பரிகாசம்பண்ணப்பட்டு, சிலுவையில் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர், “இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்” (மாற்கு 15:37) என்று வேதாகமம் கூறுகிறது, ஆனால் அவருடைய இறுதி வார்த்தைகள் என்ன? “முடிந்தது” (யோவான் 19:30). தமது நோக்கத்தைத் தாம் நிறைவேற்றிவிட்டதையும், மரணம் என்பது முடிவல்ல என்பதையும் இயேசு அறிந்திருந்ததால், இயேசுவின் இந்த இறுதிக் கூக்குரலானது வலி மிகுந்ததாயினும் தேவனிடத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்ற உண்மைத்துவம் உள்ள கதறுதலாய் இருந்தது. இயேசு சிலுவையில் கூறிய ஒவ்வொன்றையும், அவருடைய இறுதி வார்த்தை வரைக்கும் பேசுவதற்கு முன்பதாக கூறிய அனைத்தையும் இந்த உயிர்த்தெழுந்த பண்டிகை நாட்களில் நாம் பார்ப்பதற்கு இருக்கிறோம். அவர் யார், நமக்காக அவர் என்ன செய்தார் என்பவற்றைக் குறித்து அவை நமக்குச் சொல்லுவது என்ன?

சிலுவையில் இயேசு பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு தியானமாக ஏழு தியானங்களுடன் அமைந்துள்ள இந்தக் கட்டுரையானது, நமக்காகவே வாழ்ந்து, மரித்து, ஜெயத்துடன் உயிர்தெழுந்த நமது இரட்சகருடன் இந்தப் பரிசுத்த வாரத்தைச் செலவிடுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை நமக்குத் தருகிறது. அவருடைய இறுதி வார்த்தைகளை இன்னும் அதிகமாகப் புரிந்துகொள்ளவும், இன்று அவை உங்களுக்கு என்ன அர்த்தத்தைத் தருகின்றன என்பதை அறியவும் தொடர்ந்து வாசியுங்கள்!

 

*இந்த வாசிப்புப் பகுதியானது  ஆங்கிலத்திலும  சிங்களத்திலும் கிடைக்கப்பெறும்.

 

“இவை இன்னும் நீண்ட நாட்கள் பூத்திருக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்று என் மனைவி அந்தப் பெரிய இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற மலர்களைப் பார்த்தபடி ஏக்கத்துடன் கூறினாள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவள் நாட்டிய பூக்களின் நறுமணத்தை நுகர்ந்து மகிழுவதற்கு அவள் அவையருகே குனிந்தாள். அவை இந்த உலகத்தில் வெகு நாட்கள் இருக்கப்போவதில்லை என்பதை அறிந்திருந்த என் தாயார், தனக்குப் பின்னரும் தனது தோட்டம் செழித்திருக்கவேண்டுமென்று விரும்பி என் மனைவிக்கு அளித்த பரிசுதான் அந்தச் செடிகள்.

சிறிது நேரத்தில், எங்கள் மூன்று வயது பேத்தி தோட்டத்துப் பாதை வழியாக துள்ளிக் குதித்து ஓடிவந்தாள். அவள் வேகமாக அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு முறையும், தூக்கிவாரிக் கட்டியிருந்த அவளது கூந்தலானது அசைவாடியது. ஒரு சிறிய கல்லை எங்கள் மகனின் நண்பன் காலேப்பிடம் கொடுத்து, “இந்தா!” என்று கூறினாள். அவளிடமிருந்து அக் கல்லைப் பெற்றுக்கொண்ட அவனும், அதைத் தன் கைகளில் வைத்து திரும்பிப் பார்த்தான். அவனுக்கு பதினேழு வயதுதான் என்றாலும், அதற்கு மிஞ்சிய முதிர்ச்சி அவனிடம் இருந்தது. அவன் அந்தக் கல்லை தன் சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டு, “பூக்கள் அதிக நாள் இருக்காது. ஆனால் இது அதிக நாள் இருக்கும்” என்றான். உடனே எங்கள் பேத்தியின் முகத்தில் வெட்கப்புன்னகை பூத்தது. தோட்டத்தில் இன்னும் பல பொக்கிஷங்களைத் தேடும் ஆர்வத்தோடு, அவள் மனநிறைவுடன் அங்கிருந்து சென்றாள். அந்த ஒரு கணத்தில் வாழ்க்கையின் குறுகிய தன்மை, அழகு மற்றும் வாக்கு, என்று அனைத்தும் வெளிப்பட்டன.

