கிறிஸ்துமஸ் சாளரங்கள்

விடுமுறைக் காலங்களின் மத்தியில், மற்றவர்களின் வீடுகளில் களைக்கட்டியிருக்க, நீங்களோ கிறிஸ்துமஸைக் குறித்த ஊக்கத்தை இழந்திருப்பதை உணரக்கூடும். பிறர் உங்கள்மீது கொண்டிருக்கும் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ய எண்ணினாலும், நீங்கள் உங்கள் சத்துவத்தை இழந்திருப்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். ஆலயமணி ஓசைகளும், மாலைநேர கிறிஸ்துமஸ் பாடல்களும்கூட தேவன் உங்கள் திறனுக்கதிகமாகவே உங்களிடம் கேட்பதாக எண்ணத்தூண்டலாம்.

இதுதான் உங்கள் நிலையெனில், கிறிஸ்துமஸ் கதையின் மகத்துவத்தை நீங்கள் மீண்டும் திரும்பிப்பார்க்க வேண்டிய நேரமிது. கிறிஸ்துமஸ் சாளரங்கள் எனும் பின்வரும் மேற்கோள் பகுதிகளில் பில் கிரவுடர், கிறிஸ்துமஸ் காலத்தின் உற்சாகத்தைப் படம்பிடித்து; நமக்கான மிகப்பெரும் வெகுமதியை அளித்திடத் தேவன் வானத்தையும் பூமியையும் அசைத்ததை விளக்கிக் காட்டுகிறார்.

நமது அனுதின மன்னா ஊழியங்கள்

banner image

என் அப்பாவுக்குப் பெரிய கிறிஸ்துமஸ் மரங்களென்றால் பிரியம், அவைகளை நேர்த்தியாய் கத்தரித்துக் குறிப்பிடுமளவு பலனையும் அனுபவித்தார். முதலில் நாங்கள் அந்த மரங்களை விளக்குகளால் சுற்றி அலங்கரிப்போம், பின்னர் அலங்கார பொருட்களைத் தொங்க விடுவோம். இதின் கடைசி பகுதியாக என் அப்பா ஒரு தேவதூதனின் பொம்மையை உச்சிக்கிளையில் வைப்பார், நான் அதை ரசிப்பேன். பார்ப்பதற்குக் கம்பீரமான தோற்றமளிக்கும். சற்றுமுன்னரே அந்த மரம் முழுமைபெறாதது போலவும், முக்கியமான ஏதோவொன்று அதில் இல்லாதது போலவும் குறையோடிருந்தது. ஆனால் அந்த தேவதூதனின் பொம்மையை வைத்த மாத்திரத்தில், முழு வீடும் கிறிஸ்துமஸிற்கு ஆயத்தமாகிவிட்டது. இன்றும் எனக்கு நினைவிருக்கிறது, அந்த தேவதூதன் ஒரு பெண் , தங்கநிற முடியோடு, செட்டைகளுடன், ஜொலிஜொலிக்கும் வெண்ணிற அங்கி உடுத்தியிருந்தது. பல ஆண்டுகள் கடந்தும், நான் தேவதூதர்களைக் குறித்து சிந்திக்கும்போதெல்லாம், எங்கள் கிறிஸ்துமஸ் மரங்களின் உச்சியிலிருந்து அந்த தூதனையே கற்பனை செய்துகொள்வேன். அதிர்ச்சிகரமாக, ஆண்டுகள் கழித்து நான் தேவதூதர்களைக் குறித்து வேதத்தில் வாசிக்கையில் அவர்களுக்கு ஆண்களின் பெயர்களே இருந்தது, தங்கநிற முடிகள், ஜொலிஜொலிக்கும் அங்கிகள் குறித்து ஒன்றுமேயில்லை.

சிறுவயதில் மனதில் பதிந்தவற்றைச் சிதைப்பது சற்று கடினமானது, ஆனால் ஒரு காரியம் ஒத்துப்போனது. கிறிஸ்து பிறந்த இடத்தில் அப்போது நடந்த நிகழ்வுகளில், தேவதூதர்கள் முக்கியப்பணி ஆற்றியிருந்தனர். அவர்களுடைய பங்களிப்பு இல்லாவிடில், அந்த சம்பவத்தில் ஏதோவொரு குறையிருந்திருக்கும்; முழுமைபெறாத என் கிறிஸ்துமஸ் மரத்தைப் போலவே. கிறிஸ்துவின் பிறப்பில் தேவதூதர்களின் பங்களிப்பைப் புரிந்துகொள்ள, இந்த பரலோக ஜீவராசிகளைச் சற்று கூர்ந்து கவனிப்போம்.

தேவதூதர்கள் யார்?

ஓவியங்கள், கவிதைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இப்படி தேவதூதர்கள் இடம்பெறாத ஊடகங்களே இல்லை எனலாம். ஆனால் அவர்கள் சரியான முறையில் சித்தரிக்கப்படுவதில்லை. வேதாகம பக்கங்களில்தான் அவர்கள் மிகச்சிறப்பாகவும், தத்ரூபமாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் நினைவில்கொள்ள இது உதவும்.

தேவதூதர்களை வேதாகமத்தில் அநேக இடங்களில் காணலாம், மேலும் கேருபீன்கள், சேராபீன்கள், ஜீவராசிகள் போன்ற பெயர்களால் அழைக்கவும் படுகின்றன. சிலசமயங்கள் அவைகள் ஆண்களாகவும், பிரகாசிக்கும் உடைகளை அணிந்திருப்பதாகவும் வருணிக்கப்படுகின்றன. ஏதேனை பாதுகாத்தல், யுத்தம்செய்தல், பேதுருவைச் சிறையிலிருந்து விடுவித்தல், தேவனின் சமூகத்தில் ஆராதித்தல், துரதிருஷ்டவசமாக சில தூதர்கள் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்தல் என்று பலகாரியங்களில் அவர்களைப் பார்க்கிறோம். சில தூதர்கள் மிகாவேல் (தேவனைப் போல யாருண்டு), காபிரியேல் (தேவனின் யுத்தவீரன்), லூசிபர் (ஒளியினை உடையவன், அவன் சாத்தானாய் மாறின பின்னர் எதிராளியென்று அழைக்கப்படுகிறான்) என்று பெயர்களை உடையவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் மர்மமானவர்களும், சில நேரங்களில் வேதாகமத்தின் சில ஆண்கள், பெண்களோடு இடைப்படுவதில் தேவனின் கருணையுள்ள ஊழியர்களாகவும் உள்ளனர்.

சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் ஏசாயா 14:12 இல் “லூசிபர்” என்றும், மற்றும் சில மொழியாக்கங்களில் “விடிவெள்ளி, விடியலின் மகன்” அல்லது “விடிவெள்ளி நட்சத்திரம்” அல்லது “அதிகாலையின் விண்மீன்” என்ற பெயர்கள் உள்ளன.

தேவதூதன் (ஆங்கிலத்தில் ஏஞ்சல்) என்கிற வார்த்தையே கிரேக்கப் பதமான ஏஞ்சலோஸ் என்பதிலிருந்து வருகிறது. அடிப்படை பொருள் தூதன் என்பதே, வேதத்தில் அடிக்கடி இவர்க சியும் பணியும் இதுவே.

    • சோதோம் கொமோரா சம்பவத்தைப் போலச் சிலசமயங்களில் இவர்கள் எச்சரிக்கை செய்தியைக் கொண்டுவருகிறார்கள் (ஆதியாகமம் 19).
    • சில சமயங்களில் அவர்கள் நேபுகாத்நேச்சாரின் அக்கினி சூளையில் சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோவை காத்தது போல மீட்பு செய்தியை எடுத்துச் செல்கிறார்கள் (தானியேல் 3)
    • சில சமயங்களில் அவர்கள் சாராளின் பணிப்பெண்ணாகிய ஆகாருக்குப் போதித்தது போலவே ஒரு போதனை செய்தியையும் எடுத்துச் செல்கிறார்கள் (ஆதியாகமம் 16)

ஏஞ்சலோஸ் என்பதற்குத் தூதர், தூதுவர், அனுப்பப்பட்டவர், தேவதூதன், கடவுளிடமிருந்து ஒரு தூதர் என வரையறுக்கப்படுகிறது.

