இ லையுதிர் காலத்தின் இலைகள் போல இறப்பின் அடையாளங்களை நம் சரீரங்கள் சுமக்கின்றன. எதிர்காலத்தில் நம் சரீரங்கள் அழியாத சரீரங்கள் ஆக மாற்றப்படும் என்பதால் நாம் தற்கால சரீரங்களை கவனிக்காமல் அவமதிக்கிறோமா? கீழ்க் கண்ட கட்டுரையில் கல்வியாளர் மற்றும் இயற்கை ஆர்வலர் டின் ஓல் மேன். நம் சரீரங்களை பராமரிப்பது போல நம்மை சுற்றியுள்ள உலகத்தையும் பராமரிக்க வேண்டும் என்கிறார். இரண்டும் தேவனுடைய கரத்தின் கிரியைகளாய், நம்முடைய விசுவாசமுள்ள உக்கிராணத்துவம் தேவைப்படுகிறதாய், எதிர்கால மறுசீரமைப்புக்கான வாக்குத்தத்தத்தை பகிர்கின்றன.
மார்ட்டின் ஆர். டி ஹான் II
- சிருஷ்டிப்பின் மகிழ்ச்சி
- சிருஷ்டிப்புக்கும் தேவனுக்கும் உள்ள தொடர்பு
- நமக்கும் சிருஷ்டிப்புக்கும் உள்ள தொடர்பு
- சிருஷ்டிப்பின் மூலமாக நமக்கும் தேவனுக்கும் உள்ள தொடர்பு
- சிருஷ்டிப்பின் மூலமாக நமக்கும் மற்றவர்களுக்கும் உள்ள தொடர்பு
பொல்யூஷன் அண்ட் த டெத் ஆப் மேன்: த கிரிஸ்டியன் வியூ ஆப் ஈகாலஜி என்னும் புத்தகத்தில் பிரான்ஸிஸ் ஸ்சாபெர் கூறுகிறார். சார்லஸ் டார்வினின் இறுதிக் காலத்தில் இரண்டு விஷயங்களில் ஆர்வம் குறைந்தது: கலையிலும் மற்றும் இயற்கையிலும் உள்ள மகிழ்ச்சி. இயற்கை ஆர்வலரான டார்வினுக்கு வாழ்வின் அழைப்பின் மீதே ஆர்வம் குறைந்தது முரண்பாடாகும். இன்று நம் கலாச்சாரத்திலும் நாமும் அந்த மகிழ்ச்சியை இழப்பதைக் காண்கிறோம். அவிசுவாசிகளை விட கிறிஸ்தவர்களுக்கு தான் புரிதல் இல்லை. இயற்கையில் மகிழ்ச்சியின் மரணம், இயற்கையின் மரணத்திற்கே வழிவகுக்கிறது (ப. 11).
ஸ்சாபெர் 1960களில் “ஹிப்பி சமூகத்தினர்” வாழும் பகுதியில் பள்ளத்தாக்கை கடந்து ஒரு கிறிஸ்துவப் பள்ளியைப் பார்வையிட்ட கதையைக் கூறுகிறார்.
—பிரான்சிஸ் ஸ்சாபெர்
அவர்கள் விக்கிரக ஆராதனைக்காரர்கள், புதிய கால இயக்கத்தினரை போல பூமிக்கு சடங்காச்சாரங்களை செய்கின்றனர். ஆனால் அந்த சமூகம் கவர்ச்சி கரமாய், நிலத்தை கவனமாக பராமரிக்கிறதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். இரண்டு சமூகத்தின் இடத்திற்கும் மிகுந்த வித்தியாசம் இருந்தன. ஹிப்பி சமூகத்தின் தலைவர் ஸ்சாபெரிடம் கிறிஸ்துவ பள்ளி அசிங்கமாக இருப்பதாக சொன்னார். அதைக் கேட்டதும் தான் அந்த பயங்கரமான நிலையை உணர்ந்தார். அவர் பொஹிமியர்களின் இடத்தை பார்வையிட்ட போது, அது மிகவும் அழகாயிருந்தது. அவர்கள் மின்சார கம்பிகளை கூட மரங்களுக்குக் கீழே மறைத்திருந்தனர். கிறிஸ்தவர்களின் இடமோ அசிங்கமாய் இருந்தது.
அது பயங்கரமானது. மனிதனின் பொறுப்பு மற்றும் இயற்கையுடன் அவனுக்கு உள்ள சரியான உறவையும் கணக்கில் எடுத்துக்கொள்ள கிறிஸ்தவம் தவறியது (ப. 42). ஸ்சாபெரின் புத்தகம் கிறிஸ்தவத்தின் வீழ்ச்சி பற்றிது அல்ல: அது உலகத்தில் வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு வேதாகம கொள்கைகளை உபயோகிக்கும் ஓர் அழைப்பு ஆகும். அது சிருஷ்டிப்பில் தேவனின் அதிசயத்தை மீண்டும் கண்டுபிடிப்பது. தேவன் சிருஷ்டித்த அனைத்தையும் பராமரிக்கவும் பாராட்டவும் மறந்து விட்டால் ஒருவருக்கு ஒருவரை பராமரிக்க இயலாது என்பதை நினைவூட்டுகிறது. ஜார்ஜ் மெக்டொனால்டு என்பவர் நூறாண்டுகளுக்கு முன்பே கூறியது போல மகிழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு மூலம் ஆராதனையை புதுப்பித்தலுக்கு காலம் கடக்கவில்லை. உலகிலே கோடிக்கணக்கான காட்சிகள், வாசனைகள் மற்றும் அசைவுகள் முடிவற்ற நல்லிணக்கத்தில் பின்னிப் பிணைந்துள்ளதில் தேவனை புரிந்துகொள்ளமுடியும். அவரின் இருதயத்திலிருந்து வந்து அவர் மனதில் உள்ளதை சிறிதாவது அறிய வைக்கிறது (வாட்’ஸ் மைன்’ஸ் மைன் ப. 29).
தேவன் உருவாக்கி அவற்றை தமக்கு சொந்தமாக்கினார் – ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் (ஆதி. 1:1).தேசம் என்னுடையதாய் இருக்கிறபடியால் நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்க வேண்டாம்; நீங்கள் பரதேசிகளும் என்னிடத்தில் அந்நியருமாய் இருக்கிறீர்கள் (லேவி. 25: 23). பூமியும் அதின் நிறைவும் உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது (சங். 24:1).” தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என்று தேவனுடைய வார்த்தை நமக்கு சொல்கிறது (ஆதி. 1:1). புதிய ஏற்பாட்டின்படி நம்மை மீட்க இந்த உலகிற்கு வந்த அந்த இயேசுதான் இந்த உலகையும் அதிலுள்ள அனைத்தையும் முதலில் சிருஷ்டித்தவர். அவர் அதரிசனமான தேவனுடைய தற் சுரூபமும் சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்தில் உள்ளவைகளும் பூலோகத்தில் உள்ளவைகளும் ஆகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும் சிங்காசனங்கள் ஆனாலும் கர்தத்துவங்கள் ஆனாலும் துரைத்தனங்கள் ஆனாலும் அதிகாரங்கள் ஆனாலும் சகலமும் அவரை கொண்டும் அவருக்கு என்றும் சிருஷ்டிக்கப்பட்டது (கொலோ. 1:15-16 ).
ஜார்ஜ் மெக்டொனால்டு எழுதுகிறார், “இந்த உலகம் தேவனுடையது எனில் ஒவ்வொரு மெய்யான ஆணும் பெண்ணும் அதை தன் இல்லமாக உணர வேண்டும். கோடை இரவின் அமைதி மனதில் மூழ்கவில்லை எனில் தவறு இருக்கிறது, ஏனெனில் அதில் தேவ சமாதானம் திகழ்கிறது. சூரியோதயம் தெய்வீக மகிமையாக தெரியவில்லை எனில் தவறு இருக்கிறது, ஏனெனில் அதில் சத்தியம், எளிமை, சிருஷ்டிகரின் வல்லமை திகழ்கிறது.” இந்த 19வது நூற்றாண்டு எழுத்தாளர் நாம் உயிர் வாழும், சுவாசிக்கும் உலகம், ஒவ்வொரு அணுவும் இயற்கை நிகழ்வும் தேவனுடைய யதார்த்தத்தை அறை கூவுகிறதாய் விசுவாசிக்கிறார்.
