை பேதுரு யாக்கோபு மற்றும் யோவானுக்கு கெத்செமனே தோட்டத்தில் வெளிப்படுத்தினார் (மாற்கு 14:34). அவர் சிலுவையின் வழியில் செல்லவில்லை என்றால் நாமெல்லாம் இன்று எங்கு இருப்போம்?
வேதாகமத்தில் உள்ள நபர்கள் தேவனுக்கு கீழ்ப்படிந்து, தேவ நோக்கத்தை நிறைவேற்றுவதைத் தடுக்க தம்முடைய உணர்வுகளை அனுமதிக்கவில்லை என்பது- மனச் சோர்வுக்கு இடம் தராமல், தேவனுக்கு இடம் தந்து என்னை வரையறுக்கவும், என்னிடம் அவர் சித்தம் செயல்படவும் நினைவுபடுத்துகிறது. மற்றும் நான் எழுதுவதற்கு உந்து சக்தியாக விளங்குகிறது.
பல இரவுகளில், நான் விழித்து தேவனிடம் துயரத்திலிருந்து குணமடைய வேண்டி கதறுகிறேன்.
இருள் எழுவதற்கு முன், நான் தீர்மானம் எடுக்கவேண்டும்: அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோமர் 8:28), அல்லது நான் அவரை விட்டு விலகி மற்றும் எனக்கு நானே வேலி போட முடியும்.
இவ்விரண்டு தீர்மானங்களில் நான் கிறிஸ்துவுக்குள் உறவு கொள்வதற்கு முன்பு என்னுடைய வாழ்க்கை முழுவதும் குழப்பமாக இருந்ததால், இரண்டாவது தீர்மானம் மோசமானதாக இருந்திருக்கும்.
நான் இருளில் சரீரப் மற்றும் உணர்வு பிரகாரமாக அமர்ந்திருக்கும் போது, தேவன் ஒளியில் சொன்னதை நினைவு கூர்ந்தேன்: அவர் என் திராணிக்கு மேலாக என்னை சோதிக்க மாட்டார் (1கொரிந்தியர் 10:13). அவர் என்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை (எபிரெயர்13:5). மனதில் இவற்றை ஞாபகப்படுத்திக் கொண்டு நான் தேவனை நம்பி சார்ந்து வாழ்வதை தேர்ந்தெடுத்தேன்.
நான் விசுவாசத்தின் கண்களால், இப்போது என் போராட்டத்திற்கும் பதிலாக தேவனுடைய கிருபை, அடைக்கலம் மற்றும் தயவை காணமுடிகிறது. அவர் அன்பான மருத்துவர்கள், நிதி உதவி மற்றும் எழுத்துத் திறனை தந்து ஆசீர்வதித்ததற்காக நான் நன்றியோடு இருக்கிறேன்.
தேவன் காட்டிய வழிகளில் ஒன்று- எங்கள் சபைக்கு வரும் ஒரு மனநல ஆலோசகர் மூலம் எனக்கு உதவி கிடைத்தது. அவர் மனச்சோர்வின் சிறப்பு ஆலோசகர் நோயாளிகளை புரிந்து கொள்வார், ஏனெனில் அவரும் மனச்சோர்வினால் போராடினார்.
ஆலோசகரின் குணமான சாட்சி, தேவன் அவரை குணப்படுத்தியது போல என்னையும் குணப்படுத்துவார் என்று என்னை ஊக்குவித்தது. ஆனால் முக்கியமாக என் பிரச்சினையை அனுபவப் பூர்வமாய் புரிந்த ஒருவரிடம் நான் பேசமுடியும் என்று அறிந்தபோது எனக்கு வசதியாக இருந்தது.
அதன் பிறகு, என்னைச் சுற்றி யாரையாவது மனச்சோர்வுடன் இருக்கிறார்களா, நான் சாட்சியாகவும் நட்பாகவும் இருக்க முடியுமா என தேடினேன்.
இப்பருவம் சவால் மிகுந்ததாக இருப்பினும், நான் தேவனுடைய நன்மையையும் அவருடைய சுகம் அளித்தலையும் விசுவாசிக்கிறேன். அவர் என்னுடன் இருப்பதை அறிவேன் மற்றும் எதுவும், குறிப்பாக மனச்சோர்வு, அவருடைய அன்பை விட்டு என்னை பிரிக்கமுடியாது (ரோமர் 8:38-39).
தேவன் எனக்காக அற்புதமான நோக்கத்தை வைத்திருக்கிறார் என்று நான் தேவனை தொடர்ந்து விசுவாசிப்பேன்; என் வாழ்விற்கான அவர் திட்டம் நிறைவேற மனச்சோர்வையும் பயணத்தின் ஒரு பகுதியாக நான் எடுத்துக்கொள்ள அவர் விரும்புகிறார்.
இதற்கிடையே, நான் அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்து, அவரின் மறு சீரமைப்பிற்காக நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் பார்க்கிறேன்.
நீங்கள் கூட மனச்சோர்வினால் துன்பப்பட்டால், என் மனமார்ந்த ஜெபம் உங்களுடன் இருக்கும். இது நம் கதையின் முடிவு அல்ல என்ற விசுவாசத்தில் என்னுடன் இணைந்து கொள்ள உங்களை வரவேற்கிறேன்; நொறுங்குண்ட இருதயம் உள்ளவர்களுக்கு கர்த்தர் சமீபமாயிருக்கிறார் (சங்கீதம் 34 :18) மற்றும் இருதயம் நொறுங் குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார் என்று தேவன் சொல்கிறார் (சங்கீதம் 147: 3).
அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமும் இல்லை, துக்கமும் இல்லை, அலறுதலும் இல்லை, வருத்தமும் இல்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின (வெளிப்படுத்துதல் விசேஷம் 21:4). அந்நாளிலே நாம் மெய்யான சந்தோஷத்தை அனுபவிப்போம் -நித்தியத்திலும் நீடிக்கும் என விசுவாசிக்கிறேன்.