தேவதூதர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி செய்திகளை எடுத்துச் செல்வதை விட அதிகமாகச் செய்கிறார்கள், பரலோகத்திலிருந்து பூமிக்குச் செய்திகளை அறிவிக்கும் தூதர்களாக அவர்களின் முக்கிய பங்கைக் குறைத்து மதிப்பிட முடியாது. இரட்சகரின் பிறப்பைச் சுற்றியுள்ள நிகழ்வுகளின் போது நற்செய்தி (சுவிசேஷம்) முதன்முதலில் தேவதூதர்களால் உலகிற்கு வழங்கப்பட்டது.

தூதர்கள் எப்படி கிறிஸ்துமஸ் கதையின் பகுதியாக இருக்கிறார்கள்?

எனவே, நாம் மீண்டும் எனது குழந்தைப் பருவ கிறிஸ்துமஸ் மரத்திற்கு வருகிறோம். மரத்தின் மேல் தூதன் ஏன்? ஏனெனில் கிறிஸ்துமஸ் கதை தூதர்களால் நிரம்பியிருப்பதால், கதையில் பங்கேற்கும் மக்களுக்குச் செய்திகளை எடுத்துச் செல்வதில் மும்முரமாக இருந்தனர்.

கதையில் நாம் சந்திக்கும் முதல் தூதன் காபிரியேல், ஒரு பிரதான தூதன் – தேவதூதர் மண்டலத்தின் கட்டமைப்பில் மிக உயர்ந்த தரவரிசையில் இருப்பவர். காபிரியேல் பூமிக்கு விஜயம் செய்து, முக்கிய கதாபாத்திரங்களுக்கும், இறுதியில் உலகிற்கும், “காலம் நிறைவேறிவிட்டது” என்று – வரலாற்றில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தருணமான வாக்குப்பண்ணப்பட்ட மேசியா வருகையை அறிவிக்கிறார் (கலாத்தியர் 4:5). இது தொடர் அறிவிப்புகளில் வருகிறது.

முதலாம் அறிவிப்பு #1 (லூக்கா 1:5–22)

ஆலயத்தில் தனது ஆசாரியப் பணிகளைச் செய்து கொண்டிருந்த வயதான, குழந்தை இல்லாத ஆசாரியன் சகரியாவுக்கு காபிரியேல் தோன்றினார். முதலில், வயதான ஆசாரியன் இந்த நிகழ்வால் கலக்கமடைந்தார், ஆனால் தேவதூதரின் செய்தியைக் கேட்டபோது அந்த தருணத்தின் பயங்கரம் நகைச்சுவையாக மாறியது. மல்கியாவின் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக அவருக்கும் அவரது மனைவி எலிசபெத்துக்கும் ஒரு மகன் பிறப்பார் என்று காபிரியேல் சகரியாவிடம் அறிவித்தார்.சகரியா, தானும் தனது வயதான மனைவியும் எதிர்கொள்ளும் சரீர ரீதியான யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு, வயோதிக காலத்தில் பிரசவத்தின் சாத்தியக்கூறு குறித்து கேள்வி எழுப்பியபோது, யோவான் என்று பெயரிடப்படும் குழந்தை பிறக்கும் வரை சகரியா ஊமையாக இருப்பார் என்று காபிரியேல் அவருக்குத் தெரிவித்தார்.

அபிஷேகிக்கப்பட்ட மீட்பருக்கு வழியை ஆயத்தம் செய்யும் எலியாவைப் போன்ற ஒரு நபரைத் தேவன் அனுப்புவார் என்று மல்கியா உறுதியளித்தார் (மல்கியா 4:5-6).

 

ஆபிரகாம் மற்றும் சாராளின் கதையை சகரியா நன்கு அறிந்திருப்பார், அதில் வயதான தம்பதிகள் ஒரு மகனைப் பெறுவதற்கு அற்புதமான பெலனடைந்தனர் (ஆதியாகமம் 17:15-18:15; 21:1-8).

காபிரியேல் அறிவித்தது உண்மையாகி, யோவான் ஸ்நானன் “கர்த்தருடைய வழியை ஆயத்தம் செய்ய” வந்தார் – கிறிஸ்துவை உலகிற்குக் கொண்டுவரும் செயல்பாட்டின் முதல் படி.

இரண்டாம் அறிவிப்பு #2 (லூக்கா 1:26–38)

ஆறு மாதங்களுக்குப் பிறகு, மரியாள் என்ற இளம் பெண்ணுக்குத் தேவனிடமிருந்து ஒரு செய்தியை வழங்குவதற்காக காபிரியேல் நாசரேத் கிராமத்திற்கு வந்தார். நீண்டகாலமாக யூதப் பெண்களின் விருப்பமாக இருந்த பாத்திரத்திற்கு அவள் தேர்ந்தெடுக்கப்பட்டாள் – வாக்குறுதியளிக்கப்பட்ட மேசியாவைப் பெற்றெடுக்கும் பாக்கியம். அவளது பதில், அடிபணிந்த குழப்பமாக இருந்தது: அவள் தேவனின் கட்டளையைச் செய்யத் தயாராக இருந்தாள் ஆனால் அப்படி ஒரு விஷயம் எப்படி நிகழும் என்று அவளுக்கு மர்மமாக இருந்தது. அவள் ஒரு கன்னிப் பெண்ணாக இருந்தாள், அவளுடைய வருங்கால கணவன் யோசேப்புடன் நிச்சயிக்கப்பட்டவள், அவளுடைய தூய்மையின் உறுதியை மீறும் எண்ணம் இல்லை. அவள் எந்த விதத்திலும் தன் தூய்மையின் உறுதி நிலையை மீறமாட்டாள் என்றும், பரிசுத்த ஆவியின் அற்புதமான தலையீட்டின் விளைவாகக் குழந்தை இருக்கும் என்றும் தேவதூதன் அவளுக்கு உறுதியளித்தார். மேலும், குழந்தை பிறந்ததும், அவருக்கு “இயேசு” (“தேவனே இரட்சிப்பு”) என்று பெயரிடப்பட வேண்டும்-தேவனின் குமாரன் மற்றும் மீட்பர் என்று அவரது பணி இரண்டையும் வரையறுக்கிறது. அந்த நேரத்தில், மரியாளின் பதில் எளிமையான ஒன்று: “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என்றாள் (லூக்கா 1:38).

மரியாளை அவர் விஜயம் செய்ததைத் தொடர்ந்து, மரியாளின் கணவரான யோசேப்பைச் சந்தித்து, அவருக்கும் அதே செய்தியை காபிரியேல் கொடுத்தார் – மரியாளின் குழந்தை மனிதனாலல்ல தேவனால் உண்டானது (மத்தேயு 1:20-25). ஆகவே அவளுடைய தூய்மையில் முழு நம்பிக்கையுடன் யோசேப்பு அவளைத் தன் மனைவியாக எடுத்துக்கொள்ள முடியும்.

ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, காபிரியேல் இன்னுமொரு செய்தியுடன் திரும்பினார்-இம்முறை ஒரு எதிர்பார்ப்புச் செய்தி அல்ல, ஆனால் வருகை பற்றிய செய்தி.

மூன்றாம் அறிவிப்பு #3 (லூக்கா 2:9–14)

பெத்லகேமின் மேய்ப்பர்கள் மற்றொரு குளிர் இரவைச் சகித்துக்கொண்டு ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்கள், திடீரென்று ஒரு அற்புதமான, பரலோக ஒளிக் காட்சியைக் கண்டார்கள்! இந்த நேரத்தில், கர்த்தருடைய மகிமை தேவதூதரின் செய்தியுடன் சேர்ந்தது, மேய்ப்பர்கள் இக்காட்சியால் பயந்தார்கள்.செய்தியே இதைவிட வியத்தகு முறையிலிருந்திருக்க முடியாது.

தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். (லூக்கா 2:10–12).

இந்த எளிய மேய்ப்பர்கள் இதைக் கையாளத் தயாராக இல்லை! தேவதூதர்கள் ஆசாரியர்களுக்குத் தோன்ற வேண்டும், மேய்ப்பர்களுக்கு அல்ல. அவர்கள் எருசலேமில் உள்ள ஆலயத்தின் தற்போதைய அதிகாரிகளை அழைக்க வேண்டும், யூத சமூக அடுக்குகளின் கீழ்மட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் சிறுவர்களை அல்ல.

இந்தக் கதையை நாம் பலமுறை கேட்டிருப்பதால், அதன் வல்லமைக்கும் கம்பீரத்துக்கும் நாம் பழக்கப்பட்டுவிட்டோம். தேவதூதர்கள் தோன்றுவது பற்றி நாம் அன்றாட நிகழ்வைப் போல் பேசுகிறோம் – ஆனால் அவை அன்றும் இல்லை, இன்றும் இல்லை.