கேள்விக்கு இடம் இல்லாமலே, வேதாகமத்தின் உலக பார்வைக்கும் மதசார்பற்ற மனித நேயத்திற்கும் முக்கியமான வித்தியாசம் உண்டு. கிறிஸ்துவ புரிதலில் தேவன் உலகை சிருஷ்டித்தார். அது அவருக்கு சொந்தமானது. இந்த நம்பிக்கையின் விளைவு முக்கியமானது. நாம் மற்றவர்களின் சொத்தை பயன்படுத்தும் போது நாம் எஜமானின் குத்தகைக்காரர் ஆக மற்றும் உக்கிராணக் காரராக இருக்கும்போது நம் விருப்பம் இரண்டாம் பட்சமாகிறது. தேவனுக்கு சொந்தமான நிலம், காற்று, நேரம் அல்லது வாழ்வு இவற்றை உபயோகிக்கும் போது அதை நாம் எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்று தேவனிடம் கேட்பதன்மூலம் நாம் அவரை கனப்படுத்தவும் நம்மில் மகிழ்ச்சியை காணவும் முடியும். ஆடம் கிளார்க் நூறு ஆண்டுகளுக்கு முன்பு தேவனுடைய உரிமை பற்றிய நடைமுறை தாக்கங்களை பற்றி எழுதும்போது: தேவனுடைய கிரியைகள் பல்வேறு வகைகளாய், அவருடைய நிறைவான ஞானம் வடிவமைப்பிலும் படைத்த நோக்கமும் வெளிப்படுமாறு கட்டப்பட்டுள்ளன. அனைத்தும் தேவனுடைய சொத்து. அவற்றின் படைப்பின் நோக்கத்திற்கேற்ப அவற்றை உபயோகிக்க வேண்டும். தேவனின் உயிரினங்களின் முறைகேடும் கழிவும் தேவனுடைய சொத்தைக் கெடுப்பதும் கொள்ளையிடுவதும் ஆகும். (த டிரேஷரி ஆஃப் டேவிட் என்பதிலிருந்து ஸ்பர்ஜன் மேற்கோள் காட்டுகிறார் ப. 335).
“தேவனின் உயிரினங்களின் முறைகேடும் கழிவும் தேவனுடைய சொத்தைக் கெடுப்பதும் கொள்ளையிடுவதும் ஆகும்”. அந்த யதார்த்தம், தேவன் பராமரிப்பதை நாம் பராமரிக்க வேண்டும் என்ற உயர் அழைப்பின் முழுமையான விழிப்புணர்வில் நம்மை விழிக்கவைக்கிறது.
—ஆடம் கிளார்க்
அந்த வார்த்தைகள் என்னை இருபதின் காலத்திற்கு கொண்டுசென்றது. ஒரு இலையுதிர் காலத்தில் விரக்தியடைந்த அணில் வேட்டைக்காரனாய், கருவேலமரத்தில் இருந்த முள்ளம்பன்றியை சுட்டேன். மிச்சிகன் வடக்கு காடுகளில் சட்டப்படி பாதுகாப்பற்றவை. அவை உட்சக்ஸ், கோபெர்ஸ், சிப்மங்க்ஸ் போன்ற “தொல்லை தரும் விலங்குகளாக” கருதப்படுகின்றன. தேவன் ஒரு சிட்டுக்குருவியின் மரணத்தையும் கவனிக்கிறார். சிருஷ்டித்த அனைத்தையும் கண்காணிக்கிறார். தேவனுடைய உயிரினத்தின் உயிரற்ற கண்களை காணும் போது நான் செய்த காரியத்தை நினைத்து இப்போது அவமானப்படுகிறேன். அது தேவனுடைய இருதயத்தின் பிரதிபலிப்பாக இருக்கலாம். ஆனால், நான் ஆண்மையற்ற உணர்வுடன் கடந்து போனேன்.
சிருஷ்டிப்பில் தேவனுடைய அதிசயத்தை நாம் எவ்வாறு கொண்டாட முடியும்? – சிருஷ்டிகரின் நிலவுரிமையாளர்களாக நாம் ஒப்புக்கொண்டு தேவன் மகிமைப்படுமாறு அவருடைய பிரதேசத்தை எவ்வாறு ஆக்கிரமிப்பது, கிரியைகளை கையாள்வது என தேவனுடைய வார்த்தைகளை ஆராய்ந்து ஜெபத்துடன் கருதவேண்டும்.
தேவன் விரும்புகிறார் மற்றும் பராமரிக்கிறார் – கர்த்தர் எல்லார் மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லா கிரியைகளின் மேலும் உள்ளது. ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர். நீர் உமது கையை திறந்து சகல பிராணிகளின் வாஞ்சை யையும் திருப்தியாக்குகிறீர். கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும் தமது கிரியைகளில் எல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார் (சங். 145:9,13,16-17).
தேவன் தாம் சிருஷ்டித்த அனைத்தின் மீதும் நேசத்தையும் கருணையையும் காட்டுகிறார் என்று சங்கீதக்காரர் எத்தனை தடவைகள் அறிக்கையிடுகிறார் என்பதை கண்டுபிடித்த போது நான் ஆச்சரியப்பட்டேன். தேவன் தம் படைப்பை பராமரிப்பது என்பது ஒரு தாய் தான் பெற்ற பிள்ளையை பராமரிப்பது போல என்று சில எபிரேய பதங்கள் குறிப்பிடுகின்றன.
தேவன் மனிதர்கள், விலங்குகள், செடிகள், பூமியின் பலமான சக்திகளின் மீது காட்டும் இரக்கம், பராமரிப்பு பற்றி சங்கீதம் 65,104,145,147 மற்றும் 148 வாசிக்கவும். மலைப்பிரசங்கத்தில் தேவன் மனிதனை தம் படைப்பில் மேலானவனாக எடுத்துரைத்தாலும் மத்தேயு (6:25-34). முழு வேதாகமத்திலும் ஆதியாகமத்தில் இழந்த பரதீசிலிருந்து வெளிப்படுத்தலில் மீண்ட பரதீசுவரை_தேவன் மனிதனில் மட்டுமல்ல, சிருஷ்டித்த அனைத்தையும் பொக்கிஷமாகவும் அனைத்திலும் மகிழ்ச்சியையும் காண்கிறார்.
பயணப்போதகர் ஜான் உல்மான் அமெரிக்கப் புரட்சிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தமது கடற்பயணத்திற்கு பின்பு நாட்குறிப்பில் அவரது நீண்ட பயணத்தால் வளர்ப்பு பறவைகள் கவனிப்பாரற்று இறந்துவிட்டன என்று குறிப்பிட்டார். அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வு கொடுத்து சிட்டுக்குருவிகளையும் பராமரிக்கும் நன்மையின் ஊற்றை நினைவு கூருகின்றேன். தேவனுடைய அன்பு மிகவும் நேர்த்தியானது. அவருடைய அரசு காட்டும் மென்மையை நாமும் அனுபவித்து சிறந்த சிருஷ்டிகரின் விலங்குகளின் படைப்பின் இனிமையை நம் அரசிலும் குறையாது பராமரிக்க வேண்டும். சங்கீதம் 145:9 “கர்த்தர் எல்லார் மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லா கிரியைகளின் மேலும் உள்ளது,” என அறிவிக்கிறது. த டிரேஷரி ஆப் டேவிட் என்னும் புத்தகத்தில் சார்லஸ் ஹாட்டோன் ஸ்பர்ஜன்,” இவ்வசனத்தின் மூலம் நாம் விலங்குகளுக்கு இரக்கம் காட்டும் கடமையை தர்க்கரீதியாக விவாதிக்கலாம். தேவனுடைய பிள்ளைகள் இரக்கம் காட்டும் பிதாவை போல இருக்க வேண்டும் அல்லவா? (ப. 379).
சிருஷ்டிப்பில் தேவனுடைய அதிசயத்தை நாம் எவ்வாறு கொண்டாட முடியும்? அனைத்து சிருஷ்டிக்கும் தேவன் காட்டும் பராமரிப்பையும் இரக்கத்தையும் ஒப்புக்கொண்டு அந்த பராமரிப்பை அவற்றுக்கு முறைகேடு நேராமல் செய்ய வேண்டும்.
அவற்றின் மூலம் தேவன் தம்மை வெளிப்படுத்துகிறார் – வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்கு பகல் வார்த்தைகளை பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவை தெரிவிக்கிறது அவைகளுக்கு பேச்சும் இல்லை, வார்த்தையும் இல்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை (சங். 19:1-3 ).
