பேசும்முன் யோசி

 

கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும். சங்கீதம் 141:3

 
தன் மனைவி பிரபலமான ஹோட்டலுக்குப் போகும் வழியை சரிவரக் கண்காணிக்காததால் அங்கு போக இயலாததால் செங் மன அமைதியை இழந்தான். அவர்கள் குடும்பமாக ஜப்பானைச் சுற்றிப் பார்த்து விடுமுறையைக் கழித்து, வீடுதிரும்புமுன் கடைசியாக அந்தப் பிரபல ஹோட்டலில் திருப்தியாக உணவு உண்ண திட்டமிட்டிருந்தனர். இப்பொழுது கால தாமதத்தால் உணவருந்தாமல் விமான நிலையத்திற்குச் செல்லவேண்டியதாயிற்று. ஏமாற்றமடைந்த செங் , கவனமாகத் திட்டமிடாததற்காகத் தன் மனைவியைக் குறைகூறினான்.

 

பின்பு செங் தன் மனைவியைக் குறைகூறியதற்காக வருத்தப்பட்டான். தான் மிகக் கடினமாக நடந்து கொண்டதாகவும், தானே அந்தப் பாதையை கண்காணித்திருக்கலாம் என்றும் உணர்ந்தான். அதற்கு முன்னைய ஏழு நாட்களுக்கும் மிக சிறந்த முறையில் திட்டமிட்டதற்காக மனைவிக்கு நன்றி கூட சொல்லவில்லை.

 

நம்மில் அநேகர், செங் போலவே இருக்கிறோம். சோதிக்கப்படும்போது கோபத்தால் பொங்கி கட்டுப்பாடின்றி வார்த்தைகளைக் கொட்டிவிடுகிறோம். சங்கீதக்காரனைப் போல நாமும் “கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்” (சங். 141:3) என்று எவ்வளவாக ஜெபம் செய்ய வேண்டும்.

 

நாம் அதை எவ்வாறு செயல்படுத்த முடியும்? இதோ ஒரு ஆலோசனை, பேசும்முன் யோசி. உங்களுடைய வார்த்தைகள் நல்ல வார்த்தைகளா? பயன் தரும் வார்த்தைகளா? அன்பும் கிருபையுமுள்ள வார்த்தைகளா? (எபே. 4:29-32).

 

வாய்க்கு காவல் வைப்பதென்பது என்னவென்றால், எரிச்சலடையும்பொழுது வாயை மூடிக்கொண்டு சரியான வார்த்தைகளை, சரியான தொனியில் பேச அல்லது பேசாமலிருக்க ஜெபித்து தேவனின் உதவியை நாட வேண்டும். வார்த்தைகளைக் கட்டுப்படுத்துவதென்பது வாழ்க்கை முழுவதும் தொடரும் ஓர் பணி. நல்லவேளை, “தேவன் நம்மில் கிரியை செய்து தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (பிலி. 2:13).

 

இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும். நீதிமொழிகள் 16:24