தேவதூதர்கள் சுவிசேஷங்களை வழங்குவதை-இரட்சகரின் வருகையைப் பற்றிய நற்செய்தியை முதன்முதலில் கேட்பது அத்தகைய பார்வையாளர்களாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது!

தேவதூதர்கள் ஏன் மேன்மையுடன் பதிலளிக்கிறார்கள்?

செய்திகளை எடுத்துச் செல்வது மட்டுமே தேவதூதர்களின் செயல் அல்ல. உண்மையில், அது பரலோகத்தில் அவர்களின் முதன்மையான செயல்களுக்கு இரண்டாம் பட்சமாக இருக்கலாம்—துதித்தல் மற்றும் ஆராதித்தல். பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் இது எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கவனியுங்கள்.

  • ஏசாயா தீர்க்கதரிசி தேவனின் சிம்மாசன அறைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு ஆறு சிறகுகள் கொண்ட சேராபீன்கள் தேவனின் மகிமையையும் மகத்துவத்தையும் அறிவித்து, பரலோகத்தின் தேவனைத் தேவதூதர்கள் ஆராதிப்பதைக் கண்டார்:

“சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது” (ஏசாயா 6:3).

       தேவனைச் சதாகாலமும் ஆராதித்து, அவருடைய பரிசுத்தத்தின் மகத்துவத்தை உயர்த்துவதே சேராபீமின் பணியாகும்.

  • அப்போஸ்தலன் யோவானுக்குப் பரலோக நிலப்பரப்பின் ஒரு பார்வை கொடுக்கப்பட்டது (வெளிப்படுத்துதல் 4-5). “ஜீவன்கள்” (தேவதூதர்களுக்கான மற்றொரு சொல்) தேவனின் பரிசுத்தத்தை அறிவித்து, மீட்கப்பட்டவர்களை அவரது படைப்பின் அற்புதத்திற்காகத் தேவனை வணங்கவும், கிறிஸ்துவின் இரட்சிப்பின் கிருபைக்காக அவரை வணங்கவும் அழைக்கின்றன (வெளிப்படுத்துதல் 4:11; 5: 12). பரலோகத்தில் வசிப்பவர்கள் அனைவரும், விழுந்துபோன உலகத்தில் வல்லமை வாய்ந்த தலையீட்டிற்காகப் பிதாவையும் குமாரனையும் புகழ்ந்து பாடும் கீதத்துடன் இணைந்தனர்.

வெளிப்படுத்துதல் 4 மற்றும் 5 இல் தேவதூதர் மண்டலம் தேவனின் படைப்பு மற்றும் கிறிஸ்துவின் இரட்சிப்பைக் கொண்டாடுகிறது, கிறிஸ்துமஸ் கதையிலோ, அவர்கள் அவரது நித்திய அன்பின் நோக்கமான சிதைந்துபோன உலகத்தின் மீதான அவரது வருகையை கொண்டாட ஒரு மகிமையான பாடகர் குழுவாக கூடுகிறார்கள் (லூக் 2). தேவ குமாரன் மனித உருவில் வருவதை தேவதூதர் அறிவிக்கும்போது, பரலோக சேனை இனி அமைதியாக இருக்க முடியாது. அவர்கள் தேவனின் மகிமைக்காகவும், அவருடைய குமாரனுக்காகவும், தொலைந்துபோன, சோர்வுற்ற, தேவதூதர்களின் பார்வையாளர்களான அந்த வனாந்திர மேய்ப்பர்கள் பாதுகாத்த ஆடுகளைப்போல குழப்பமடைந்த ஆண்களையும் பெண்களையும் மீட்கும் திட்டத்திற்காகவும், தேவனை உயர்த்தி போற்றுகிறார்கள். இந்த மேன்மையின் பிரதிபலிப்பு, அந்த முதல் கிறிஸ்துமஸில் ஆரம்பித்து, இன்றும் நமது வழிபாட்டில் தொடரும் மாபெரும் வழிபாட்டு தொடராக இழைந்தோடுகிறது. அவர்களின் செய்தி வல்லமை வாய்ந்தது:

அந்தணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:

“உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும்,
பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக” என்று சொல்லி,
தேவனைத் துதித்தார்கள். லூக்கா (2:13–14).

ஏசாயாவும் யோவானும் பரலோகத்தின் சரணாலயத்தில் கண்டதை, மேய்ப்பர்கள் அந்த பெத்லகேம் மலைப்பகுதியில் அனுபவித்தனர். தேவதூதர்கள் தேவனின் மகிமையை உறுதிப்படுத்துவதையும், கிறிஸ்து தனக்கு எதிராகக் கலகம் செய்த ஒரு இனத்திற்கு தேவனின் சமாதானத்தை வழங்குவதற்காக வந்ததாக அறிவிப்பதையும் அவர்கள் கேட்டனர். தேவனுக்கும் மனித இனத்துக்கும் இடையேயான நல்லிணக்கம் – மனித பாவத்தின் நிலைக்கான தீர்வு – இதுவே “சமாதானம்” என்ற எளிய வார்த்தையில் சுருக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த சமாதானம் வெறுமனே மோதல் இல்லாத அமைதியான நிலை அல்ல என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம் – இது ஏசாயா தீர்க்கதரிசியால் “சமாதான பிரபு” (ஏசாயா 9:6) என விவரிக்கப்படும் கிறிஸ்துவின் பிரசன்னம். இது, கிறிஸ்துவின் மூலமாக, சமாதானத்தின் தேவனுடனான உறவின் நிஜம் (பிலிப்பியர் 4:9). சமாதானத்திற்கான எபிரேய வார்த்தையான ஷாலோம், இந்த விரிவாக்கத்தை உள்ளடக்கியது, ஏனெனில் இது முழுமை, நல்லிணக்கம் மற்றும் மனநிறைவு போன்ற பல அர்த்தங்களையும் பொருள்களையும் உடையது. சமாதானம். தேவதூதர்கள் இந்த சமாதானத்தின் வாக்குறுதியை மேய்ப்பர்களுக்கு (மற்றும் நமக்கும்) வழங்க முடியும், ஏனென்றால் அத்தகைய சமாதானத்தை நமக்குக் கிடைக்கச் செய்யும் கிறிஸ்து இப்போது பூமியில் வந்துவிட்டார்!

 

தேவனுக்கும் மனிதகுலத்துக்கும் இடையேயான நல்லிணக்கம் என்பது “சமாதானம்” என்ற எளிய வார்த்தையில் சுருக்கப்பட்டுள்ளது.

ஜீவனுள்ள தேவனை மேன்மைப்படுத்துவதற்காக எழுப்பப்பட்ட தேவதூதர்களின் குரல்கள் இன்றும் நமது கொண்டாட்டங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. சமாதானத்தின் நம்பிக்கை, மகிமைக்கான ஏக்கம், இயேசுவின் பரிசு. அந்த மேய்ப்பர்களின் இதயங்களில் எதிரொலித்த இந்த விஷயங்கள் அனைத்தும் இரண்டாயிரமாண்டுகளுக்குப் பிறகும் நம் இதயத்தின் ஆழமான ஏக்கங்களுடன் தொடர்ந்து எதிரொலிக்கின்றன.

தேவதூதர்கள் கிறிஸ்துவுக்கு எவ்வாறு சேவை செய்தார்கள்?

மகிமையான பிரகாசமான தேவதூதர்கள் அவர்களைவிட்டு வெளியேறியபோது மேய்ப்பர்கள் எவ்வளவு ஏமாற்றமடைந்திருக்க வேண்டும், வானம் மீண்டும் அதன் குளிர்ந்த இருளுக்கு திரும்பியது. ஆனால் தேவதூத்தரகளின் பணி அதோடு முடிக்கப்படவில்லை. அவர்கள் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கிறிஸ்துவின் ஊழியத்தில் தொடர்ந்து ஈடுபடுவார்கள், குறிப்பாக ஆபத்தான அல்லது முக்கியமான அறிவிப்பின் தருணங்களில்:

  • ஏரோதின் கைக்கு எட்டாதபடி குழந்தையாகிய கிறிஸ்துவை அழைத்துச் செல்லும்படி ஒரு தேவதூதன் யோசேப்பை எச்சரித்தார்: அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: “ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கேயே இரு” என்றான் (மத்தேயு 2:13)..
  • வனாந்தரத்தில் அவருடைய சோதனைகளைத் தொடர்ந்து தேவதூதர்கள் இயேசுவுக்குச் சேவை செய்தார்கள்: “அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்” (மத்தேயு 4:11).
  • கெத்செமனே தோட்டத்தில் இயேசுவின் வியகுளத்தில் ஒரு தேவதூதன் அவருக்குப் பணிபுரிந்தார்: “அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்” (லூக்கா 22:43).
  • உயிர்த்தெழுந்த நாளில் ஒரு தேவதூதன் கல்லறையைத் திறந்தார்: “அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.” (மத்தேயு 28:2).
  • தேவதூதர்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை அறிவித்தனர்: “தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.. இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்” (மத்தேயு 28:5; யோவான் 20:12)..
  • இயேசு பரலோகத்திற்கு திரும்பியபோது தேவதூதர்கள் கலந்து கொண்டனர்: “அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று: ‘கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார்” என்றார்கள் (அப்போஸ்தலர் 1:10–11).