சங்கீதம் 19ல் தாவீது, தேவன் நம்மிடம் இரு புத்தகங்கள் மூலம் பேசுகிறார் என்று நினைவூட்டுகிறார். ஒன்று அவருடைய வேதம் (வ. 7 :11), அடுத்த வெளிப்படுத்துதல் என்பது சிருஷ்டிப்பின் தலைசிறந்த படைப்பு ஆகும். அவை ஒவ்வொரு மனிதனுக்கும் தேவனை வெளிப்படுத்துகின்றன. தேவன் ஆதிகாலம் தொட்டே, எல்லா நேரங்களில், அப்படிப்பட்ட விழிப்புணர்வுடன் தான் மக்களை சிருஷ்டித்தார். இயற்கை உலகம் மூலம் தேவன் பேசுவதை கேட்காதவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். பவுல் அப்போஸ்தலர் ரோமாபுரியில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இதை தெள்ளத் தெளிவாக விளக்குகிறார். சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவ கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனைக் குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படி என்றால் காணப்படாதவை களாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே உலகம் உண்டானது முதற்கொண்டு தெளிவாய் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்கு சொல்ல இடமில்லை (ரோமர் 1:18-20).
தேவன் தம்மை இயற்கை உலகம் மூலம் வெளிப்படுத்துகிறார் என்ற பவுலின் வாதம் கவர்ச்சிகரமான, பண்டைய சோகமான கவிதையான யோபுவில் கண்டறியப்பட்டது. யோபுவின் நாடகம் விரிவடையும் போது நாம் அவரை வேதனையில் துடிப்பவராக, நண்பர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவராக, தம் அவல நிலையை விளக்க முடியாத இயலாமையில் குழப்பமான மனநிலையில் காயப்படுத்தப்பட்டவராக காண்கிறோம். தேவனுக்கு ஊழியம் செய்த அவர் தேவனால் கைவிடப்பட்டவராய், காட்டிக் கொடுக்கப்பட்டவராய் உணர்ந்தார். அவர் கோபப்பட்டார் ஏனெனில், தேவன் நியாயமற்ற முறையில் அவரை துன்புறுத்துவதாகவும், அவரது நண்பர்கள் அவர் இரகசிய பாவத்தால் துன்புறுவதாக நினைப்பதற்கு தேவன் அனுமதித்தார் என்றும் நினைத்தார்.
இறுதியாக யோபுவும் அவர் நண்பர்களுக்கும் இடையே நடந்த நீண்ட விரக்தியடைந்த, கோபமான உரையாடலுக்கு பின்னர் தேவன் தாமே பேசினார். அப்பொழுது கர்த்தர்: பெரும் காற்றில் இருந்து உத்தரவாக அவரை இயற்கை உலகை மீண்டும் காணுமாறு சவால் விடுத்தார். தேவன் யோபுவிடம் சூழலியல், விலங்குகள், வானிலை வடிவங்கள் மற்றும் பருவங்களை கருதச் சொன்னார், யோபு தம்மைத்தாழ்த்தினார். தேவன் யோபுவிடம் மனதைத் துளைக்கும் கேள்விகளை தொடர்ந்து கேட்டார். அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்? இப்போதும் புருஷனை போல் இடைக் கட்டிக்கொள்; நான் உன்னை கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு. நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிற போது நீ எங்கே இருந்தாய்? நீ அறிவாளி ஆனால் அதை அறிவி (யோபு 38:2-4).
கேள்விகளின் நடுவில் தேவன் யோபுவை பேச அனுமதித்தார். ஆனால் அழிவுற்ற தலைவரால் முணுமுணுக்க மட்டுமே முடிந்தது, “இதோ நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயை பொத்திக் கொள்கிறேன்” (யோபு 40:4). சிருஷ்டிகரின் விசாரணையின் நோக்கமானது யோபுவுக்கு இயற்கை உலகை புரிய வைத்து சிருஷ்டிகர் எவ்வளவு ஞானமும் வல்லமையும் மிக்கவர் என்பதை உணர்த்தி அவர் யோபுவுக்கு துன்பத்தை அனுமதித்ததன் நோக்கத்தையும் அறிவார் என்று உணர்த்தினார். யோபு தம்மை தாழ்த்தி குற்றத்தை ஒத்துக் கொண்டார், “அறிவு இல்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்கு தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்” (யோபு 42: 3).
தேவன் தமது வாய்மொழியாக பேசவில்லை என்றாலும் சிருஷ்டிப்பு தன் பேச்சுத் திறனால், நம்மை சிருஷ்டிகரின் முன்பு அமைதியான ஆச்சர்யத்தில் நிற்க வைக்கிறது: அடிப்படை பொருளின் கூறுகள் கற்பனை செய்யப்படாத வகையில் விளங்குகிறது, எண்ணிலடங்கா கொத்துக்களாக விண்மீன் திரள்கள் மிக விரிவாக உள்ளன. மனிதன் வரையறுத்த ‘ஒளி ஆண்டுகள்’ எல்லாம் அர்த்தமற்றவை. சிறு மையானது இன்னும் சிறிதாகவும் பெரியது இன்னும் பெரிதாகவும் ஆகிறது. மனித புரிந்துகொள்ளுதலுக்கு கொண்டுவரும் முயற்சி எப்போதும் என்ன செய்ததோ அதையே செய்கிறது: தேவனை பார்த்து பிரமிப்புடனும் அடக்கத்துடனும் ஆராதிக்கிறோம் அல்லது நாம் “சத்தியத்தை அடக்கி வைக்கிறோம்” (ரோமர் 1:18), மற்றும் சுய குருட்டாட்டத்தில் அலைகிறோம். சிருஷ்டிப்பு என்பது தேவனின் ‘மற்றொரு புத்தகம்’ என்ற பார்வையை கிளாசிக்கல் இறையியல் ஆதரிக்கிறது.
தேவன் தம்மை இயற்கை உலகம் மூலமாக வெளிப்படுத்துவதை ஐசக் வாட்ஸ் என்பவர், “ஐ சிங் த மைட்டி பவர் ஆப் காட்” என்ற பாடலில் படம்பிடித்துள்ளார்.
தேவனின் சர்வ வல்லமையை நான் பாடுவேன். மலைகள் எழும்பவும்
சமுத்திரங்கள் பெரிதும் விஸ்தாரமாயும் நிறையவும்
வானங்கள் திரையைப் போல் விரியவும் செய்த
தேவனின் சர்வ வல்லமையை நான் பாடுவேன்.
பகலை ஆள சூரியனைப் படைத்த;
அவரின் ஞானத்தை பாடுவேன்.
அவருடைய கட்டளையால் சந்திரன் பூரணமாய் பிரகாசிக்கும்,
அனைத்து நட்சத்திரங்களும் கீழ்ப்படியும்.
பூமியில் ஆகாரத்தை நிரப்பிய;
தேவனின் நன்மையை நான் பாடுவேன்.
அவர் தமது வார்த்தையால் சிருஷ்டியை படைத்தார்.
தேவன் அது நல்லது என்று கண்டார்.
கர்த்தாவே உமது அதிசயங்கள் எவ்வாறு காட்சியளிக்கின்றன
நான் எங்கு பார்த்தாலும்: நான் பூமியைப் பார்த்தாலும்
வானத்தைப் பார்த்தாலும்!
உம் மகிமையை அறியாத செடியோ பூவோ இல்லை;
உமது சிங்காசனத்தில் நீர் கட்டளையிடும் போது;
மேகங்கள் எழும்புகின்றன,
புயல்கள் வீசுகின்றன.
உம்மிடமிருந்து அனைத்து உயிர்களும் ஜீவனை பெறுகின்றன.
அவை எப்பொழுதும் உம் பராமரிப்பில் உள்ளன.
மனிதர்கள் வாழும் எல்லா இடங்களிலும் தேவனாகிய
நீர் இருக்கிறீர்.
சிருஷ்டிப்பில் தேவனுடைய அதிசயத்தை நாம் எவ்வாறு கொண்டாட முடியும் ? சிருஷ்டிப்பை கவனிக்கும் போதும் மரியாதையுடன் பார்க்கும் போதும் தேவனையும் அவரின் குணத்தையும் நாம் எண்ணற்ற வழிகளில் கண்டுபிடிக்க முடிகின்றது.
