டிசம்பர் 30, 2019 அன்று, மருத்துவரான லீ வென்லியாங் அவர்கள், கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் சமூக வலைத் தள குழுவில் ஒரு செய்தியை வெளியிட்டார். சீனாவின், வுஹான் பகுதியிலுள்ள கடலுணவுச் சந்தையிலிருந்து தனிமைப்படுத்தலுக்குள்ளான ஏழு நபர்களும், “எந்த வகையைச் சார்ந்தது என்று இதுவரையிலும் குறிப்பிட்டு வகைப்படுத்தப்படமுடியாத” நூதனமானதொரு கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று எச்சரித்திருந்தார். ஒவ்வொருவரும் கவனமாக இருக்கவும் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் மாத்திரம் அவர் கேட்டிருந்தார். அதிகாரிகள் அதிருப்தியடைந்தவர்களாய், “வதந்தி பரப்புதல்”, மற்றும் அனாவசியமான பயத்தை மக்கள் மத்தியில் பரப்பினார் எனக் கூறி, மருத்துவரான லீ அவர்களைக் குற்றம் சாட்டினார்கள். பெப்ரவரி 7, 2020 அன்று 34 வயதான இந்த மருத்துவர் இறந்துவிட்டார்; அந்த நோயிலிருந்து குறைந்தது ஒரு சிலரையாவது காப்பாற்ற முயற்சித்த மருத்துவப் பணியாளர்களுக்குள், இவரது பாதிபுற்ற நிலையானது, தற்போது உலகளாவிய நோய்த்தொற்றுப்பரவலாக அறிவிக்கப்படுமளவுக்கு வந்துள்ளது.

நாம் எவரும் துர்செய்திகளை விரும்புவதில்லை, ஏனெனில், அது நம்மைச் சங்கடத்துக்குள்ளாக்குகிறது; எமது திட்டங்களைக் கெடுத்து, ஒருவித மனச்சோர்வான உணர்வை நமக்குள் பரப்பிவிடுகிறது. ஆனால், வதந்தியானது, ஏதேனும் உண்மையைப்பற்றியது என்றால் என்ன செய்வது? அறியாமை ஆபத்தானது! நம்மை அச்சுறுத்துகிற விடயத்தை நாம் அடையாளங்காண மறுத்தால், நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியாமற்போகும். உண்மைக்குக் கவனம் செலுத்தவேண்டியது இன்றியமையாதது.

அறிவுக்குப் புலனாகாத, கண்களுக்குக் காணப்படாத இந்த கொரோனா வைரஸ், ஒரு தந்திரமான நுண்ணுயிராகும். இது ஒரு நபரின் உடலுக்குள் படையெடுப்பதுபோல நுழைந்து, அந்த நபரின் சுவாசத்தொகுதிக்குள் உறுதியாக ஒட்டிக்கொண்டு, ஆயிரக்கணக்கில் பெருகி, இன்னும் பலருக்குள் வெற்றிகரமாகத் தொற்றிப் பாதிப்பை ஏற்படுத்துவதைத் தவிர, ஆரம்பத்தில் இது வேறு எதுவும் செய்யாது. எவ்வாறாயினும், தொற்றுக்குள்ளானவருக்கு விரைவில் அறிகுறிகள் தோன்றும், நோயாளியின் உடல் நலத்தையும், அவருடைய வாழ்வைக்கூட அச்சுறுத்தும். தொற்று ஏற்பட்ட தனிப்பட்டவர்களுக்கு மட்டும் இதன் விளைவுகள் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. இந்த உலகளாவிய தொற்றுநோய், பல பாதிப்புகளைத் தட்டியெழுப்பும்: சமூகத்துக்குள் பரவும், பாடசாலைகள், வேலைத்தளங்கள், விமான நிலையங்கள் யாவையும் அடைத்துப்போடும்; சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்தலை ஏற்படுத்தும்; சுகாதார அமைப்புகளையும் அவற்றின் விநியோகங்களையும் மிகைப்படுத்தும்; நகரங்களையும், முழு தேசங்களையும்கூட முடக்கிப்போடும்; நிறுவனங்களில் சரிவை ஏற்படுத்தும், தேசிய பொருளாதாரத்தை அழிவுக்குள்ளாக்கும். இன்று நாம் உணருகிறபடி, இத் தீவிர நோய்ப்பரவலின் தாக்கங்கள் தணிக்கப்படாவிட்டால், இதன் விளைவுகள், நாம் அறிந்தபடி, மனித இனமே உயிர்பிழைத்திருப்பதற்குக்கூட இது அச்சுறுத்தலாகி, பேரழிவை ஏற்படுத்தும்.