1 தீமோத்தேயு 3:16ல் கிறிஸ்துவின் மனித உருவேற்பை பற்றிய சுருக்கமான அறிக்கையைத் தனது இளம் ஊழிய சீடனுக்கு எழுதும் போது, கிறிஸ்துவின் பூமிக்குரிய பணியிலும் அதைச் சுற்றியுள்ள தேவதூதர்களின் செயல்பாடுகளின் இதேபோன்ற அட்டவணையை பவுல் பரிசீலித்திருக்கிறர்:

“அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது
யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே
மகா மேன்மையுள்ளது.
தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்,
ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார்,
தேவதூதர்களால் காணப்பட்டார்,
புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார்,
உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார்,
மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.”

மகிமையின் தேவனின் பூமிக்குரிய பணியைப் பற்றி தேவதூதர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் இருந்தது. கிறிஸ்துவின் மனித உருவெற்பு நிகழ்வுகள் வெறுமனே “தேவதூதர்களால் பார்க்கப்பட்டது” அல்ல; இந்த தெய்வீக நடவடிக்கைகள் “கவனிக்கப்பட்டது” -அதாவது, மிகுந்த ஆர்வத்துடன் உற்றுநோக்கப்பட்டது.வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிறிஸ்துவின் மீட்பின் வேலை, தேவதூதர்களை தொடர்ந்து ஈர்க்கும் ஒரு மூலஆதாரமாக இருந்தது, இன்றும் இருக்கிறது. அப்போஸ்தலன் பேதுரு இதை எப்படி விவரிக்கிறார் என்பதைக் கவனியுங்கள்:

தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது, பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள் (ஏங்குகிறார்கள்).
(1 பேதுரு 1:12)

இந்த “தேவதூதர்கள் பார்க்க ஆசைப்படுகிறார்கள்” என்பதன் அர்த்தம் என்ன? வேதாகம ஆசிரியரும் விளக்க நூலாசிரியருமான ஆடம் கிளார்க், 1 பேதுருவைப் பற்றிய தனது விளக்கவுரையில் இதை இவ்வாறு விவரித்தார்:

[அவர்கள்] கீழே குனிந்து நிற்கிறார்கள்—ஒரு விஷயத்தை, குறிப்பாகப் படிக்கக் கடினமாக இருக்கும் ஒரு எழுத்தைக் கண்டறிவதில் தீவிர நோக்கத்துடன் இருப்பவர்களின் தோரணை; அவர்கள் அதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, கதிர்கள் முடிந்தவரைக் கூட்டாக அதன் மீது விழும்படி அதை வைக்கிறார்கள், பின்னர் கீழே குனிந்து அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்து, அவர்கள் முழுவதையும் உருவாக்க முடியும். உடன்படிக்கைப் பெட்டியின் முனைகளில், மகா பரிசுத்த ஸ்தலத்தில், கிருபாசனம் அல்லது ஒப்புரவாகவும் ஸ்தானத்தை நோக்கியபடி வளைந்த தோரணையில், கவனத்துடன் பார்ப்பது போல் கண்களைத் திருப்பியிருந்த கேருபீன்களின் மனோபாவத்திற்கு இங்கே ஒரு குறிப்பு உள்ளது. நாம் அதைக் குறிப்பிடுவது போல, அதை ஆவலுடன் பார்க்கிறார்கள். பரிசுத்த தேவதூதர்கள் கூட மனித மீட்பின் திட்டத்தைக் கண்டு வியப்படைகிறார்கள், மேலும் அவர்களின் பக்தியான ஆராதனைக்குரிய எல்லையற்ற வஸ்துவின் மனித அவதாரத்தைப் பற்றி ஆச்சரியப்படுகிறார்கள். இந்த விஷயங்கள் தேவனின் தூதர்களுக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருந்தால், அவை நமக்கு எவ்வளவு அதிகமாக இருக்க வேண்டும்; மனிதர்களுக்கு இருக்கும் ஆர்வம் தேவதூதர்களுக்கு இருக்க முடியாது.

ஏன் இப்படி? ஏனென்றால் அது “அவர்கள் வணங்கும் அந்த எல்லையற்ற பொருளின் அவதாரம்”—தேவனின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உள்ளடக்கியது. தேவதூதர்கள் கிறிஸ்துவை அவர் யார் என்பதற்காகவும் அவர் செய்ததற்காகவும் அவரை உயர்த்துகிறார்கள். அவர்கள் அவருடைய பிறப்பில் அவரை உயர்த்தினார்கள், அவருடைய வாழ்க்கையில் அவருக்குப் பணிபுரிந்தார்கள், அவருடைய வேதனையில் அவரை ஆதரித்தார்கள், அவருடைய உயிர்த்தெழுதலில் அவரை அறிவித்தார்கள் – எல்லாமே அவர் கிறிஸ்து என்பதால். ஏனென்றால், பாவக்கறைப் படிந்த தகுதியில்லாத ஒரு இனத்திற்காக அவர் அதையெல்லாம் செய்யத் தெரிந்துகொண்டார். ஏனென்றால், அவர் தனது விவரிக்க முடியாத அன்பை மிகவும் விளங்கிக்கொள்ளமுடியாத மற்றும் அற்புதமான முறையில் வெளிப்படுத்தத் தேர்ந்தெடுத்தார் – மேலும் அதை அவரது வழிதவறிய படைப்பின் மீது ஊற்றினார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எப்போதும் உயர்ந்த மேன்மைக்கு என்றென்றும் தகுதியானவர் என்பதை நாம் எளிதில் மறந்துவிடுவதைத் தேவதூதர்கள் அறிவார்கள். மேலும், கிளார்க் கூறியது போல், மீட்கும் அன்பைக் கவனிக்க மட்டுமே முடியும், ஆனால் அதை ஒருபோதும் அனுபவிக்காத தேவதூதர்கள் கிறிஸ்துவை அவருடைய கிருபைக்காக உயர்த்தினால், இம்மாபெரும் கருணையைப் பெற்று அனுபவிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் உள்ளங்களும் உணர்வுகளும் இரட்சகரை வணங்குவதில் எவ்வளவு அதிகமாக ஈடுபாடு கொள்ள வேண்டும்.

உற்றுநோக்கும் தேவதூதர்கள் மற்றும் மீட்கப்பட்ட மனிதக்குலம்; இவற்றால் உண்டாகும் பிரமிப்பு மற்றும் மேன்மையின் கலவையைக் கிறிஸ்துமஸ் பாடல்களில் மிகவும் பழக்கமான ஒன்று அற்புதமாக வெளிப்படுத்துகிறது:

கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே;
அவர் பாவ நாசகர்,
சமாதான காரணர்,
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர்போல் கெம்பீரித்து
பெத்லெகேமில் கூடுங்கள்,
ஜென்ம செய்தி கூறுங்கள்.
கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே.

நன்றியுள்ள இதயங்களுடன், தேவனின் மகிமையான பரிசாகிய கிறிஸ்துவை மேன்மைபடுத்த ஒன்று சேருவோமாக!

banner image

அழுக்கான மேய்ப்பர்களின் குழுவானது தொழுவத்திற்கு வந்து, தேவதூதர்களின் கூட்டங்களையும், “அதிசய நட்சத்திரம்” பற்றியும் சொன்னபோது மரியாள் எவ்வளவு ஆச்சரியப்பட்டிருப்பார் — அனைத்தும் தன் மகன் பிறந்ததை அறிவிக்கின்றன! பிரசவத்தால் சோர்ந்துபோயிருந்தாலும், இந்த எளிய மந்தை மனிதர்கள் தன் மகனுக்கு முன்பாக தாழப் பணிந்து வணங்கிவிட்டு, தாங்கள் கண்ட குழந்தையைப் பற்றி அவர்கள் சந்தித்த அனைவருக்கும் சொல்லச் சென்றதைக் கண்டு மரியாள் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும் (லூக்கா 2:16-18).