நாம் அதை சார்ந்து இருக்கிறோம் – நான் மழை இல்லாதபடிக்கு வானத்தை அடைத்து அல்லது தேசத்தை அழிக்க வெட்டு கிளிகளுக்கு கட்டளையிட்டு அல்லது என் ஜனத்திற்குள் கொள்ளைநோயை அனுப்பும்போது என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டு திரும்பினால் அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு அவர்கள் பாவத்தை மன்னித்து அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன் (2 நாளா. 7:13-14). பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்கு புல்லையும் மனுஷனுக்கு உபயோகமான பயிர் வகைகளையும் முளைப்பிக்கிறார். மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும் அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும் மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார் (சங். 104 :14-15).
பூமியின் கனிகள் இல்லாமல் நம்மால் ஜீவிக்க முடியாது. இந்த உண்மையை, தேவனுடைய சிறப்பான வெளிப்பாட்டில் (வேதாகமத்தில்) உள்ள நூற்றுக்கணக்கான பத்திகள் ஆதரிக்கின்றன. பொதுவான வெளிப்பாட்டை (தேவனின் கிரியைகளின் புத்தகம்) நமக்கு இந்த சத்தியத்தை தினமும் நினைவுபடுத்துகிறது. நம்முடைய ஆரோக்கியத்திற்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் சிருஷ்டிப்பின் கனிகளை நாம் முழுவதுமாக சார்ந்து இருக்கிறோம்.
இந்த சார்ந்திருத்தலால் தான், நாம் வேதாகம கோட்பாடான விதைத்தலுக்கும் அறுவடைக்கும் கவனம் தர வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தக் கொள்கையின் சாராம்சம், நாம் முட்டாள்தனமான மற்றும் பாவ நடத்தையை விதைத்தால், எதிர்மறையான விளைவுகளை அறுவடை செய்வோம். சில நேரங்களில் அந்த விளைவுகள் தேவனின் நேரடி நடவடிக்கையான பாவத்திற்கான தண்டனையாகும். உதாரணத்திற்கு ஆதாம் ஏவாளின் கீழ்ப்படியாமையால் சிருஷ்டிப்பின் மீது வந்த சாபம்_ அதற்காக இன்று வரை நாம் எதிர்மறை விளைவுகளை அறுவடை செய்கிறோம் மற்ற நேரங்களில் அறியாமை அல்லது கவனமற்ற நடத்தையின் பலனை நாம் அறுவடை செய்கிறோம். பொருளாதார வீழ்ச்சியின் போது அமெரிக்காவின் புழுதிப்புயல் (டஸ்ட் பௌல்) வீசிய ஆண்டுகள் மற்றும் சோவியத் யூனியனின் செர்னோபில் அணு உலை விபத்து இவை எல்லாம் இம்மாதிரியான அறுவடைக்கு உதாரணங்கள் ஆகும்.
அடிக்கடி இயற்கை மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட விளைவுகள் நிகழ்கின்றன. ஒரு முக்கிய உதாரணமாக இஸ்ரவேலர் ஓய்வுநாள் சட்டத்தை பின்பற்றாததன் தோல்வியின் விளைவு. ஓய்வு நாளை பின்பற்றுவதற்கு இயற்கைக்கு மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரணங்கள் உண்டு இயற்கையாக ஓய்வு நாளின் சட்டப்படி நிலம் கடினப்பட்டு உழைத்து உற்பத்தி தருவதால் ஓய்வு வேண்டும். மக்களுக்கும் மிருகங்களுக்கும் வேலையிலிருந்து ஓய்வு தேவை.
ஓய்வுநாளை அனுசரிப்பதற்கு ஆவிக்குரிய காரணங்களும் உள்ளன. ஓய்வுநாளை ஆசரிக்க மீறினால் தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்டு நியாயத் தீர்ப்பை வழங்குவார். யூதாவின் சிறையிருப்புக்கான காரணங்களை 2 நாளாகமம் 36:20-21ல் வாசிக்கவும்: பட்டயத்திற்கு தப்பின மீதியானவர்களை அவன் பாபிலோனுக்கு சிறைப்பிடித்து போனான்; பெர்சியா ராஜ்யபாரம் ஸ்தாபிக்கப்படும் மட்டும் அங்கே அவர்கள் அவனுக்கும் அவன் குமாரருக்கும் அடிமைகளாய் இருந்தார்கள். கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு தேசம் தன்னுடைய ஓய்வு வருஷங்களை ரம்மியமாய் அனுபவித்து தீருமட்டும் அது பாழாய் கிடந்த நாளெல்லாம், அதாவது எழுபது வருஷம் முடியுமட்டும் ஓய்ந்திருந்தது.
தேவன் நம்முடைய ஆவிக்குரிய இயற்கையை பராமரிப்பதில் அக்கறையாக இருக்கிறார். நாம் யோசிக்காமல் தேவ கட்டளையை மீறி தேவன் நமக்களித்த “வெளிப்புற உலகை” பராமரிக்கவில்லை என்றால் நம் “உள் உலகம்” பாதிக்கப்படும்.
சிருஷ்டிப்பில் தேவனுடைய அதிசயத்தை நாம் எவ்வாறு கொண்டாட முடியும்? சிருஷ்டிப்பு என்பது இயற்கையானது, அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வின் பொருள் ஆதாரமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உணர்ந்து அவற்றை பாதுகாக்கவும் பராமரிக்கவும் வேண்டும்.
நாம் அதன் உக்கிராணக்காரர்கள் – தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார் (ஆதி. 2:15). அறியாதவனாய் இருந்து அடிகளுக்கு ஏதுவானவைகளை செய்தவனோ சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகம் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய் கேட்பார்கள் (லூக். 12: 48).
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை வளர்த்த காலத்தை நன்றாக அறிவர். ஒவ்வொரு நாளின் பெரும் பொழுதும் குழந்தைகளின் சேவையிலேயே கழிந்து, இரவில் ஓய்ந்து படுக்கையில் விழுவர். குழந்தை வளர்ப்பின் காலத்தில், ஒவ்வொரு செயலும் குழந்தைகளுடன் தொடர்புடையதாகவே இருக்கும். உங்கள் குழந்தைகள் மீது உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று மகிழலாம். ஆனால் அழுக்குத் துணியை மாற்றும்போது அது கேலி ஆக மாறலாம் அல்லது அவசர சிகிச்சையின் போது மருத்துவர் உடைந்த கைக்கு கட்டுப் போடும் போது பயந்த குழந்தையை நாம் அமைதிப்படுத்தும்போது நமக்கு நாமே “இது தான் பொறுப்பு” என மனம் அசை போடும்.
சிருஷ்டிப்பில் நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவைப் பற்றிய முந்தைய குறிப்புகள் அனைத்தும் ஒரே மாதிரியான யதார்த்தத்திற்கு கொண்டு செல்கின்றன. தேவன் மனிதனை அனைத்து ஆற்றல்களையும் வளர்க்க பொறுப்பாளியாக நியமிக்கிறார். அவர் இயற்கை உலகை கட்டினார். இதை தாவீது சங்கீதம் 8ல் கவிதையாக விவரிக்கிறார்: நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவன் ஆக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். உம்முடைய கரத்தின் கிரியைகளின் மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்கு கீழ்ப்படுத்தினீர். ஆடுமாடுகள் எல்லாவற்றையும் காட்டு மிருகங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமி எங்கும் எவ்வளவு மேன்மை உள்ளதாய் இருக்கிறது (வ. 5-9).
ஆற்றல் வளம் மிக்க நம் குழந்தைகளை அழிவு சக்திகள் சூழ்ந்து இருப்பது போல, பெரிய பந்து போன்ற ஆற்றல் வளம் மிக்க பூமியையும் அழிவு சக்திகள் சூழ்ந்துள்ளன. ஆதாமின் பாவத்தின் நிமித்தம் தேவன் பூமியை சபித்தார். அதனால் அழியும் தன்மையுள்ள இராஜ்ஜியத்தில் சரியான ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள நாம் கடினமாக உழைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
சில வேதாகம அறிஞர்கள், மானுடம் என்பது பூமியில் “ஊழியக்கார இனம்” என்று சரியாக கண்டறிந்தார்கள். தேவனாகிய சிருஷ்டிகர் நமக்கு ஆளுகையை தந்தாலும் ஆளுகை தன்மையில் இயேசுகிறிஸ்து ஆகிய ஊழியக்காரர் ராஜாவை நாம் பின்பற்ற வேண்டும். அவர் சொன்னார், “அப்படியே மனுஷகுமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யவும் அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்” (மத். 20:28). நம் ஆளுகையில் நாம் தேவனின் ஊழியக்காரர்கள் என்று நாம் கட்டாயமாக புரிந்து கொள்ள வேண்டும் அதன் அர்த்தமாவது நாம் இடையில் உள்ள ஊழியர்கள். நாம் பூமியை சிருஷ்டித்தவருக்கும் அவர் சிருஷ்டிப்புக்கும் ஊழியம் செய்கிறோம்.