அநேக காலத்திற்கு முன்பு ஒரு மேல்வீட்டறையில், வாழ்க்கையின் வலி, அன்பு மற்றும் நம்பிக்கை உள்ளிட்ட நிகழ்வொன்று ஒரு சில மணிநேரங்களுக்குள் நிகழ்ந்தேறியது. சீஷனாகிய யோவான் அந்த இறுதி இராப்போஜனத்தை இவ்வாறு விபரிக்கிறார்:

“இயேசு இவ்வுலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்திருந்திருந்தார்” (யோவான் 13:1). விரைந்துசெல்லும் அந்தச் சில கணங்களில், உண்மையான தலைமைத்துவம் எப்படி இருக்கும் என்பதை கிறிஸ்து தமது சீஷர்களுக்குக் காண்பித்தார் (வச.3-17). தாம் உடனடியாகக் காட்டிக்கொடுக்கப்படுவது யூதாஸ் கைகளில் இருக்கிறது என்பதுபற்றி எச்சரித்தார் (வச.18-30), மேலும், சீக்கிரத்தில் தனது எஜமானரை மறுதலிப்பார் என்றும் பேதுருவையூம் எச்சரித்தார் (வச.38). சீக்கிரத்தில் தாம் விட்டுச்செல்ல இருப்பதாக சீஷர்களிடம் கூறினாலும், அவர், “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்” (14:18) என்று அவர்களுக்கு வாக்குறுதி அளித்தார். மேலும், “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” (வச.16) என்றும் அவர் அவர்களுக்கு உறுதியளித்தார்.

தமக்கு நேரவிருந்த சித்திரவதை நிறைந்த மரணத்தை எதிர்பார்த்திருந்த வேளையிலும்கூட, இயேசு, “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (14:27) என்று மற்றவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

யூதாஸைத் தவிர இயேசுவும் சீஷர்களும் சீக்கிரமாகவே அந்த மேல்வீட்டறையை விட்டு வெளியேறி ஒலிவமலைக்கு நடந்துசென்றார்கள். வேறொரு இரவாக இருந்திருந்தால், அது ஒரு ரம்மியமான மாலைநேர நடைப்பயணமாக இருந்திருக்கும். ஆனால் இந்த இரவு அப்படிப்பட்டதல்ல. அங்கே, கெத்செமனே தோட்டத்தில், அவர் தம் சீஷர்களிடம், “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது” என்று கூறினார் (மத்தேயு 26:38). “என் பிதாவே! இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்” (வச.39) என்று அவர் ஜெபித்தார்.

இங்கே நாம் இயேசுவின் மனிதத்துவத்தை அதன் முழுமையான தீவிரத்தன்மையுடன் காண்கிறோம். மேலும், முடிவுபரியந்தம் தமது பிதாவூக்கு அவர் வெளிப்படுத்திய தீவிரமான கீழ்ப்படிதலையும் இங்கே காண்கிறோம்: “ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (வச.39) என்றார்.