மேய்ப்பர்கள்தான் முதலில் தொழுவத்தில் மண்டியிட்டனர், அவர்கள் யார், என்ன என்பதை எண்ணினால் ஆச்சரியமாகத் தோன்றலாம். ஆனாலும், அங்கே அவர்கள்—புதிதாகப் பிறந்த இரட்சகரை வணங்குகிறார்கள்! எனவே அவர்களைப் பற்றி அறிய ஆராதனையின் சாளரத்தின் வழியாகப் பார்ப்போம். இதைச் செய்வதன் மூலம், பெத்லகேமுக்கு வெளியே அந்த குளிர்ந்த யூத இரவில் அவர்கள் கண்டதை நாம் நன்கு புரிந்துகொண்டு, அவர்களின் எதிர்வினைகளைப் பாராட்டுவோம். அவற்றை நன்கு அறிவது, வரலாற்றுப் பதிவுகள் மற்றும் பழங்காலப் பாடல்களுக்கு அப்பால் சென்று அவர்களின் அனுபவத்தில் நாமும் பங்குகொள்ளவும், அவர்களின் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவும் உதவும்.

எளிய மனிதர்கள் எளிமையான வாழ்க்கை

மேய்ப்பர்களை விவரிக்க, அவர்கள் “எளிய வாழ்க்கை கொண்ட எளிய மனிதர்கள்” என்பதை விடச் சிறந்த கூற்றை என்னால் யோசிக்க முடியவில்லை. லூக்காவின் வருணனையின் சுருக்கம் இந்த எளிமையை வலியுறுத்துகிறது: “அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்” (லூக்கா 2:8). ஆயினும் அந்த ஒரு வசனம் இந்த மனிதர்கள் யார், என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி அதிகம் பேசுகிறது.

அந்த நாட்டிலே மேய்ப்பர்கள்

பெத்லகேமைச் சுற்றியுள்ள பகுதி, பதிவுசெய்யப்பட்ட வரலாற்றின் ஆரம்ப நாட்களிலிருந்து மேய்ப்பலுடன் தொடர்புடையது. அங்கேதான் தாவீது தன் தகப்பனான ஈசாயின் மந்தைகளைக் காத்து வந்தார். பெத்லகேம் மேய்ச்சல் இடமாக இருந்தது, எனவே, மந்தைகள் மேய்வதற்கு ஏற்றது.

இங்கு மேய்ந்த ஆடுகள் சாதாரண ஆடுகள் அல்ல. எருசலேமில் உள்ள ஆலயத்துக்கு அருகாமையில் இருப்பதால், பெத்லகேமின் வயல்கள் ஆலயத்தின் ஆடுகளின் முதன்மையான களமாக இருந்தது—ஆலயத்தில் செலுத்தப்படும் பலிகளில் பயன்படுத்தப்படும் ஆடுகள் இவை. முதல் நூற்றாண்டில், பஸ்கா பண்டிகையில் மட்டும் 2,50,000 ஆடுகள் பலியாக ஆண்டுதோறும் செலுத்தப்பட்டன! இவ்வாறு, பெத்லகேமின் இந்த மேய்ப்பர்கள், பாவ நிவர்த்திக்காகப் பலிபீடத்தில் செலுத்தப்படும் ஆரோக்கியமான, பழுதற்ற ஆடுகளை வழங்குவதற்குப் பொறுப்பானவர்கள்.

“வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.”

“இரவு, நான்கு மணி வேளைகளாக பிரிக்கப்பட்டது,” என்று வேதாகம விளக்கவுரையாளர் ஜான் கில் கூறுகிறார். “மாலை, நள்ளிரவு, சேவல் கூவுகிற வேலை, காலை. அவர்கள் அவற்றை மாறி மாறிப் பாதுகாத்தனர், சிலர் மந்தையை ஒரு முறையும், சிலர் மந்தையை மற்றொரு முறையும் காத்தனர், மற்றவர்கள் அந்த நோக்கத்திற்காக வயல்களில் கட்டப்பட்ட கூடாரத்தில் அல்லது ஆலையில் தூங்கினர்.” ஆடம் கிளார்க் மேலும் கூறுகிறார், “அவர்கள் வயலில் அவற்றைப் பார்த்ததற்குக் காரணம், அந்த நேரத்தில் யூதேயா தேசத்தில் பொதுவாக இருந்த கொள்ளைக்காரர்களிடமிருந்து அல்லது ஓநாய்கள் போன்ற வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து செம்மறி ஆடுகளைப் பாதுகாப்பதற்காகத்தான்.”

இந்த “காவல்கள்” இராணுவ காவலர் பணிக்கான காவல்களை அடிப்படையாகக் கொண்டவை. முதலில் எபிரேய கலாச்சாரம் மூன்று காவல்களை மட்டுமே அங்கீகரித்தது: ஆரம்பம் (சூரிய அஸ்தமனம் முதல் இரவு 10:00 மணி வரை), நடுப்பகுதி (இரவு 10:00 மணி முதல் நள்ளிரவு 2:00 மணி), மற்றும் காலை (நள்ளிரவு 2 மணி முதல் சூரிய உதயம் வரை). ரோமானியர்கள் இந்த காலகட்டத்தில் நான்காவது காவலைச் செருகினர், ஒவ்வொன்றும் சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது.

ஒரு மேய்ப்பனின் வாழ்க்கை தனிமை மற்றும் உழைப்பு, ஆபத்து மற்றும் வறுமை ஆகியவற்றின் வாழ்க்கை. ஆனாலும், இந்தக் கஷ்டங்கள் அவர்களுடைய பாடுகளில் மிகப் பெரியதாக இருந்திருக்காது. அவர்களின் தொழில் காரணமாக, மேய்ப்பர்கள் சடங்கு ரீதியாக அசுத்தமானவர்களாகக் கருதப்பட்டனர். அவர்களின் வேலையில் மற்றவற்றுடன், ஆட்டுக்குட்டிகள் பிறப்பதில் (இரத்தத்துடன் தொடர்பு கொள்ள வைக்கும்) மற்றும் இறந்த ஆட்டுக்குட்டிகளை அப்புறப்படுத்துவதில் (இறந்த உடல்களுடன் தொடர்பு கொள்ள வைக்கும்) அவர்கள் ஈடுபட்டனர் -இரண்டுமே அவர்களைச் சடங்கு ரீதியாகத் தூய்மையற்றவர்களாக உருவாக்கியது. இதன் விளைவாக அவர்கள் ஆவிக்குரிய ரீதியில் புறக்கணிக்கப்பட்டனர்.எருசலேமில் உள்ள ஆலயத்துக்குப் பலி செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை வளர்ப்பதற்குப் பொறுப்பான நபர்களே, சடங்கு ரீதியாக அசுத்தமாகக் கருதப்பட்டதால், ஆலயத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டது மிகவும் வருத்தமாகத் தெரிகிறது. ஆனால் இந்த மேய்ப்பர்கள் இரு மடங்கு சங்கடத்தை எதிர்கொண்டனர், ஏனென்றால் அவர்கள் தங்கள் வேலையின் தன்மையால் அசுத்தமாக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவர்கள் தொடர்ந்து தங்கள் மந்தைகளுடன் இருக்க வேண்டியிருந்தது. இதன் பொருள் அவர்கள் வாரக்கணக்கில் தங்கள் பணிகளை விட்டுவிட முடியாது, எனவே அவர்கள் சுத்திகரிக்கப்படும்படி ஆலயத்துக்குச் செல்ல தடைப்படுகிறார்கள். இது ஒரு வகையான மதரீதியான பரஸ்பர முரண்பட்ட அல்லது சார்பு நிலைமை காரணமாக தப்ப முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலை அல்லது கடினமான சூழ்நிலை. ஆவிக்குரிய சிந்தனையின் உயர் சட்ட அமைப்புகளில் இருந்து அடிக்கடி குமிழ்கிறது – மேலும் இந்த துண்டிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட தொழிலாளர்கள் அதற்கு சோகமான எடுத்துக்காட்டுகளாக விளங்குகிறார்கள்.