இந்த உண்மை ஆதியாகமம் 2:15ல் முன்னிலைப்படுத்தப்படுகிறது. பூமியை பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். எபிரேய வார்த்தைகளின் அர்த்தமாவது, யாரோ ஒருவருக்கு வேலை செய்தல், யாரோ ஒருவருக்கு ஊழியம் செய்தல், உயிரைக் காப்பாற்றுதல் மற்றும் கவனிப்பது, காவல் மற்றும் நிலத்தை பாதுகாப்பது ஆகும். ஆங்கிலத்தில் நம் பங்கை குறிக்கும் சொல் ஸ்டீவார்ட்ஷிப் (உக்கிராணக்காரர்).
எஜமான் யாரிடம் பொறுப்பை கொடுத்துள்ளாரோ அவர்தான் உக்கிராணக்காரர். வேதாகமம் தேவனுக்கு நாம் உக்கிராணக்காரர்கள் என்று குறிப்பிடுகின்றன:
- நம் எஜமானின் சொத்தின் விளைச்சலை அதிகரிக்க நாம் எதிர்பார்க்கப்படுகிறோம். அவை வீணாதல் மற்றும் கெட்டுப்போதலை தடுக்கும் (ஆதி. 1: 28; மத். 25:14 -30; 16:1-.2)
- நாம் மற்றவர்களை கையாள்வதில் நம் எஜமானை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும் (மத். 10:25;18:23-35)
- நாம் நமது எஜமானருக்கு விசுவாசமாய் நம் கடமைகளை சரியான நேரத்தில் ஆற்றவேண்டும் (மத். 24:45-51; 25:21, 23)
- நாம் நம் எஜமானருக்கு நேரடியாக பதில் அளிக்க கூடியவர்களாக இருக்கிறோம் அவருக்கு கீழ்ப்படியவில்லை எனில் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் (ஆதி. 2:16-17; 3:14-19; மத். 25:14-30; லூக். 12:45-48; 16:1-2; ரோம. 14:12)
- நம் எஜமானருக்கு நன்றி உணர்வை தொடர்ந்து வெளிப்படுத்த நமக்கு காரணமிருக்கிறது (சங். 1-150; 1:21, 2 கொரி. 9:10 -11; பிலி. 4: 6)
- நாம் நம் எஜமான் திரும்ப வர எதிர்பார்க்கிறோம் (மத். 24:45-51; லூக். 12:35-38)
தேவனின் சிருஷ்டிப்பை உக்கிராணக்காரராய் புரிந்து கொள்வது நம்மை அடக்கமாக வைக்கும். நமக்கு “பூமி காப்பாளர்களாய்” மிகப்பெரிய பொறுப்பும் சந்தர்ப்பமும் வழங்கப்பட்டுள்ளன. அதன் உபயோகத்திலும் வளர்ச்சியிலும் தேவனின் நாமத்தை கனப்படுத்த வேண்டும். நவீன சமுதாயத்தில், தொழிலாளர் பிரிவினாலும், பொருளாதார சூழ்நிலைகளாலும் பூமியின் மீது செல்வாக்கும், அதன் பலனளிக்கும் திறன் பற்றிய விழிப்புணர்வும் இல்லை. இன்று நாம் உணவுக்காக நேரடியாக விவசாயம் செய்வதில்லை_ யாரோ ஒருவர் செய்கிறார். உணவிற்காக நாம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் மறைமுகமாக நிலத்தைப் பண்படுத்தி, உரமிட்டு, அறுவடை செய்து, போக்குவரத்து மூலம் நமக்கு உணவு கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதே உண்மைதான் நம் உடை, இருப்பிடம், மற்ற அவசிய தேவைகள், விருப்பங்களுக்கும். சிருஷ்டிப்பின்மீது அந்த செயல்பாடுகள் ஏற்படுத்தும் தாக்கத்தை கருதி நாம் அன்றைய விவசாயி போல விடாமுயற்சியுடன் இருக்கவேண்டும். அவர் நிலத்தை சரியாக பராமரிக்கவில்லை எனில் அவர் வாழ்விற்கும் அவரின் உக்கிராணத் திறனை சார்ந்தவர்களின் வாழ்விற்கும் அச்சுறுத்தல் உண்டு என்ற உண்மையை தினமும் எதிர்கொண்டார்.
சிருஷ்டிப்பில் தேவனுடைய அதிசயத்தை நாம் எவ்வாறு கொண்டாட முடியும்? இறுதியில் நாம் தேவனுடைய சிருஷ்டிப்பின் விசுவாசமான அல்லது அவிசுவாசமான உக்கிராணக்காரர்களாக நாம் நம் எஜமானுக்கு நம் தீர்வுகள் மூலமாக நாம் பதிலளிக்க கூடியவர்களாக இருக்கிறோம். நமது நோக்கம் தேவனுடைய ”நல்ல பூமி காப்பாளர் ஒப்புதல் முத்திரை”ஆகும்.
கர்த்தாவே, தேவரீர் மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருகிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப் பட்டவைகளுமாய் இருக்கிறது என்றார்கள் (வெளி. 4:11).
அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழும் இருக்கிற சிருஷ்டிகள் யாவும் சமுத்திரத்திலுள்ளவைகளும் அவற்றுள் அடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக் கேட்டேன் (வெளி. 5: 13). சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கிறிஸ்துவ கல்லூரியில் படிக்கும்போது எல்லோ ஸ்டோன் மற்றும் த கிராண்ட் டெட்டான்ஸ்க்கு ஆய்வு சுற்றுப்பயணம் செல்ல வாய்ப்பு கிட்டியது. அன்று மதியம் நடந்த நிகழ்ச்சியை மறக்கவே முடியாது டெட்டான்ஸ்க்கு கிழக்கில் குள்ளமான பீடபூமியில் அடிக்கடி புகைப்படம் எடுக்கப்பட்ட ஒரு தேவாலயம் உள்ளது. அதன் அருகில் வாகனம் நிறுத்தும் இடத்தில் வேனை நிறுத்தினோம்.
நம்முடைய குழு அப்பொழுது தனியாக இருந்தது, அதனால் உயிரியல் (பயாலஜி) பேராசிரியர் ஒலிப்பேழையை வாகனத்தில் உள்ள நாடாப் பதிவில் (டேப் ரெக்கார்டர்) போட்டார். அவர் எங்களை இறங்கி இடைவெளிவிட்டு நிற்கச் சொன்னார். எல்லா கதவுகளையும் திறந்து விட்டு பாட்டை சத்தமாக வைத்தார். “ஹவ் கிரேட் தோ ஆர்ட்!” என்ற பாடல் ஒலித்தது. அந்த அற்புதமான பாடல் என் ஆன்மாவை உணர்வுரீதியாக தூண்டி கண்களில் கண்ணீர் நிரம்பியது :
அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலும் இருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகள் என்று சொல்லியும் பைத்தியக்காரர் ஆகி அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்தில் உள்ள இச்சைகளினாலே ஒருவரோடு ஒருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத் தக்கதாக தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரை தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென் (ரோம. 1:21-25).
சிருஷ்டிப்பு பிரமிக்கத்தக்கது ஏனெனில் சிருஷ்டிகரின் அளவிடமுடியாத ஞானத்தையும் வல்லமையையும் பிரதிபலிக்கின்றது. அது அதிசயத்தையும் இரகசியத்தையும் உள்ளடக்கியது. வேதாகமத்தின்படி இயற்கை உலகமானது அனைத்து தீர்க்கதரிசிகளுடனும் கைகோர்த்து அனைத்து மக்களுக்கும் எல்லா இடங்களிலும், காலங்களிலும் சிருஷ்டிகரின் மகிமையை உரைக்கின்றன.
வரலாற்று ரீதியாக சூரியன், சந்திரன், மிருக ஜாதி, சமுத்திரங்கள், “அன்னை பூமி” முதலானவைகளுக்கு சிருஷ்டிகருக்கு கிடைக்கவேண்டிய ஆராதனைக்கு எதிரான போட்டியில் ஆராதனை கிடைக்கின்றன.