2019ன் நூதனமான கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலின் நிகழ்வானது, ~பாவம்| என்று வேதாகமம் அழைக்கின்ற ஒரு விடயத்தை நமக்கு விளக்குகிறது. மனித இனம் முழுவதிலும் இந்தப் பாவம் ஏற்படுத்தக்கூடிய பேரழிவுத் தாக்கத்தைக் குறித்து, தேவன், முதல் மனிதராகிய, நமது முதல் பெற்றோரை எச்சரித்திருந்தார். ஒரு தடைசெய்யப்பட்ட மரத்தின் கனியைப் புசிப்பதன்மூலம், பாவமான கீழ்ப்படியாமையைக் குறித்தும், மற்றும், தேவனுக்கு எதிராகக் கலகம் செய்வதைக் குறித்தும் விபரித்து, தேவன் இவ்விதம் கூறினார்:

“ஆனாலும், நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.” (வேதாகமத்தில், ஆதியாகமம் 2:17)

ஆயினும், அவர்கள் புசித்தார்கள், பின்னர் பாவமானது, ஒரு புலனாகாத, கண்ணுக்கு தெரியாத வைரஸைப்போல, முழு மனுக்குலத்தையும் தொற்றிக்கொண்டது; இது உடனடியாகவே தேவனிடமிருந்து பிரிவையும், தொடர்ந்து அனைவருக்கும் மரணத்தையும் விளைவித்தது. மறுபடியும், இன்றுள்ள புதிய கொரோனா வைரஸ்போலவே, இந்தப் பாவத்தின் விளைவுகளும் ஒரு தனிப்பட்ட நபரின் ஆரோக்கியத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தபட்டதாயிருக்கவில்லை. இத் தொற்றின் பாதிப்பானது, வீடுகளிலே நம்பிக்கையை அழித்தது, சமூகங்களுக்கிடையில் சமாதானத்தை உடைத்தது, தேசங்களுக்கிடையே முடிவில்லாத இனமுரண்பாடுகளை ஏற்படுத்தியது, இயற்கைச் சூழலையும் பாதித்தது. சுருக்கமாகச் சொன்னால், தேவன் நன்றாக படைத்த சிருஷ்டிப்பின் நோக்கமும், அங்கே இருந்ததுமான நல்லிணக்கத்தையும் பாவம் நொறுக்கிப்போட்டது. ஆனாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய சிருஷ்டிகருக்குச் செவிகொடுக்கின்ற, மற்றும் பதிலளிக்கின்ற திறனை, இந்தப் பாவம்; அபாயகரமாக முற்றிலும் சமரசப்படுத்திவிட்டது. இது, பிதாவாகிய தேவனைக் குறித்த நமது எண்ணத்தையும் சிதைத்துவிட்டது; பாவத்திற்கான நமது சுயநலத் தேர்வுகள், நம்மைத் தேவனிடமிருந்தும், அவருடைய கரிசனை மற்றும், அன்பின் அணுகுமுறையிலிருந்தும் நம்மை எக்காலத்திற்கும் பிரிக்கும் அளவிற்கு அச்சுறுத்துகின்றது.

“இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.” (வேதாகமத்தில் ஏசாயா 59:2)

சில வாரங்களாக, சில நிபுணர்களும் அரசாங்கங்களும் கொவிட் 19 தொற்றுக் குறித்து வெளிச்சமிட்டுக் காட்டுகின்றபோதும், ஆபத்து நிஜமானது என்றும், மருத்துவர் லீ வென்லியாங்கின் எச்சரிக்கையானது நன்கு நோக்கப்பட்டுக் குறிப்பிடப்பட்ட ஒன்று என்றும் பெரும்பாலானவர்கள் விரைவில் ஏற்றுக்கொண்டனர். உலகளாவிய இந்த நோய்த்தொற்றிலிருந்தும், எதிர்காலத்தில் தீவிர நோய்ப்பரவல் ஏற்படக்கூடிய அபாயத்திலிருந்தும் பாதுகாப்பதற்கு, இந்த வைரஸ்ஸின் வல்லமையை நடுநிலைப்படுத்தக்கூடிய சிகிச்சையைக் கண்டுபிடிப்பது ஒன்றே மிகவும் பயனுள்ள  தீர்வாகும் என்று அவர்கள் உணர்ந்துகொண்டனர்.

வேதாகமம், தேவனுடைய வெளிப்பாடு. பாவத்தைக் குறித்த துர்செய்தியை (மற்றும், நமது நித்திய வாழ்வை இது எப்படி அச்சுறுத்துகிறது என்பதைக் குறித்தும்) அறிவிப்பது மாத்திரமே வேதாகமத்தின் நோக்கம் அல்ல; தேவன், மனிதனுடைய இக்கட்டான நிலைமைக்கு ஒரு தீர்வை வழங்கியிருக்கிறார் என்ற நல்ல செய்தியை நமக்குக் கொடுப்பதுதான் அதன் முதன்மையான நோக்கமாகும். அவர் ஒரு வழி வகுத்திருக்கிறார். அதன்படி, அவரிடம் திரும்புகின்ற அனைவரும் பாவத்தின் தொற்றிலிருந்து சுகமடைவார்கள்; மற்றும், அவர்களுக்கு ஒரு சுத்தமானவர்கள் என்று ஆரோக்கிய அறிக்கை கொடுக்கப்படும்; மேலும், ஒரு முழுமையான அர்த்தமுள்ள வாழ்வு வாழுவதற்கான வாய்ப்பையும் அது ஏற்படுத்திக்கொடுக்கும்.