ஒரு நபரைச் சம்பிரதாய ரீதியாக அசுத்தமாக்குவது பற்றி இஸ்ரவேலர்கள் தேவனால் நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான சட்டங்களைக் கொண்டிருந்தனர், (லேவியராகமம் 5:2-3; 7:20-21; 17:15; 21:1-15; 22:2-8 பார்க்கவும்) . “தீட்டுள்ளவன்” என்று கருதப்படும் ஒருவர் பரிசுத்தமான எதையும் தவிர்க்க வேண்டும், மேலும் ஒரு குறிப்பிட்ட சுத்திகரிப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு, இந்த மேய்ப்பர்கள் தேவனைப் பரிந்துரைக்கப்பட்ட முறையில் வழிபட வேண்டுமானால், அவர்கள் எப்போதும் சுத்திகரிப்பு செயல்முறையின் மூலம் செல்ல வேண்டியிருந்தது.

பரலோக மகிமையின் அற்புதமான தருணங்கள்

உள்ளம் மற்றும் ஞாபகங்களை வெளிப்படுத்தும் “கணங்களால்” வாழ்க்கை நிரம்பியுள்ளது. என் தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று எனக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது போல சில தருணங்கள் இருளாகவும், துரதிருஷ்டவசமாகவும் இருக்கும். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்கு முந்தைய அந்த தருணத்தை நான் நினைக்கும் போது, இழப்பு மற்றும் வலியின் உணர்ச்சிகள் மீண்டும் என் மீது பெருகுகின்றன, அப்போது என்னைத் தாக்கிய வெறுமையை நான் மீண்டும் உணர்கிறேன்.

பின்னர் அந்த அரிய அற்புதமான தருணங்கள் உள்ளன. என்னைப் பொறுத்தவரை, அந்த தருணங்களில் ஒன்று எனது திருமண நாளில் நிகழ்ந்தது. நான், என் போதகர் மற்றும் என் அப்பாவுடன் தேவாலயத்தின் முன் நின்று கொண்டிருந்தேன், அவர்தான் என் மாப்பிள்ளை தோழன். இசை ஒலிக்க மணப்பெண் வீட்டார் உள்ளே நுழைந்தனர். தேவாலயத்தின் பின்புறத்தில் உள்ள கதவுகள் சில நிமிடங்களுக்கு மூடப்பட்டன, அது எனக்கு மிகவும் நீடித்தது போல் தோன்றியது, பின்னர் இசை மாறியது மற்றும் கதவுகள் திறந்தன – மார்லின் தனது தந்தையின் கையை பிடித்தவாறே உள்ளே நுழைந்தாள். இப்போதும் அதை நினைத்துப் பார்க்கையில் தொண்டையில் ஒரு உருளை உருளும். நான் நேசித்த பெண்ணை, அவளது திருமண உடையில் பிரகாசமாகவும், அழகாகவும் பார்க்க, என்னைத் திருமணம் செய்து கொள்ள இருக்கைகளுக்கு இடையில் வருகிறாள் – எனக்காக! இது மூச்சடைக்கக்கூடியதாகவும், கண்கவர் மற்றும் அற்புதமானதாகவும், தாழ்மையானதாகவும், மூழ்கடிக்கக்கூடியதாகவும் இருந்தது. அது ஒரு அற்புதமான தருணம்.

யூதேயாவின் மலைகளில் மேய்ப்பர்கள் அந்த தருணங்களில் பார்த்தவற்றுடன் ஒப்பிடும்போது, இது மிகச் சிறியதாகத் தோன்றும். ஆயினும்கூட, அந்த நேரத்தில் நான் உணர்ந்ததை மேய்ப்பர்களும் உணர்ந்ததாக நான் கற்பனை செய்வதில் பெரிய வித்தியாசம் இல்லை – மூச்சடைக்கக்கூடியது, கண்கவர், அற்புதமானது, தாழ்மையானது மற்றும் அபரிமிதமான கம்பீரம்.

லூக்காவின் விளக்கம் நம் கற்பனைகளுக்கு அறைகூவல் விடுகிறது மற்றும் நம் இதயங்களைச் சிலிர்க்க வைக்கிறது.

அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்திலே வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். அந்தணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:

“உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக” என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள் (லூக்கா 2:9–14).

அத்தகைய விஷயத்தை நீங்கள் எவ்வாறு கருத்தில் கொள்ள ஆரம்பிக்கிறீர்கள்? ஒட்டுமொத்தமாகச் செயலாக்குவது மிகவும் அதிகம், எனவே அதைத் தருணங்களாக உடைக்க விரும்புகிறேன்.

தூதரின் தருணம்

மேய்ப்பர்களைப் பயமுறுத்தும் வகையில் “பிரகாசித்த” “கர்த்தருடைய மகிமையுடன்” வந்த “கர்த்தருடைய தூதன்” என்று தேவதூதர் விவரிக்கப்படுகிறார் (லூக்கா 2:9). கிறிஸ்துமஸ் கதையில் பலரைப் போலவே, அந்த ஏழை மேய்ப்பர்களும் அத்தகைய காட்சிக்கு முற்றிலும் பொருத்தமற்றவர்கள்.

கர்த்தருடைய மகிமை “ஷெக்கினா” என்று குறிப்பிடப்பட்டது, இது எல்லாம் போதுமான தேவனின் பரிபூரணத்தின் பிரகாசம். அந்த அற்புதமான, பரிபூரணமான ஒளியை உருவாக, தேவனின் பண்புகள் கூட்டுத்தொகையாக ஒன்றாக இணைவதாக இது இறையியல் ரீதியாக விவரிக்கப்பட்டுள்ளது. இப்போது, மேய்ப்பர்கள் பெத்லகேமைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் கர்த்தருடைய இந்த மகிமையைக் கண்டார்கள்.

பழைய ஏற்பாட்டில், கர்த்தருடைய மகிமை, தம்முடைய மக்களிடையே கர்த்தர் இருக்கிறார் என்பதற்குச் சான்றாக இருந்தது. இந்த நிகழ்வை முதலில் யாத்திராகமம் 24:16ல் நாம் பார்க்கலாம் : “கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறு நாள் அதை மூடியிருந்தது; ஏழாம் நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.” தேவஜனங்கள் தங்கள் மீதான தேவனின் ஆளுகையை ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்க சீனாயில் கூடினர். அவருடைய மகிமை அவருடைய வல்லமையையும் பராக்கிரமத்தையும் வெளிப்படுத்தியது.

அலைந்து திரிந்த இஸ்ரவேல் புத்திரருக்கான வழிபாட்டு ஸ்தலமான ஆசரிப்புக் கூடாரத்தின் பிரதிஷ்டையில் அவருடைய மகிமையை மீண்டும் காண்கிறோம்: “அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடரவாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது” (எண்ணாகமம் 16:19). இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தேசாந்தர வாழ்க்கைக்கும், ஆராதிக்கவும் ஒரு மையத்தை நிறுவிய பின்னர், அந்த வியத்தகு சாலமோனின் ஆலயமாகிய எருசலேமில் உள்ள ஆலயத்தின் பிரதிஷ்டையின் போது, அந்த மகிமையை நாம் காண்கிறோம்: “அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையில், மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று. மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக் கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று” (1 இராஜாக்கள் 8:10–11).

இஸ்ரவேல் மக்கள் தங்கள் நடுவில் தேவனின் பிரசன்னத்தை அனுபவித்தனர் – அவர்கள் விக்கிரக ஆராதனை மற்றும் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடத் தொடங்கும் வரை. அவர்கள் தேவனின் வீட்டைப் புறஜாதி சிலைகளால் கெடுத்து, அவருடைய நாமத்தை அவமதித்தனர், அதனால் தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலம் பயங்கரமான வார்த்தைகளால் பதிலளித்தார்.

தேவன் தம்முடைய ஜனங்களின் ஆவிக்குரிய விபச்சாரத்தை வெளிப்படுத்திய தொடர்ச்சியான நிகழ்வுகளுக்குப் பிறகு, படிப்படியாகக் கர்த்தருடைய மகிமை ஆலயத்திலிருந்தும், பின்னர் எருசலேமிலிருந்தும், இறுதியில் இஸ்ரவேல் மக்களிடமிருந்தும் விலகினதை எசேக்கியேல் கண்டார். இதன் உச்சக்கட்ட அடியாக எசேக்கியேல் 11:23 இல், இந்த சோகமான வார்த்தைகளை நாம் வாசிக்கிறோம்: “கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது” (எசேக்கியேல் 11:23).