கெத்செமனே தோட்டத்தில் கைதுசெய்யப்பட்ட இயேசு இரண்டு நீதியற்ற விசாரணைகளையும், வரலாற்றிலேயே மிகவும் அநீதியான தீர்ப்பையும் தாங்கிக்கொண்டார். இந்தப் பிரபஞ்சத்தின் சிருஷ்டிகரான அவர், எருசலேமுக்கு வெளியே ஒரு மலையில் தாம் படைத்த சிருஷ்டிகளாலேயே சிலுவையில் அறையப்பட்டார். அந்தப் பயங்கரமான இடத்திலிருந்தே கிறிஸ்து தமது “இறுதி ஏழு வார்த்தைகளையும்” பேசினார்.

இந்த ஏழு வார்த்தைகளுக்கூடாகவும் நீங்கள் செல்லும்போது, அவை ஒவ்வொன்றினதும் பிரதிபலிப்புகளை நீங்கள் கண்டுகொள்வீர்கள். இந்தத் தியான கட்டுரைகளை நீங்கள் படிக்கும்போது, அவற்றின் முக்கியத்துவத்தைச் சிந்தித்துப் பார்க்கவும், நித்தியமாகப் பூத்திருக்கும் நம்பிக்கையின் வாக்குறுதியிலிருந்து உற்சாகத்தைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம்.

இந்த வாழ்க்கை, வலியையும் மரணத்தையும் தவிர்க்கமுடியாமல் கொண்டுவருகிறது. நாம் நேசிப்பவர்களுக்கு வெகுவிரைவில் நாம் விடைகொடுக்கிறோம். “நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன்;” என்று (1இராஜாக்கள் 2:2) தாவீது இராஜா தன்னை நெருங்கிநின்ற மரணத்தை கவித்துவமாக விபரித்ததுபோல, நாமும்; வெகுவிரைவிலேயே விடைபெறுகிறோம்.

ஆனால், கோடைக்கால பூக்களைப்போல, இந்த வாழ்க்கையும் மகத்தான அழகைக் கொண்டுள்ளது. இயேசுவின் நிமித்தமாக, நமக்கு முன்னாலுள்ள மகிழ்ச்சியை நாம் எதிர்நோக்கியிருக்கிறோம். என் மனைவிக்கு என் தாயார் கொடுத்த மலர்களானது, உலகம் தோன்றுவதற்கு முன்பே நமது சிருஷ்டிகர் திட்டமிட்டிருந்த தாவர இனப்பெருக்கத்திற்கூடாக இன்றும் வாழுகின்றன. தாயாரின் பாரம்பரியமானது அவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் தனது நண்பர்களுக்கு அன்போடு கற்களைப் பரிசளிக்கும் அவரது கொள்ளுப்பேத்தியின் மூலமாகவும் செழித்துவளருகிறது. ஆனால் இன்னும் மிக ஆச்சரியமாக, கடவுளை நேசித்து, அவருடைய குமாரனை விசுவாசிப்பதன் மூலம் அவரைப் பின்பற்றுவதைத் தெரிந்துகொண்ட அனைவருடனும் ஒரு நித்திய மீள்இணைவினை நாம் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கின்றோம்.

மலர்கள் காலப்போக்கில் மரித்துப்போகும். பெரிய மற்றும் சிறிய பரிசுகள் தொலைந்து போகலாம், மறக்கப்படலாம் அல்லது தவறாகப் பயன்படுத்தப்படலாம். ஆனால் இந்நாட்களில், என் பேத்தி ஒரு நண்பருக்குக் கொடுத்த சிறிய கல்லைப் போன்ற சிறிய மகிழ்ச்சிகள், மற்றொரு தோட்டத்தில் இருந்த மிகப்பெரிய கல்லை எனக்கு நினைவூட்டுகின்றன. “வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக் கண்டாள்” (யோவான் 20:1). “நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்” (14:19) என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கூறியதை நாம் நினைவுகூருகிறோம்.

மரணத்தை வென்றவர், தமது இறுதி ஏழு வார்த்தைகளில் நமக்கு என்ன கூறுகிறார் என்பதை நாம் காண்போம்.

