எனக்கு மனச்சோர்வு வரும் என்று நான் நினைத்ததே இல்லை. அது அந்நியர்களுக்கு தான் வரும் என்று நினைத்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய நெருங்கிய தோழி மனச்சோர்வுடன் போராடிய போதும், அவள் துன்பத்தைப் புரிந்து கொள்ளவில்லை. அது ஒரு சிறிய காலமே என்றும் மக்கள் கடுமையாக முயற்சித்தால் மட்டுமே மீண்டு விடுவர் என்று நினைத்தேன்.

மனச்சோர்வு என்பது ஒரு ஆழ்ந்த கருத்து. நான் சோகமாக இருக்கும்போது சாதாரணமாக “மனச்சோர்வுடன்” இருப்பதாக சொல்வேன். எனக்கு மனச்சோர்வு ஏற்படும் வரை- அதை நான் புரிந்து கொள்ளவில்லை.

எனக்கு, சோர்வு என்பது- என் தலைமீது சுற்றும் ஒரு கனமான மேகம், என் இதயத்தில் ஊர்ந்து செல்லும் ஒரு குளிர்ச்சி, என் பார்வையை இருட்டடிப்பு செய்யும் ஒரு முக்காடு. அவை மெதுவாக ஊர்ந்து செல்லும் மற்றும் உணர்ச்சியற்ற பகல்கள், வழியும் கண்ணீரும் எண்ணங்களும் நிரம்பிய இரவுகள். அது என் குடும்பத்துக்கு எதிராக வசை பாடுகிறது, சாதாரண மனிதனாக பாடசாலையிலும் சபையிலும் வெளியிலும் பாசாங்கு செய்கிறது அது ஒரு கணத்தில் கட்டுக்கடங்காத அழுகை மற்றொரு கணத்தில் எந்த உணர்ச்சியும் அற்ற நிலை. அது நான் ஒரு நாள் நன்றாக இருப்பேன் என்று எனக்குள் சிந்திக்கிறேன் மற்றும் அடுத்தநாளே முழுவதுமாக உடைந்து போகிறேன்.

நான் கடந்து வந்ததற்கு ஒரு பெயர் உள்ளதை கடந்த மூன்று மாதங்களாக அறிவேன். எனக்கு மனச்சோர்வு இருந்தது மற்றும் அதை தான் நீங்கள் அறிய வேண்டும் என்று விரும்புகிறேன்.

banner image

மன நோயைப் பற்றி தவறான சிந்தனைகள் இருக்கின்றன. நான் முதலில் உணர்ந்தபோது குழப்பமும் குற்றவுணர்வும் அடைந்தேன். கிறித்தவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் அல்லவா? எனக்கு மனச்சோர்வு இருந்தால், நான் ஏதோ தவறு செய்வதாக அர்த்தமாகுமா? மனச் சோர்வுடன் இருப்பது பாவமா?

கிரிஸ்டியானிடி டுடே-யில் வந்த ஒரு கட்டுரையில் சொன்னது: “ஆவிக்குரிய பிரச்சினைகள்-பழக்கமான அல்லது அறிக்கையிடாத பாவம், விசுவாசக் குறைவு அல்லது பிசாசின் தாக்குதல்- மனச்சோர்வை தூண்டிவிடும், அவை மனச்சோர்வின் விளைவு ஆனால் காரணம் அன்று”.

மனச்சோர்விற்காக உங்களை நொந்து கொள்ளாதீர்கள். ஏனெனில் அது உங்கள் தவறு கிடையாது. நீங்கள் அனுபவிக்கும் துன்பம் ஒரு மனநோய் அதற்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு, உதாரணமாக மரபியல் பாதிப்பு, வாழ்க்கை நிகழ்வுகள், தனிப்பட்ட பிரச்சினைகள் அல்லது உடல் நலமின்மை போன்றவை. காய்ச்சல் அல்லது உடைந்த கால் போன்ற பிரச்சனைகளுக்கு நீங்கள் ஆவிக்குரிய பிரச்சினைகள் மீது பழி சுமத்துவது இல்லை. அதுபோல தான் மனச்சோர்வு அல்லது மனநோயும்.

என் நிலையில், நான் அனுபவித்த ஒரு குறிப்பிட்ட அனுபவம்தான் மனச்சோர்வை தூண்டியது.