எசேக்கியேலின் கடுமையான வார்த்தைகளுக்குப் பிறகு, பழைய ஏற்பாட்டில் காணப்படும் கர்த்தருடைய மகிமை பற்றிய எஞ்சியிருக்கும் சில குறிப்புகள் எதிர்காலத்தைச் சுட்டிக்காட்டுகின்றன, சுமார் 600 ஆண்டுகளுக்குப் பிறகு பெத்லகேமில் அந்த இரவு வரை அவருடைய ஜனங்கள் மத்தியில் தேவனின் பிரசன்னம் இல்லை. அங்கே, கர்த்தருடைய தூதனுடன், மகிமை திரும்பியது! கிறிஸ்துவென்னும் நபராக தம் ஜனங்களிடையே மீண்டும் ஒருமுறை தேவன் இருப்பதை அறிவிக்கத் திரும்பினார், அந்த கிறிஸ்துவை யோவான் இவ்வாறு விவரித்தார்: “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” (யோவான் 1:14).

இந்த “கர்த்தருடைய மகிமை” என்பதே ஆச்சரியத்தையும் ஆராதனையையும் தூண்டுகிறது – ஆனால் மேய்ப்பர்களின் விஷயத்தில் பயத்தைத் தூண்டியது. பல நூறு ஆண்டுகளாக, இஸ்ரவேல் தேசத்தில் கர்த்தருடைய மகிமை காணப்படவில்லை. ஆனால் இப்போது, மேய்ப்பர்களின் முன்னிலையில், மகிமை திரும்பியது!

செய்தியின் தருணம்

எந்த மத அமைப்பிற்கு அத்தியாவசியமாக இருந்தார்களோ, அதிலிருந்தே ஒதுக்கிவைக்கப்பட்ட மேய்ப்பர்கள் தங்கள் நம்பிக்கைக்காக வேறு எங்கும் பார்க்க வேண்டியிருந்தது. அன்றிரவு, தேவதூததின் செய்தியில் அவர்கள் அதைக் கண்டுபிடித்தார்கள் என்று விளக்கவுரையாளர் ஜான் கில் கூறுகிறார்:

கிறிஸ்தின் பிறப்பு பற்றிய முதல் அறிவிப்பு மேய்ப்பர்களுக்குக் கொடுக்கப்பட்டது; எருசலேமில் உள்ள இளவரசர்கள் மற்றும் பிரதான ஆசாரியர்கள் மற்றும் கற்றறிந்த மனிதர்களுக்கு அல்ல, ஆனால் பலவீனமான, பொதுவான மற்றும் படிப்பறிவற்ற மனிதர்களுக்கு; தேவன் அவர்களைத் தேர்ந்தெடுத்து அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறார், மேலும் அவர் தனது ரகசியங்களை ஞானிகளிடமிருந்தும் விவேகிகளிடமிருந்தும் மறைத்து, அவர்களின் குழப்பத்திற்கும், அவருடைய கிருபையின் மகிமைக்கும் வெளிப்படுத்தினார்.

இது கிறிஸ்துவின் ராஜ்யம் எப்படி இருக்கும், மற்றும் யாரால், சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் என்பதற்கு முன்னோடியாக இருந்தது.

எழுத்தாளர் மற்றும் கல்வியாளரான முனைவர் லாரி ரிச்சர்ட்ஸ், மேய்ப்பர்கள் இந்த பெரிய பாக்கியத்தைப் பெறுவதற்கு விசேஷமாக பக்குவப்பட்டிருந்தனர் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார்:

இப்போது பிறந்து அமைதியான தொழுவத்தில் கிடக்கும் இரட்சகர், தேவனின் ஆட்டுக்குட்டியாக இருக்கப் போகிறவர். மேலும் ஆட்டுக்குட்டியாக, அவர் உலகின் பாவங்களுக்காக மரிக்க விதிக்கப்பட்டார். இந்த மேய்ப்பர்களின் இரட்சகராகவும் மரிக்கப்போகிறார். இளம் ஆட்டுக்குட்டிகளைப் பராமரித்த மேய்ப்பர்கள், குளிர்ந்த, இருண்ட இரவுகளில் வயல்களில் அமர்ந்து தங்கள் மந்தைகளைக் காத்தும் பராமரித்தும் வந்ததால், மேய்ப்பனான பிதாவாகிய தேவனின் இதயத்தைப் புரிந்துகொள்வார்கள், அவர் தனது ஒரே ஆட்டுக்குட்டியை அனைவருக்கும் கொடுப்பதன் அர்த்தம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

மனித கண்ணோட்டத்தில், தேவனின் குமாரன் தன்னை மேய்ப்பர்களுடன் அடையாளப்படுத்திக்கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது, அந்நாட்களில் சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் சில கீழ்மட்ட உறுப்பினர்கள் இவர்கள் (யோவான் 10). ஆயினும்கூட, அவர் தன்னை ஒரு மேய்ப்பன், பாதுகாவலர் மற்றும் அவரது மந்தையைப் பின்தொடர்பவர் என்று விவரித்தார். இந்த மேய்ப்பர்கள் தங்கள் மக்களிடமிருந்தும், தங்கள் ஆலயத்திலிருந்தும், தங்கள் தேசாந்தர நம்பிக்கையிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்- தாங்கள் தேவனால் தள்ளப்படவில்லை அல்லது மறக்கப்படவில்லை என்பதைத் தேவதூதர்களின் வாயிலிருந்து அறிந்துகொண்டதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள். நம்பிக்கையின் செய்தியை முதன்முதலில் கேட்க அவர்களைக் கொண்டு அந்த உண்மையை அவர் நிரூபித்தார்: “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (லூக்கா 2:11).

மேய்ப்பர்களுக்கான அவர்களின் நம்பிக்கைச் செய்தி, உலகம் முழுவதற்குமான நம்பிக்கையின் செய்தியாக இருந்தது. பெத்லகேமில் பிறக்கும் இந்தக் குழந்தை…

  • மேய்ப்பர்களுக்கான அவர்களின் நம்பிக்கைச் செய்தி, உலகம் முழுவதற்குமான நம்பிக்கையின் செய்தியாக இருந்தது. பெத்லகேமில் பிறக்கும் இந்தக் குழந்தை…
  • நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தால் ஆடுகளை வாங்கிய மகாபெரிய மேய்ப்பன் (எபிரேயர் 13:20).
  • நமது ஆத்துமாக்களின் மேய்ப்பர் மற்றும் பாதுகாவலர் (1 பேதுரு 2:25).
  • வாடாத மகிமையின் கிரீடத்தின் வெகுமதியுடன் தன்னுடையவர்களுக்காக மீண்டும் வரும் பிரதான மேய்ப்பன் (1 பேதுரு 5:4).

எதிர்பாராத இடத்தில் தாழ்மையான ஆராதனை

நீங்கள் எங்கு ஆராதிக்க விரும்புகிறீர்கள்? சிலர் ஒரு கம்பீரமான தேவாலயத்தை விரும்புகிறார்கள், மற்றவர்கள் ஒரு எளிய சிற்றாலயத்தை விரும்புகிறார்கள். ஆனால் யார்தான் தொழுவத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்? இருப்பினும், தேவதூதர்களின் செய்தியைக் கேட்ட பிறகு, மேய்ப்பர்களின் முதல் வேலை, மரியாள் இரட்சகரைப் பெற்றெடுத்த தொழுவத்தைக் கண்டுபிடிப்பதாகும்.

என்னைப் பொறுத்தவரை, இது நம் தேவன் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும் சில விஷயங்கள் பரலோகத்தின் ராஜா ஒரு தொழுவத்தில் பிறப்பதை விட எதிர்பாராததாக இருக்கிறது.

“தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்” (லூக்கா 2:15–16).

மக்கள் ஒரு செய்தியை வெளிப்படுத்த பல்வேறு வடிவங்களைப் பயன்படுத்துவதை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன், “உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது அல்ல மாறாக உங்களுக்கு சம்பவிப்பவற்றுக்கு நீங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறீர்கள் என்பதே உங்களை வரையறுக்கிறது” இது உண்மை. வாழ்க்கையின் நல்லது மற்றும் கெட்டது, மகிழ்ச்சியான மற்றும் வேதனையான, உற்சாகமான மற்றும் திகிலூட்டும் காரியங்கள் அனைத்திற்கும் பொருந்தும் என்றெண்ணுகிறேன். நம்மைக்குறித்து வார்த்தைகள் பேசாதவற்றையும் நாம் ஆற்றும் எதிர்வினை செயல்கள் பேசும்.

மேய்ப்பர்களின் எதிர்வினை, முதலில் ஆராதிப்பது , இரண்டாவதாக, அவர்கள் பார்த்ததைச் சொல்வது!