டிம் குஸ்டாஃப்சன், நமது அனுதின மன்னாவின் ஆசிரியா;


 

 

வார்த்தை 1 : மன்னிப்பதற்கான கிருபை

1999, ஜனவரி மாதம் 23ம் திகதி அன்று, கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரண்டு….

படிக்கவும்

 

 

வார்த்தை 2 : மிகவும் மோசமானதா? மிகவும் காலதாமதமா?

கிறிஸ்டோபர் ஹிச்சென்ஸ் என்பவர், கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுடன்

படிக்கவும்

 

 

வார்த்தை 3: கரிசனையுள்ள ஒரு வார்த்தை

என் பெற்ரோரின் நாற்பதாவது திருமண ஆண்டு நிறைவடைந்த சில நாட்களில்….

படிக்கவும்

 

 

வார்த்தை 4: ஒருபோதும் கைவிடப்படுவதில்லை

என் தாத்தா மரணப்படுக்கையில் இருந்தபோது, நான் அவருக்கு விடைகொடுத்துப் ….

படிக்கவும்

 

 

வார்த்தை 5: நான் தாகமாயிருக்கிறேன்

இந்தியாவின் பின்தங்கிய பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு, ஆழ்துளை கிணறு….

படிக்கவும்

 

 

வார்த்தை 6: நீண்ட கால கடன்

பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முந்திய காலத்திற்குரிய 2.6 பில்லியன்….

படிக்கவும்

 

 

வார்த்தை 7: இறுதி வார்த்தைகள்

மார்ட்டின் லூத்தர் மரணப்படுக்கையில் இருந்தபோது, ஒரு போதகர்,…

படிக்கவும்

 


இயேசுவின் இறுதி வார்த்தைகள் எனக்கு என்ன அர்த்தத்தை அளிக்கிறது?

 

இல்லினாய்ஸ், சிக்காக்கோவில் உள்ள சபையில் நான் கலந்துகொள்வதற்கு முன்னர், கிறிஸ்துவின் ஏழு இறுதி வார்த்தைகள்பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. இயேசு மரிப்பதற்கு முன்னர் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் விபரிப்பதற்காக நடத்தப்பட்ட “ஏழு இறுதி வார்த்தைகள்” ஆராதனைபற்றி நான் கேள்விப்பட்ட பின்னர், நான் வேதாகமத்தைத் தேடி ஆராய்ந்தது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. என்னால் அந்த ஏழு வார்த்தைகளையும் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அதன் பின்னர், நான் முதன்முறையாக எனது திருச்சபையில் பெரிய வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்ற ஏழு இறுதி வார்த்தைகள் ஆராதனையில் கலந்துகொண்டேன். இந்தக் கூடுகையின்போது, எங்கள் சபை மக்களும் பார்வையாளர்களும் ஏறக்குறைய அனைவரும் ஆலயத்தில் நிரம்பி அமர்ந்திருந்து, ஏழு வெவ்வேறு போதகர்கள் பேசுவதை நாங்கள் கேட்டோம். இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது கூறிய ஏழு சொற்தொடர்களையூம் சுவிசேஷங்களிலிருந்து இந்தப் போதகர்கள் பகிர்ந்துகொண்டனர்.

அப்போதுதான் அவைபற்றி நான் புரிந்துகொண்டதோடு, மரிப்பதற்கு முன்னர் இயேசு கூறிய அந்த ஏழு சொற்தொடர்களையும் (“வார்த்தைகள்”) நான் கற்றுக்கொண்டேன்.

ஒவ்வொரு பெரிய வெள்ளிக்கிழமை அன்றும் நான் இந்த ஆராதனையில் கலந்துகொண்டு, இந்த ஏழு வார்த்தைகளின் அடிப்படையில் வழங்கப்படும் ஏழு வெவ்வேறு பிரசங்கங்களைக் கேட்கும்போது ஒரே அமர்வில் இத்தனை பிரசங்களைக் கேட்பது அதிகம் என்றாலும் சில வித்தியாசமான, புதிதான, ஊக்கமளிக்கும் ஒரு விடயத்தை நான் கேட்கிறேன்.