இந்த குணப்படுத்தலை வேதாகமம், “இரட்சிப்பு” என்று அழைக்கின்றது; மற்றும், தம்முடைய ஒரேபேறான குமாரனை விலைக்கிரயமாகக் கொடுக்குமளவுக்கு, பாவமுள்ள மனித குலத்திற்கான அவருடைய அன்பின் விலைக்கிரயம் எவ்வளவு மேன்மையானது என்ற தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தையும் வேதாகமம் விளக்குகிறது:

“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (வேதாகமத்தில் யோவான் 3:16)

பாவத்தொற்றின் முழு வல்லமையையும் தம்மீது எடுத்துக்கொள்ளக்கூடியதாக, நம்மைப்போல ஒருவராக வந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, அவர் தேவனுடைய குமாரன். இக் காரணத்திற்காகவே, ரோமானிய சிலுவையின் அவமானங்களையும் நோவையும், பிதாவாகிய தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டவராய் பயங்கரமான தனிமையையும் அனுபவித்து, அவர் நமக்குப் பதிலாக மரித்தார். அவர் முழு மனிதனாக இருந்தாலும்கூட, நிகரற்ற விதத்தில் பாவமற்றவராகவே இருந்தார். இதனால்தான் அவரால் பாவத்தின் பாதிப்பைச் சரிசெய்யவும், அதன் விளைவுகளை – இயற்கையான உலகத்துடனும், ஒருவருடன் மற்றொருவருக்கும், மற்றும் தேவனுடனுமான உறவைப் பாழாக்குகின்ற விளைவுகளை – ஈடுசெய்யக்கூடியதாகவும் இருந்தது. மூன்றாம் நாளில் தேவன், இயேசுவை மரணத்திலிருந்து உயிரோடெழுப்பினார்; மற்றும், பாவத்தின் தொற்றிலிருந்து நம்மைக் குணப்படுத்தக்கூடிய ஒரே இரட்சகராக அவர் இன்றும் என்றும் ஜீவிக்கிறார்.

“நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.” (வேதாகமத்தில் 1பேதுரு 2:24)

இரண்டாயிரம் வருடங்களாக, இந்த மகிமையான உண்மையை, உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும், எண்ணற்ற மக்கள் கண்டுபிடித்துள்ளனர்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாவத்திலிருந்து நம்மைக் குணமாக்குகிறார், பிதாவாகிய தேவனுடன் சமாதானமும் சந்தோஷமுமுள்ள நெருக்கமான உறவிற்குள் நம்மைத் திரும்பவும் கொண்டுவருகிறார். இந்த அற்புதமான இரட்சிப்பிற்கான திறவுகோல் – தேவனோடுள்ள நித்தியத்தை நம்மிடமிருந்து களவாடிவிடுவதாக அச்சுறுத்தும் பாவத்திற்கான மருந்து – அது இயேசுவை விசுவாசிப்பது ஒன்றேயாகும்: “அவரை விசுவாசிப்பவர்கள் எவர்களோ, அவர்கள் அழிவுக்குட்படாமல், நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.” இயேசு கிறிஸ்துவை எவ்வாறு விசுவாசிப்பது என்பதைக் குறித்து அறிந்துகொள்ளவும், அந்த தேவனுடனான அபரிதமான மகிழ்ச்சியை அனுபவிக்கவும் நீங்கள் வாஞ்சிக்கமாட்டீர்களா?

“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.” (வேதாகமத்தில் யோவான் 1:12)

மருத்துவர் லீ வென்லியாங் இப்போது ஒரு கதாநாயகனாக புகழப்படுகிறார், காரணம், அவருடைய “வதந்தி”, கொவிட் 19 தொற்றுநோயைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தியது. பாவத்தின் உலகளாவிய தொற்றானது, உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றுமொரு நிச்சயமான உண்மையாகும். ஒருவேளை, குறைவாக அறியப்பட்டதற்கான மருந்து தற்போது கிடைக்கிறது. இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மெய் வார்த்தைகளிலேயே இது அடங்கியுள்ளது:

“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” (வேதாகமத்தில் யோவான் 14:6)

மேலதிக தகவல்களுக்கு: ivorger@gmail.com

டாக்டர் ஐவோ பூபாலன் கொழும்பின் இறையியல் கல்லூரியின் முதல்வராகவும், லொசேன் மாநாட்டின் இறையியல் பணிக்குழுவின் இணைத் தலைவராகவும் பணியாற்றுகிறார்.