இதைப் பார்த்ததும், இந்த குழந்தையைக் குறித்து தங்களுக்கு அறிவிக்கப்பட்ட காரியங்களை வெளிப்படுத்தினர். அதைக் கேட்ட அனைவரும் மேய்ப்பர்கள் தங்களுக்குச் சொன்னதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள் (லூக்கா 2:17–18).

மேய்ப்பர்கள் கிறிஸ்துமஸ் செய்தியை முதலில் கேட்பவர்கள் மட்டுமல்ல , முதலில் சொன்னவர்களும் கூட. அவர்கள் அனுபவித்ததைக் கண்டு வியப்புடன் தங்கள் இதயங்கள் பூரித்து, முழு அற்புதமான கதையையும் – தேவதூதர்கள் மற்றும் மகிமை மற்றும் குழந்தை ஆகியவற்றையும் சொல்லி, அந்த அதிசயத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

இதுவே உண்மையான ஆராதனை-கிறிஸ்துவின் முன் மண்டியிடுவது, அப்போது நீங்கள் மற்றவர்களுக்கு முன்பாக நின்று அவருடைய மகிமையையும் இரட்சிப்பையும் அறிவிக்க முடியும். ராஜாவின் முன்னிலையில் தாழ்மையில் மௌனமாக இருக்க வேண்டும், அப்போது நீங்கள் கேட்கக்கூடிய அனைவரிடமும் தைரியமாகப் பேசலாம்.

இவை அனைத்தும் மிகவும் சாத்தியமில்லாத ஒரு இடத்தில், மிகவும் சாத்தியமில்லாத ஒரு இரவில், மிகவும் சாத்தியமில்லாத சில மனிதர்களை உள்ளடக்கிய ஆராதனையின் அனுபவத்திலிருந்து வெளிவந்ததாகக் கொள்ளலாம்.

இதயத்திலிருந்து கொண்டாட்டம்

மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு, கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள் (லூக்கா 2:20).

விளக்கவுரையாளர் ஆடம் கிளார்க் எழுதுகிறார், “நற்செய்திகள் மெய்யானவை என்பதற்கு போதுமான சான்றுகளைப் பெற்றுக்கொண்டும், தங்கள் சொந்த மனதிலும் தெய்வீக தாக்கத்தை உணர்ந்தும், தங்கள் மந்தைகளைப் பராமரிக்கத் திரும்பி, தேவன் அவர்களுக்குக் காண்பித்தவற்றுக்காக அவரை மகிமைப்படுத்தினர். மேலும் ஆழ்ந்த சிந்தைக்கேற்ற காரியத்தையும், துதிப்பதற்கேற்ற காரியத்தையும் அவர்கள் உணர்ந்துகொண்ட ஆசீர்வாதத்திற்காகவும் அவரை மகிமைப்படுத்தினர்.”

ஒரு காலத்தில் வெளியேற்றப்பட்ட அவர்கள் இப்போது அரவணைக்கப்பட்டுள்ளனர். ஒரு காலத்தில் ஆலயத்துக்குத் தகுதியற்றவர்கள், அவர்கள் இப்போது தீர்க்கதரிசிகள் மற்றும் ஆசாரியர்களுடன் நின்று யுகங்களின் நம்பிக்கையானவரின் வருகையைக் கொண்டாடினர்.

ஆட்டுக்குட்டி பிறந்ததைக் கொண்டாடும் மேய்ப்பர்கள் – இதைவிடப் பொருத்தமானது எது?

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் இஸ்ரவேல் வழியாக ஒரு ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டேன், எங்கள் நிறுத்தங்களில் ஒன்று, பெத்லகேம்.”மேய்ப்பர்களின் வயல்வெளிகள்” என்று அழைக்கப்படும் இடத்தில் நாங்கள் ஒரு வேதாகம ஆராய்ச்சி படிப்பு அமர்வை நடத்தினோம், அதன்பிறகு பெத்லகேமின் உலகப் புகழ்பெற்ற ஒலிவ மரக்கடைகளில் பொருட்கள் வாங்கக் குழுவிற்கு வாய்ப்பு கிடைத்தது. ஒலிவ மரத்தால் செய்யப்பட்ட அழகான பெத்லகேமின் கைவினை பொருட்களை வாங்கிய பலரில் நானும் ஒருவன். பொருட்களின் விலை செதுக்கலின் நேர்த்தியைப் பொறுத்தது. சில கிட்டத்தட்டச் சாதாரணமான கலையாக மிகவும் கடினமானதாக இருந்தன, மற்றவை மிகவும் யதார்த்தமாக வடிவமைக்கப்பட்டன, அவை உருவங்கள் உண்மையில் உயிருடன் இருப்பதைப் போல இருந்தன.

பின்னர், எங்களுடைய சுற்றுலாப் பேருந்து எங்களை எருசலேமுக்கு அழைத்துச் சென்றபோது, நாங்கள் மீண்டும் மேய்ப்பர்களின் வயல்களைக் கடந்து சென்றோம். எனது மரத்தாலான கைவினைப்பொருட்களை கையில் வைத்துக்கொண்டு, அன்றைய நிகழ்வுகள் மற்றும் முதல் கிறிஸ்துமஸின் நிகழ்வுகளைப் பற்றி யோசித்தேன். தேவதூதர்கள் மேய்ப்பர்களைச் சந்தித்து ராஜாவின் வருகையை அறிவித்த பகுதி வழியாக நாங்கள் சென்றபோது, எனக்குப் பிடித்த கிறிஸ்துமஸ் பாடல்களில் ஒன்றின் வார்த்தைகளை நான் நினைத்தேன்:

பெத்லகேமின் சிறிய கிராமத்தில்,
அங்கே கிடத்தப்பட்டதோர் பிள்ளை
இயேசு கிடத்தப்பட்ட இடத்தினில்
புனித ஒளியால் விண்ணகமே பிரகாசித்ததே.
இது தாழ்மையான பிறப்பிடம்தான், இருப்பினும் ஓ அன்று தேவன்
நமக்களித்தது மிக அதிகம்தான்,
அந்த தொழுவ படுக்கையிலிருந்துதான்,
பிறந்ததோர் உன்னத வழிதான்
புனிதமான வழி. அல்லேலூயா! தேவதூதர் பாட
அல்லேலூயா, எங்கும் ஒலித்தது!
விண்ணகமே புனித ஒளியால் பிரகாசிக்க
அது ராஜாவின் பிறந்தநாள்.

 

பாறைகள் நிறைந்த, கரடுமுரடான நிலப்பரப்பில், இன்னும் சிதறிய செம்மறி ஆடுகளால் நிறைந்த அந்த மலைப்பாங்கான வயல்களின் வழியாக வாகனம் சென்றபோது, இந்த பரிச்சயமான பாடல் வரிகளுக்குக் கூடுதல் செழுமையும் அழகும் சேர்ந்தது. நான் மலைகளைப் பார்த்து, அந்த புனித இரவை இவ்வளவு காலத்திற்குப் பிறகு காட்சிப்படுத்த முயன்றபோது, எங்கள் வழிகாட்டி ஓட்டுநரிடம் பேருந்தை நிறுத்தச் சொன்னார். சாலையோரம் நின்று கொண்டிருந்த பன்னிரெண்டு அல்லது பதின்மூன்று வயதுக்கு மேல் இல்லாத இரண்டு சிறுவர்கள், ஒரு சிறிய ஆட்டுக்குட்டியைப் பிடித்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் பெத்லகேம் மேய்ப்பர்கள்.

ஏழையான, மறக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மேய்ப்பர்களுக்குத் தேவனின் குமாரன் பிறந்த அறிவிப்பு வழங்கப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த மேய்ப்பர்கள் இன்னும் வயல்களில் வேலை செய்து, “தங்கள் மந்தைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.” எங்கள் சுற்றுலா பேருந்தின் அருகே அந்த சிறுவர்கள் நடந்து செல்லும்போது, கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் அந்த குட்டி ஆட்டுக்குட்டியின் தலையில் கை வைத்திருந்தனர். அது ஒரு அற்புதமான தருணம். மேய்ப்பர்களின் வயல்களிலிருந்து மேய்ப்பர்கள் ஒரு ஆட்டுக்குட்டியை வழங்குகிறார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றும் நாம் அந்த ஆட்டுக்குட்டியைக் கொண்டாடுகையில், அதைச் செய்த முதல் மேய்ப்பர்களின் கூட்டத்தில் நாமும் சேருகிறோம்.