எனினும், சிருஷ்டிப்பை பேச அனுமதித்தால், சூரியன், நட்சத்திரங்கள், மலைகள், சமுத்திரங்கள், செடிகள், மிருகங்கள் அனைத்தும் ஒரே மெய்யான தேவனின் ஈடு இணையற்ற மகிமையை அறிக்கையிடும். சிருஷ்டிகரின் ஆராதனையை ஊக்குவிக்க சிருஷ்டிப்புக்கு உள்ள இந்தத் திறனை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் விசுவாச பாடல்கள் கொண்டாடுகின்றன. ஹென்றி வான் டைக் அவர்களின் “ஜாய்புல், ஜாய்புல், வி அடோர் தீ” என்னும் பாடலையும், பீதோவன் அவர்களின் பிரம்மாண்ட இசையான நைன்த் சிம்பனியைக் கருதவும்:
இவைபோன்ற பல துதிப்பாடல்கள், வேதாகமத்தின் சத்தியங்களை கவித்துவமாக வெளிப்படுத்துகின்றன. அவை இயற்கை உலகமானது பல வழிகளில் தேவன் தம் கரங்களால் கட்டிய தேவாலயம் போன்று இருக்கிறது என்று குறிப்பிடுகின்றன. அந்த தேவாலயத்தில் வெப்பமான வசந்த கால காலையில் நுழைந்தால், அனைத்து இயற்கையும் நம்முடன் சேர்ந்து சிருஷ்டிகரை ஆராதிப்பதை நம்மால் உணர முடியும். சங்கீதக்காரர் போல மரங்கள் தங்கள் கைகளினால் கை தட்டுவது போலவும், மலைகளும் ஓடைகளும் தேவனை துதிப்பதையும் நம்மால் கற்பனை செய்ய முடியும். அவை எதற்காக சிருஷ்டிக்கப்பட்டதோ அதை செய்து தேவனை துதித்து ஊழியம் செய்கின்றன. அதேபோல சாபத்தாலும் பாவமான மானுடத்தின் முறை கேட்டாலும் ஓடுக்கப்பட்ட இயற்கை உலகிற்கு நாம் உக்கிராணக்காரரின் பரிவு காட்ட வேண்டும். சிருஷ்டிப்பு கதறி கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் கிடைக்கும் இறுதியான, முழுமையான மீட்பிற்காய் ஆவலோடு காத்திருக்கிறது (ரோம. 8:18-23).
சிருஷ்டிப்பில் தேவனுடைய அதிசயத்தை நாம் எவ்வாறு கொண்டாட முடியும்? நம் பரஸ்பர சிருஷ்டிகர், காப்பவர், மீட்பருக்கு இயற்கை உலகுடன் சேர்ந்து துதியை செலுத்துகிறோம். இயற்கை உலகுடன் சக ஆராதனைக்காரர்களாய் நம் தாழ்மையான நிலையை அனுபவித்து, அங்கீகரிப்பதன் மூலம்கொண்டாடுகிறோம்.
அது சாட்சி இடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது
கர்த்தரை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு, கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் உள்ள பல தேசங்களிலும் இருந்து சேர்க்கப்பட்டவர்கள் அப்படி சொல்லக்கடவர்கள் (சங். 107:1-3). என் நண்பர் பல்கலைக்கழகத்தில் சூழலியல் பேராசிரியர். அவர் ஓர் உறுதியான கிறிஸ்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு சூழலியலில் கிறிஸ்தவ பார்வை என்பது பற்றி பேசினார். பார்வையாளர்களில் தேசிய அளவில் செல்வாக்கு பெற்ற யூத ரபியும் ஒருவர். முடிவிலே ரபி, “உங்கள் பேச்சு ஏறக்குறைய என்னை நம்ப வைத்துள்ளது. நான் இயேசுவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார். என் நண்பர் அந்த வாக்குமூலத்தை கேட்டு வியப்படைந்தார். அவருக்கு சிருஷ்டிப்பில் கிறிஸ்தவ பார்வையின் முக்கியத்துவத்தை கிறிஸ்தவர்கள் சிறிது புரிந்து கொள்கிறார்கள். கிறிஸ்தவரல்லாதவர்கள் புரிந்து கொள்வதில்லை என்பது உறுதியானது.
அந்த அனுபவத்திலிருந்து உலகம் கிறிஸ்தவ சத்தியத்தை அவிசுவாசிகளிடம் எடுத்துரைக்கும் போது அது அவர்களை கேட்பதற்கு கட்டாயப்படுத்துகிறது. வேதாகம பார்வையில் பூமியின் தோற்றம், பொருள் மற்றும் முடிவு இத்துடன் முழு வேதாகம சேர்க்கையும் மட்டுமே பாவத்தினால் உலகிற்கு ஏற்பட்ட சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கு ஒரே தீர்வாக அமையும். சார்லஸ் கோல்சன் தம்முடைய த பாடி என்னும் புத்தகத்தில் ஒத்துக்கொள்கிறார்:
நம் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் நாம் சத்தியத்திற்காக போராடுகிறோம். அது சக்திக்காக அல்லது நவநாகரீக காரணத்திற்காக அல்ல, ஆனால் பணிவுடன் தேவனுக்கு மகிமை ஏற்படத்தான் செய்கிறோம். இக்காரணத்தினாலேயே கிறிஸ்தவர்கள் தான் மிகத் தீவிரமான சூழலியலாளர்கள் ஆவர். ஆந்தைகளை காப்பாற்றியதாலோ அல்லது மரத்தின் பட்டையில் உயிர்காக்கும் மருந்து கிடைப்பதால் மரங்களை வெட்டுவதை தடுப்பதாலோ கிடையாது. ஆனால் நாம் தோட்டத்தை காக்க கட்டாயப்படுத்தப்பட்டோம் என்பதால்தான். தேவன் இயற்கையில் பிரதிபலித்த அழகையும் பிரம்மாண்டத்தையும் கொள்ளை அடிக்காமல் காப்பதற்கு தான். நாம் விலங்குகளை பராமரிக்க வேண்டும். நமக்கு திமிங்கலங்கள் சகோதரர்கள் என்பதற்காக அல்ல, ஆனால் விலங்குகளும் நாம் ஆளுகை செய்யும் தேவனுடைய ராஜ்யத்தின் ஒரு பகுதியாகும் (ப. 197).
வருத்தத்துக்குரிய விஷயம் என்னவெனில், நமக்கு சிருஷ்டி மீது உள்ள முக்கிய பங்கை பற்றிய வேதாகம கோட்பாடுகளை சபை சரியாக புரிந்துகொண்டு நிரூபிக்கவில்லை. பிரான்சிஸ் ஸ்சாபெர், ‘த கிரிஸ்டியன் வியூ ஆப் ஈகாலஜி’ என்ற புத்தகத்தில் தேவனின் சிருஷ்டிப்பு அனுபவிக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பு சபைக்கு உள்ளது என்கிறார்: ஒரு மெய்யான வேதாகம கிறிஸ்துவத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு சரியான பதில் உண்டு. அது தேவன் படைத்த சிருஷ்டிப்பின் சத்தியத்திலிருந்து இயற்கைக்கு சமநிலை, ஆரோக்கியமான அணுகுமுறையை அளிக்கிறது; மனிதன் பாவத்தில் விழுந்ததால் இயற்கையும் பாடுகளை அனுபவிக்கிறது கிறிஸ்துவின் மீட்பின் சத்தியத்தால் இயற்கை குணம் பெறும் என்ற நம்பிக்கையை தருகிறது. கிறிஸ்துவை சார்ந்த அறிவியல், தொழில்நுட்பத்தின் மூலம் கவனத்துடன் இயற்கை குணமாகிறதை பார்க்க வேண்டும். அது போல் எதிர்காலத்தில் இயற்கை முழுமையாக குணமடைய கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருக்க வேண்டும். (பொல்யூஷன் அண்ட் த டெத் ஆப் மேன்: த கிரிஸ்டியன் வியூ ஆப் ஈகாலஜி, ப. 81).
—பிரான்சிஸ் ஸ்சாபெர்
கிறிஸ்துவை பின்பற்றுபவர்களாக நாம் தேவனுடைய கிரியைகளை பாதுகாத்து பராமரிக்காமல் தேவனை நேசிக்கிறோம் மதிக்கிறோம் என்றால் நாம் சத்தியமான தேவ வார்த்தை உலகின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் என்று உலகிற்கு வெளிப்படுத்த உள்ள வாய்ப்பை இழக்கிறோம். நாம் ஆவிக்குரிய இரத்த சோகையில் துன்பப்படுகிறோம். ஏனென்றால் தேவனுடைய போதனையை கிறிஸ்தவ முறைப்படி வாழாததால் தான். நாம் தேவனுடைய சிருஷ்டிப்புக்கு கனத்தை செலுத்தாமல் சிருஷ்டிகருக்கும் இரட்சகருக்கும் கனத்தை செலுத்த முடியாது என புரிந்துகொள்ளவேண்டும். நாமும் சிருஷ்டிப்பும் அனைத்திலும் மறுசீரமைப்பும் நல்லிணக்கத்தையும் அடைகிறோம் (அப். 3: 20-21; கொலொ. 1:20 ).