இதனால், இயேசுவையும், அவரது ஆச்சரியமான குணநலன்களையும், மற்றும் அவர் மரித்தபோது தமது சீஷர்களுக்குக் காண்பித்த முன்மாதிரியையும் நான் இன்னும் சற்று உறுதியாகப் பற்றிக்கொள்கிறேன்.

“பிதாவே, இவர்களுக்கு மன்னியும்” (லூக்கா 23:34) என்ற வசனத்தை நான் கேட்கும்போது, வாழ்வில் உண்மையிலேயே மிகவும் கடினமான விடயங்களாக இருந்தாலும், எனக்கோ அல்லது எனக்கு அன்பானவர்களுக்கோ மிகவும் தீங்காக இழைக்கப்பட்ட உண்மையாகவே வலி மிகுந்த செயல்களைக்கூட மன்னித்துவிடுவதற்கு இயேசு நமக்கு முன்மாதிரியாய் இருக்கிறார் என்பதைக் காண்கிறேன். நான் எப்படி மன்னிப்பது? இயேசுவின் கண்ணோட்டத்திலும், அவருடைய வேதனையினூடாகவும் அவருடைய வார்த்தைகளை நான் நினைவுகூர்ந்துகொண்டு, தேவனுடைய உதவியை நான் கேட்கிறேன்.

“இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்;” (லூக்கா 23:43) என்ற வார்த்தையை நான் கேட்கும்போது, வெறுமனே நான் இயேசு மன்னிப்பதை மட்டும் கேட்கவில்லை, ஒரு பாவியை அவர் மீட்டெடுப்பதையும் நான் காண்கிறேன். அவர் தம்மிடம் மனந்திரும்பும் அனைவரின் பாவங்களையும் நீக்கி, நம்முடைய கடந்த காலத்தைப் பொருட்படுத்தாமல், நித்திய ஜீவனை அளிப்பார் என்று வேதாகமத்தின் சத்தியத்தைச் செயற்படுத்துகிறவராக நான் அவரைக் காண்கிறேன் (மத்தேயு 9:2 மற்றும் யோவான் 3:16-ஐப் பார்க்கவும்). நித்திய காலமாக நம்மோடு இருக்கவேண்டும் என்ற அவருடைய ஆவலையும் நான் காண்கிறேன்.

“ஸ்திரீயே, அதோ, உன் மகன்;” என்றும், தான் நேசித்த சீஷனிடம், “அதோ, உன் தாய்;” (யோவான் 19:26-27) என்றும் கூறுவதை நான் கேட்கும்போது, அதீத வேதனையின் மத்தியிலும் கிறிஸ்து மற்றவர்களைக் குறித்து அக்கறைப்படுவதைக் காண்கிறேன். குடும்பம் இல்லாதவர்களுக்கு அவர் குடும்பத்தினரை வழங்குவதையும், ஒருவரையொருவர் பராமரித்துக்கொள்ளும்படி நமக்குக் கட்டளையிடுவதையும் நான் காண்கிறேன்.