எனினும் உங்கள் மனச்சோர்வுக்கு ஆவிக்குரிய காரணங்கள் இருக்கும் என நினைத்தால் உங்கள் போதகர் அல்லது கிறிஸ்தவ ஆலோசகரிடம் பேசுங்கள்.

banner image

நான் பல இரவுகள் தனிமையாய் மோசமான நிலையில் இருந்தேன். பல சந்தர்ப்பங்களில் சோகம் என் தோள்கள் தாங்காமல் அழுத்தும்,மரண எண்ணங்கள் என் மனதை கடக்கும். எல்லாம் வீண் ஆனதாகவும் என் வாழ்வு எல்லா வண்ணங்களையும் இழந்ததாகவும், எனக்கு பற்றிக்கொள்ள பிடிப்பு இல்லாததாகவும் தோன்றும்.

ஒரு சில வாரங்களுக்கு முன்பு ,எங்கள் சபை போதகர் ஒரே வாக்கியத்தில் பிரசங்கத்தை முடித்தார். அது என் மனதில் பதிந்து எனக்கு ஆறுதலைத் தந்தது: தேவன் நம்முடனே நமக்காகவே இருக்கிறார்.

எப்படி இருப்பினும் இப்பொழுது எல்லாமே அர்த்தமற்றதாக தோன்றினாலும், தேவன் இன்றும் ,என்றும் ஏகசக்ராதிபதியாக, எல்லாம் அறிந்தவராக, சர்வ வல்லவராக, கருணை உள்ளவராக, இரக்கம் உள்ளவராக, அன்பானவராக மற்றும் நன்மையைத் தருபவராக இருக்கிறார்.

உங்களுக்கு உணர்வில்லாத போதும் மனச்சோர்வு தேவனுடைய அன்பை விட்டு உங்களை பிரிக்கமுடியாது (ரோமர் 8:38-39). இரவுகள் நீண்டும் துக்கத்தில் நிறைந்திருந்தாலும் விடியற்காலத்தில் களிப்பு உண்டாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் (சங்கீதம் 30:5). அவர் இரக்கங்களின் பிதாவும்,சகலவிதமான ஆறுதலின் தேவனுமாய் இருக்கிறார்,நம் துன்பங்களிலிருந்து நமக்கு ஆறுதல் தருகிறார் (2 கொரிந்தியர் 1:3).

தேவன் உங்களுக்கு உதவ விரும்புகிறார். அவர் இந்தப் போராட்டத்தில் உங்கள் பக்கமாகவே இருக்கிறார். அவர் உங்களை உறுப்படுத்துகிறார் மற்றும் பெலப்படுத்துகிறார். நீங்கள் செய்ய வேண்டியது, அவர் நாமத்தை அழைத்து, அவரைப் பற்றிக் கொள்வதே ஆகும்.

தேவனைப் பற்றிய இந்த விலையேறப்பெற்ற உண்மைகளை நாம் தினமும் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது -அதுவும் நம் மனச்சோர்வு, உணர்வுகளுடன் போராடும்போது அதிகமாக நினைவு கூர வேண்டும்.

banner image

நம்மை மனச்சோர்வு கனமாக அழுத்தும் போது நம்மால் தேவனிடம் திரும்புவது கடினமாகத் தோன்றும். வேதத்தை திறப்பதோ அல்லது ஜெபிப்பதோ கூட பெரிய செயலாக தோன்றும். எனக்கு தெரியும, ஏனெனில் எனக்கு அப்படி தோன்றியிருக்கிறது.

என்னுடைய தவறு என்னவெனில் நான் சில கீழான வழிகளில் ஆறுதலைத் தேடியது, அது தற்காலிகமாக உணர்வில்லாமல் வைத்ததே தவிர, இருதயத்தின் வலிமிகுந்த பள்ளத்தை நிரப்பவில்லை.

இருப்பினும் நாம் அவரிடம் திரும்பினால் தேவன் அதிசயம் செய்கிறார். இப்பருவத்தில் அவரது வார்த்தை குறிப்பாக சங்கீதம் முன்பு சலிப்பாய் இருந்தது, இப்போது ஆறுதலைத் தந்தது. இறுதியாக நான் சங்கீதகாரர்கள், தம்முடைய துன்பத்திலும் மரணத்தின் விளிம்பிலும் எழுதியதை புரிந்துகொண்டேன். அவர்களின் துன்பம், காயம், தேவனை நோக்கி தங்கள் கண்களை திருப்புதல், அவருடைய திட நம்பிக்கை மற்றும் உறுதியான அன்பை நினைவு கூருதலும் மற்றும் அவரது பலத்த கரங்களினால் விடுதலை பெறுவதும் என பல சங்கீதங்கள் இருக்கின்றன (சங்கீதம் 23, 30, 31, 62, 143).