சிருஷ்டிப்பில் தேவனுடைய அதிசயத்தை நாம் எவ்வாறு கொண்டாட முடியும்? சிருஷ்டிகரின் கிரியைகள் அனைத்திலும் அக்கறை காட்டவேண்டும் இந்த உலகிற்கு நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் நாம் நிரூபிக்க வேண்டும்.
அதை நம் அயலாருடன் நாம் பகிர வேண்டும்
உன் ஜனங்களுக்கு உள்ளே அங்குமிங்கும் கோள் சொல்லி திரியாய் ஆக; பிறனுடைய இரத்தப் பழிக்கு உட்பட வேண்டாம்; நான் கர்த்தர். உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன் மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்து கொள்ள வேண்டும். பழிக்குப் பழி வாங்காமலும், உன் ஜனபுத்திரர் மேல் பொறாமை கொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிலும் அன்பு கூருவாயாக; நான் கர்த்தர் (லேவி. 19:16-18 ).
தொழில்நுட்பம் புதிது இல்லை. ஆதாமின் காலத்திலிருந்தே உள்ளது. படைப்பாற்றல் உள்ள மக்கள்தம் வேலைக்கு சிருஷ்டியை பயன்படுத்தி சிருஷ்டிப்பதே தொழில்நுட்பம். எதிர்பாராதவிதமாக ஆதாமின் பாவத்தினாலும் அதன் விளைவால் சிருஷ்டிப்பு மீதுள்ள சாபத்தால் தொழில்நுட்ப செயல்முறைகள் மற்றும் பொருட்களை தீமை நன்மை இரண்டுக்கும் பயன்படுத்தலாம். காயின் ஒரு குச்சியை கூர்மையாக்கி நிலத்தை உழ பயன்படுத்தலாம் மற்றும் தன் சகோதரனை கொலை செய்ய உபயோகிக்கலாம். தொழில் நுட்பம் இன்று முக்கியமானது ஏனென்றால் அதன் அளவு, திறன் மற்றும் திராணி விரைவான மாற்றத்தைக் கொண்டுவருகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாத தொழில் நுட்பத் திறனும், அதீத அறிவியல் அறிவும் நன்மை தீமைகளோடு வாழ்க்கை முறையை சிக்கலாக்கி விட்டது.
இந்த அறிவு தேவனுடைய ‘மற்றொரு புத்தகமான’ பொதுவான வெளிப்படுத்தலிருந்து எழுகின்றது. இந்த அறிவே தேவனின் கட்டளைகளுக்கு_ குறிப்பாக உன் அயலானை நேசி என்ற கட்டளைக்கு கீழ்ப்படிந்து தேவனை மகிமைப்படுத்தி கிறிஸ்தவர்கள் எப்படி வாழவேண்டும் என்று நிறைய கேள்விகளை எழுப்புகின்றன. தொழில்நுட்பத்தினால் நாம் நன்மைகள் ஆபத்துகள் இரண்டையும் பெற்றோம். விவாதத்தில், மனிதனால் ஏற்பட்ட உலகளாவிய காலநிலை மாற்றம், காற்று மற்றும் நீர் மாசுபாடு, மண்ணரிப்பு, ஒலிமாசு, இனங்கள் அழிவு மற்றும் மீன்வள குறைவு போன்ற பிரச்சினைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
நம் அயலாரின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்தை நேர்மறையாக பாதித்துவிடும் சாத்தியக்கூறு வேதாகமக் காலத்திலிருந்து ஆயிரம் மடங்கு அதிகரித்துவிட்டது என்று கிறிஸ்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிந்துகொள்ளலே மற்றவர்களைப் பற்றி நினைக்கக் கூடிய பொறுப்பை அதிகரித்துள்ளது நம் நடத்தை மற்றும் வாழ்க்கை முறையால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் பற்றிய தகவலை புறக்கணிக்க தூண்டப்படுகிறது பாவமாகும். கிறிஸ்தவர்களாகிய நமக்கு எல்லா தேர்வுகளையும் செய்ய, அடுத்த வீடு, கீழ் நீரோடை மற்றும் கீழ் காற்று திசையிலுள்ள நம் அயலார்கள் மீது இரக்கம் உள்ள அக்கறையை காட்ட வேண்டிய கடமை இருக்கிறது தொழில்நுட்பம் நம் வாழ்வை சுலபமாக்க, வசதியாக்க, உற்சாகமாக்க, லாபமாக்க செய்கிறது. அதே சமயத்தில் அது தேவனின் சிருஷ்டிப்பை பாழாக்கலாம். அதனால் நம் தெருவின் மறு பக்கம் மற்றும் நம் உலகின் மறு பக்கத்தில் உள்ள மக்கள் துன்பப்படலாம் .
சிருஷ்டிப்பில் தேவனுடைய அதிசயத்தை நாம் எவ்வாறு கொண்டாட முடியும்? நாம் சிருஷ்டிப்பை உபயோகிக்கும்போது அது நம் அயலாரை_ அருகில் அல்லது தூர உள்ளவர்களை துன்பப்படுத்தக் கூடாது என்பதில் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும்.
நாம் அதை எதிர்கால தலைமுறையினர் உடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்
இப்போதும் நீங்கள் என்றென்றைக்கும் இந்த நல்ல தேசத்தை சுதந்தரமாய் அனுபவித்து உங்களுக்கு பிறகு அதை உங்கள் பிள்ளைகளுக்கு சுதந்தரமாய் பின் வைக்கும் பொருட்டாக நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு விசாரியுங்கள் என்று கர்த்தரின் சபை ஆகிய அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் தமது தேவனுடைய செவிகேட்கவும் உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன் (1 நாளா. 28:8). ஒருவன் தன் சொந்த ஜனங்களையும் விசேஷமாக தன் வீட்டாரையும் விசாரியாமல் போனால் அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும் அவிசுவாசியிலும் கெட்டவனுமா யிருப்பான் (1தீமோ. 5:8).
1980களில், உரையாசிரியர்கள் இளம் தலைமுறையினரை “எனக்கு தலைமுறை” அல்லது “இப்போது தலைமுறை” என்கிறார்கள். அவர்கள் இளைஞர்களிடம் ஒரு தொந்தரவு அணுகுமுறையை “எனக்கு எல்லாம் வேண்டும் மற்றும் இப்போதே வேண்டும்” என்கிறார்கள். இளைய தலைமுறையினர் காணும் பெரியவர்களின் பேராசை மற்றும் பொருள்முதல்வாதம், ஆயிரக்கணக்கான மணிகளாய் நுகர்வோர் விளம்பரத்தை பார்ப்பதன் விளைவு, வரலாற்றில் ஆர்வம் இழப்பு, குடும்பம் மற்றும் திருமண அமைப்புகளின் சிதைவு மற்றும் மத மதிப்புகளின் சரிவு, இவற்றினால் அவர்கள் சுய மையத்தில் வாழ்கிறார்கள் என்று புரிகிறது .
இதற்கு மாறானது பரோபகார பண்பு_ மற்றவர்களின் நலனில் சுயநலமற்ற அக்கறை ஆகும். கிறிஸ்தவர்கள் நித்திய தேவனின் மீது வைக்கும் விசுவாசம், மற்றவர்களிடம் காட்டும் இரக்கம், சுய தியாகம், எதிர்காலம் மீது நம்பிக்கை போன்றவை நம் பொதுவான கலாச்சாரத்திலிருந்து மறைந்தால் பரோபகாரம் இருக்காது. இன்று மக்களால் பரோபகாரத்தை விளக்கக் கூட முடிவதில்லை.