“என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” (மத்தேயு 27:46) என்கிற வார்த்தையை நான் கேட்கும்போது, ஒரு பெரிய, விடை தெரியாத கேள்வியை உணருகிறேன். நான் ஆழமான மனச்சோர்வின் தொனியைக் கேட்கிறேன், தனிமையின் சத்தத்தைக் கேட்கிறேன். இயேசு தாம் அழைக்கப்பட்ட பணி இன்னதென்று அறிந்திருந்து, தாம் தமது சீஷர்களிடம் பேசிச்சொன்ன பணி இதுவென்றாலும் (மாற்கு 8:31-33-ஐப் பார்க்கவும்), அதை முடிக்கும் தறுவாயிலும் அவரின் வேதனையின் தொனியைக் கேட்கிறேன். நம்முடைய பாவங்களுக்கான பலியாகவும், நாம் வாழவேண்டிய வழியைக் காண்பிப்பதற்காகவும் தாம் அனுபப்பட்டதை அவர் அறிந்திருந்தார் இருந்தும், தனிமை, கைவிடப்பட்ட உணர்வு, மற்றும் விரக்தி ஆகிய உண்மையான இயல்பான மனித உணர்வுகளுடன் அவர் போராடினார். இயேசுவின் இருதயத்தை நொறுக்கும் இந்தக் கேள்வி மூலம், வாழ்க்கையின் சந்தேகங்களைத் தேவனிடத்தில் கொண்டுவந்து, சத்தமிட்டு முறையிடுவது எப்படி என்பதை நான் கற்றுக்கொள்கிறேன். புலம்புவது தவறில்லை என்பதை நான் கற்றுக்கொள்கிறேன். என்னுடைய கேள்விகளையும், கவலைகளையும் அவரிடத்தில் ஒளிவுமறைவின்றி சமர்ப்பிக்கலாம். மேலும், சில கேள்விகளுக்கு பதில் கிடைக்காமலும் போகலாம் என்பதையும் நான் கற்றுக்கொள்கிறேன் புலம்புவது என்பது என் தேவனை ஏற்றுக்கொண்டு, அந்தக் கேள்விகளை அவரிடமே விட்டுவிடுவதாகும்.

“தாகமாயிருக்கிறேன்” (யோவான் 19:28) என்ற வார்த்தையை நான் கேட்கும்போது, இயேசு முழுமையான தேவனாக இருந்தாலும், அவர் முழுமையான மனிதராகவும் இருந்தார் என்பதைக் குறித்து நான் நினைப்பூட்டப்படுகிறேன். ஒரு மனிதனாக நான் உணரும் எல்லாவற்றையும் அவரும் உணர்ந்தார்.

“முடிந்தது!” (யோவான் 19:30) என்ற வார்த்தையை நான் கேட்கும்போது, நம்முடைய இரட்சகர் தமது பணியை தமது சொந்த விருப்பத்தின்படியே முழுமைப்படுத்தியதைக் காண்கிறேன் அவர் மரித்தார், ஏனென்றால் தாம் முடித்துவிட்டதாக அவர் கூறினார். மரணபரியந்தமும் அவர் முழுமையான கட்டுப்பாட்டிலேயே இருந்தார். தாம் நிறைவேற்ற வந்த காரியம் நிறைவடைந்தபோது, அதை அவர் சத்தமிட்டு அறிவித்து, தமது ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

மேலும், “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்!” (லூக்கா 23:46) என்ற வார்த்தையை நான் கேட்கும்போது, கிறிஸ்து தம்முடைய ஆவியை தமது பிதாவாகிய தேவனிடம் மனப்பூர்வமாகவே கொடுத்துவிட்டதை நான் கேட்கிறேன். எல்லாவற்றின்மீதும் உண்மையான அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பதை அங்கீகரித்து, முழுமையான சரணாகதி, சமாதானம் மற்றும் உண்மையான விசுவாசம் ஆகியவற்றைக் காண்கிறேன். எனது பாரங்களை அவரிடத்தில் நான் ஒப்புவிக்கும்போது, தேவனுக்குள் நான் இளைப்பாறவேண்டிய அவசியத்தையும் இது நினைவூட்டுகிறது.