என்னை மனச் சோர்வின் நிழல்கள் பாதிக்கும்போது எல்லா புரிதலுக்கும் மேலான சமாதானத்தை என் இருதயத்துக்குள் தேவன் பேசும் வசனங்களை நான் எடுத்து உரக்க வாசிப்பேன். கிறிஸ்து என்னும் மூலைக்கல்லை மையமாகக்கொண்ட துதிப்பாடல்களை கேட்பேன். அமெரிக்க கிறிஸ்தவ இசைக்கலைஞர் ஸ்டெபானி க்ரெட்சிங்கரின் ஆல்பம், ‘தி அன்டூயிங்’ என்னிடம் பலவழிகளில் பேசியது.

தேவனை மேல்நோக்கியும் வெளிப்புறமாகவும் பார்க்க முயற்சி தேவை. ஆனால், நம் தேடலும் தேவையுமான சமாதானத்தையும் ஆறுதலையும் தேவன் ஒருவரால் மட்டுமே தரமுடியும்.

banner image

ஆரம்பத்தில் நான் அனுபவித்த உணர்வுகளை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. என்னை விட்டு நீங்காத விவரிக்க முடியாத அழுகை, துக்கம், ஆழ்ந்த சோகம் மட்டுமே அறிவேன். நான் என் குடும்பத்துடன் குறிப்பாக என் பெற்றோருடன் நெருக்கமாக இருப்பேன். ஆனால் என்னால் அவர்களிடம் கூட சொல்ல முடியவில்லை, எப்படி சொல்வதென்றும் புரியவில்லை.

நான் என் நெருங்கிய நண்பர்கள், சபையின் வழிகாட்டி மற்றும் என் அத்தை அவர்களை சென்றடைந்தேன். பலரும் என்னுடன் ஜெபித்தனர். நான் மோசமான நிலையில் இருந்தபோது தேவன் இந்த சகோதரிகளை பயன்படுத்தினார். அவர்கள் எனக்கு தேவையான ஊக்கம் தரும் வார்த்தைகளை, பாடலை, வேத வசனங்களை பகிர்ந்தனர்.

இறுதியாக, நான் ஒரு கிறிஸ்தவ ஆலோசகரை பார்த்தேன். கடந்த இரு மாதங்களாக, அவர் மனச்சோர்வை தூண்டும் பிரச்சினைகளை கையாள எனக்கு உதவிக் கொண்டிருக்கிறார்.

உங்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் நம்பிக்கையான நண்பர்கள் மற்றும் ஆதரவு தரும் உறவினர்களிடம் உதவியை நாட வேண்டியது மிக அவசியம். அவசியமானால் மனச்சோர்வு தொடர்ந்தால், ஒரு கிறிஸ்தவ ஆலோசகரையோ மருத்துவரையோ நாடவேண்டும். நம் அன்புக்குரியவர்களிடம் மற்றும் ஆலோசகரிடம் பேசுவது பயமுறுத்துவதாக இருக்கலாம். ஆனால் அப்படி செய்ததற்கு நான் நன்றியுடன் இருக்கிறேன். அவர்களுடைய ஆதரவு இல்லாவிட்டால், நான் மோசமான நிலையில் இன்றும் இருப்பேன்.

அப்பொழுதிலிருந்து தேவனின் நன்மை மற்றும் விசுவாசத்தில் அவர் என் மனச்சோர்வின் மூட்டத்தில் இருந்து சிறிது சிறிதாக என்னை தூக்கி எடுத்தார். இந்த கடினமான மற்றும் இருளான காலத்தில் அவர் என் வெளிச்சமாய், என் பெலனாய், என் பாடலாய் இருக்கிறார். மிக முக்கியமாக, இந்த முறையில் அவர் மிக எளிமையான மற்றும் ஆழமாக அவர் எப்படிப்பட்டவர் என்று தெரிவித்து. எனக்கு வாக்கு தருகிறார். அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப் பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோமர் 8 :28).

அதற்காக நான் அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

நீங்கள் தனியாக இல்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேவனுடைய பிள்ளையாக நீங்கள் அன்பு செலுத்தப் படுகிறீர்கள். தேவன் உங்களுடன், உங்களுக்காகவே இருக்கிறார். அன்பு சகோதர சகோதரியே, தேவனின் அன்பில் நிலைத்திருந்து இளைப்பாருங்கள்.

உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின்கடையாந்த ரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். இருள் என்னை மூடிக்கொள்ளும் என்றாலும் இரவும் என்னை சுற்றி வெளிச்சமாய் இருக்கும். உமக்கு மறைவாக இருளும் அந்த காரப்படுத்தாது; இரவும் பகலைப் போல வெளிச்சமாய் இருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி.
— சங்கீதம் 139:7-12