வேதாகமம் குறிப்பிடுவதுபோல வேதாகம மக்களுக்கு தம் பிள்ளைகளுக்கு விசுவாசத்தையும் நல்ல தேசத்தையும் பரிசாக பரம்பரையாக கொடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. ஒரு சிருஷ்டிப்பு மதிக்கப்படுகிறதும் மற்றும் நன்றாக பராமரிக்கப்படுவதுமாகும். கிறிஸ்தவ விவசாயி_ தத்துவவாதி வெண்டெல் பெர்ரி தாம் எழுதிய பல புத்தகங்களில் சமூகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டியுள்ளார். சமூகம் என்பது நம் மூதாதையர்கள், தற்போதைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அயலார்கள், நம் மிருகங்களும் நிலமும் மற்றும் நம் சந்ததியினர் அனைவரையும் உள்ளடக்கியது ஆகும். வாட் ஆர் பீப்பிள் பார்? என்னும் புத்தகத்தில் உள்ள இந்த வார்த்தைகள் நாம் விட்டுச்செல்லும் மரபு பற்றி மிக கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்கிறது:
நாம் “எதிர்கால உலகை” திட்டமிட தேவை இல்லை நாம் தற்போதைய உலகை பராமரித்தாலே, எதிர்கால உலகம் நம்மிடமிருந்து முழு நீதியையும் பெற்றுவிடும். ஒரு நல்ல எதிர்காலம் என்பது இப்போது உள்ள மண்ணில், காடுகளில், புல்வெளிகளில், சதுப்பு நிலங்களில், பாலைவனங்களில், மலைகளில், ஆறுகளில் ஏரிகளில் மற்றும் சமுத்திரங்களில் மறைமுகமாக உள்ளது; ”எதிர்காலவியல்” என்பது நாம் அனைத்தையும் நன்கு பராமரிப்பது ஆகும். “மனித இனத்தின் எதிர் காலம்” பற்றி திட்டமிடுவதோ அறிவதோ அவசியம் இல்லை. எப்போதும் உள்ள அதே அழுத்தும் தேவை-அன்பு செலுத்த, பராமரிக்க மற்றும் நம் பிள்ளைகளுக்கு கற்பிப்பது ஆகும் (ப. 188 ).
—வெண்டல் பெர்ரி
பெர்ரி தமது அனதர் டர்ன் ஆப் த கிரான்க் என்னும் புத்தகத்தின் இறுதி வரியில் விரிவாக எழுதுகிறார்: நம் இனப்பெருக்கத்தையே முறைகேடாய் நடத்தும் நாம் இந்த உலகை எப்படி பராமரிப்போம் என்ற கேள்வி எழுகிறது. உலகின் அதிசயமான கருவுறுதலில் பிள்ளை வளர்ப்பை தெரிவிக்கும் நம் கலாச்சாரத்தையும் குணங்களையும் கைவிட்ட நம்மால், நம்மை போன்றே உருவான மற்ற உயிரினங்களை எவ்வாறு பராமரிக்க முடியும். என்ன காரணமாய் இருந்தாலும் குழந்தைகளை கருச்சிதைவு செய்வது அல்லது கைவிடுவது, முறைகேடாய் நடத்துவது, போதைமருந்து பழக்குவது, குண்டு வீசுவது, புறக்கணிப்பது, மோசமாக வளர்ப்பது, மோசமாக உணவு தருவது, மோசமாக கற்பிப்பது, ஒழுக்கக்கேடாய் நடத்துவது என நாம் குழந்தைகளுக்கு எதிரான ஒரு போர் முறையை நடத்துகிறோம். அநேகருக்கு சரியான வேலை அல்லது எந்த வேலையும் கிடைப்பதில்லை. அனைவரும் குறைபட்ட, நோய்வாய்ப்பட்ட, விஷமாக்கப்பட்ட உலகையே மரபுரிமையாக பெறுவார்கள். நாம் பாவங்களை மட்டுமல்லாது, கடன்களையும் சுமத்துகிறோம். நாம் ஆயிரக்கணக்கான உதாரணங்கள் மூலம்_ அரசு, தொழில்துறை, பொழுதுபோக்கு சார்ந்து- வன்முறை தான் சிறந்த வழி என்று பரிந்துரைக்கிறோம். ஆனால், அவர்கள் துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு உபயோகிக்கும் போது நாம் ஆச்சரியப்படுகிறவர்களாய், தொந்தரவாக உணர்பவர்களாய் பாசாங்கு செய்கிறோம் (ப 78-79).
நான் துயரம் அடைந்தேன். நான் கிறிஸ்துவை விசுவாசிப்பதால் அவர் கிறிஸ்துவரல்லாதவர்களைப் பற்றி தான் விளக்குவதாக நினைத்தேன். ஆனால், இவை போன்ற பல நடத்தைகளையும், அணுகுமுறைகளையும் நம்மிடையே காண்கிறோம். நம் கடந்த காலத்தை பொக்கிஷங்களாய், நிகழ்காலத்தை காக்கிறவர்களாய், எதிர்காலத்தை பாதுகாக்கிறவர்களாய் இருந்த சமூகத்தில் இருந்து நாம் நீண்ட தூரம் கடந்து விட்டோம். நாம் கிறிஸ்துவின் வருகையை எந்த_ நிமிடமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, அந்த எதிர்பார்ப்பில், நாம் தேவனின் ஈவான சிருஷ்டிப்பை நாம் நம் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டிய பொறுப்பிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாது. அவர்களின் பிள்ளைகளுக்கும் நன்கு பராமரிக்கப்பட்டு குறைவில்லாத திறனுடன் நமக்கு வழங்கியது போலவே சிருஷ்டிப்பு அவர்களுக்கும் வழங்க வேண்டும்.
சிருஷ்டிப்பில் தேவனுடைய அதிசயத்தை நாம் எவ்வாறு கொண்டாட முடியும்? நம் பெற்றோர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்களின் பராமரிப்பு மற்றும் அக்கறையால் நாம் பெற்று மகிழ்ந்த சிருஷ்டிப்பின் பொக்கிஷங்களை நம் பிள்ளைகளுக்கும், அவர்கள் பிள்ளைகளுக்கும் அளிக்க நாம் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்து சிருஷ்டிப்பை காத்து அதன் திறனையும் பாதுகாக்க வேண்டும்.
நம்பிக்கையும் நடத்தையும்
—டி. எஸ். எலியட்
சுற்றுச்சூழல் இயக்கம் மற்றும் புதிய காலை இயக்கம் கிறிஸ்தவரல்லாத தோற்றங்கள் உடையவை. வேதத்துக்கு மாறாக, அவை உலகைப் பற்றிய நம்பிக்கை மற்றும் நடத்தைகளுக்கு குரல் கொடுத்துள்ளன. அதன் விளைவாக, கிறிஸ்துவர்கள், உலகை பராமரிப்பது என்பது விக்கிரக ஆராதனைக்காரர்களின் பூமி ஆராதனை சார்ந்த கருத்து என்று நினைத்தனர். ஆனால் இந்த இயக்கங்களுக்கு முன்பே தேவனின் சிருஷ்டிப்பை பராமரிக்க வேண்டிய அக்கறை சபைக்கு முக்கியமாக இருந்தது. கிறிஸ்துவுக்குப் பின் 5ம் நூற்றாண்டிலேயே, சபை “ரொகேஷன் நாட்கள்” என்னும் பிரார்த்தனை காலத்தை வசந்த காலத்தில் பயிர்கள் வளர தேவனின் ஆசிர்வாதத்தை வேண்டவும் அவருக்கு நன்றி செலுத்தவும் அனுசரித்தது. இந்த வழக்கம் வட அமெரிக்காவிலும் 19ஆம் நூற்றாண்டிலும் இருந்தது. 20ஆம் நூற்றாண்டில் தேவனின் சிருஷ்டிப்பின் மீது வணிகவாதம் மட்டும் பொருள்முதல் வாதத்தின் எதிர்மறை விளைவு பற்றிய அக்கறை வெளிப்படுத்தப்பட்டது. டி .எஸ். எலியட் அவர்கள் “த ஐடியா ஆப் எ கிறிஸ்டியன் சொசைட்டி” (1939) என்னும் தம் கட்டுரையில் “இயற்கையை பற்றிய ஒரு தவறான அணுகுமுறை எங்கேயோ தேவனைப் பற்றிய ஒரு தவறான அணுகுமுறையாக இருக்கிறது என்பதைக் குறிக்கிறது” என்று எழுதினார் (ப. 62).
தேவனுடைய சிருஷ்டிப்பின் அதிசயத்தை கொண்டாட நம் முயற்சி நமக்குள் தேவனைப் பற்றியும் நாம் சார்ந்திருக்கும் அவரின் சிருஷ்டிப்பைப் பற்றியும் சரியான அணுகுமுறையை தரட்டும்.