இயேசுவின் ஏழு இறுதி வார்த்தைகளைப்பற்றி நான் சிந்திக்கும்போது, அது என்னை மீண்டும் பின்னோக்கி அழைத்துச் செல்லுகிறது நான் அறிந்திராத ஒரு சிலுவைக்கும், அவர் மரிக்கும்படி தொங்கவிடப்பட்ட ஒரு நிகழ்விற்கும் என்னைக் கொண்டுசெல்லுகிறது. கிறிஸ்து யார் என்பதற்கும், இன்றைய காலகட்டத்திற்கான அவருடைய முன்மாதிரிக்கும் அது என்னை மறுபடியும் எடுத்துச்செல்லுகிறது. மேசியாவைப் பின்பற்றவும், தேவனுடைய திட்டத்தின்படி வாழுவதற்கும் நான் முயற்சிக்கும்போது, அதற்கு எனக்கு என்ன வேண்டும் என்பதையும் அது எனக்கு நினைவூட்டுகிறது. தமது ஆவியின் மூலமாகவும் வல்லமையின் மூலமாகவும் நாம் வாழுவதற்கு எவ்வாறு பாடுபடவேண்டும் என்பதற்கான பிரகாசிக்கும் உதாரணமாக இயேசு உண்மையாகவே வாழ்ந்தார்.

இயேசுவின் இறுதி வார்த்தைகள், அவருடைய இருதயத்தை, உணர்வுகளை, கரிசனையை மற்றும் அர்ப்பணத்தை எனக்கு நினைவுபடுத்துகின்றன. மாற்றம்பெற்ற ஒரு வாழ்வை நீங்களும் வாழ, அவருடைய வார்த்தைகள் உங்களுக்கும் உதாரணங்களாக விளங்கவேண்டுமென்று ஜெபிக்கிறேன் அதாவது, கடினமான நாட்களுக்கூடாகவும் இலகுவான நாட்களுக்கூடாகவும் அவரைப்போல அதிகமாக மாற அவருடைய மறுரூபமாக்கும் கிருபையின் வல்லமையினால் நீங்கள் போராட அவருடைய வார்த்தை உங்களை உற்சாகப்படுத்துகிறது. மற்றவர்கள் உங்களைக் காயப்படுத்தும்போது, அவர்களுக்கு மன்னிப்பு தேவைப்படும்போதும், அவர்களை எவ்வாறு அக்கறைவுடன் கவனித்துக்கொள்ளவேண்டும் என்பதற்கான தெளிவான காட்சியை அவருடைய வார்த்தைகள் வழங்குகிறது என்று நான் நம்புகிறேன். நீங்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு விடயத்தையும் அவருடைய உதவியோடு, தேவனுடைய கரங்களிலும், அவருடைய பாதுகாப்பிலும் எவ்வாறு விட்டுவிடவேண்டும் என்பதை இயேசுவின் வார்த்தைகளும் செயல்களும் உங்களுக்குக் காண்பிக்கும் என்று நான் நம்புகிறேன்.

கிறிஸ்துவின் இந்த முன்மாதிரியை இப்படிப் பின்பற்றுவதானது, நம்முடைய சொந்த பலத்தினால் சாத்தியமற்றது. அதற்கு மேசியாவின் மீதான விசுவாசம் தேவை – அதாவது தேவனுடைய வல்லமை மற்றும் கிருபையின் மீதான நிலையான நம்பிக்கையும் சார்ந்திருத்தலும் ஆகும். நாம் ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்க்கையை அவரிடத்தில் ஒப்புக்கொடுக்கவேண்டும். இயேசு நமக்கு வழியைக் காண்பித்தார்; இப்போது அதைப் பின்பற்றுவது நம்மைப் பொறுத்ததாகும்.

நீங்கள் அவரைப் பின்பற்றுவீர்களா?

கத்தாரா பாட்டன், நமது அனுதின மன்னாவின் ஆசிரியர்

 

“நாம் மன்னிப்பின் அர்த்தத்தை விளங்கிக்கொண்டு, அதை ஏற்றுக்கொண்டோமா இல்லையா என்பதற்கு,இயேசுவுக்கு நாம் வெளிப்படுத்தும் பதிலுரையே மறுக்கமுடியாத உறுதியான சான்றாகும்.”

~கேரி இன்ரிக்

 


Experience God and grow in your relationship with him
via daily devotions sent directly to your email.
SIGN UP HERE