ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;

ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.

தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள். ~ கொலோசெயர் 3:12-15

பொதுவாக கிறிஸ்துமஸ் பாடல்களில், முதல் அல்லது இரண்டாம் சரணங்களே நமக்கு பிடித்தமானதாக இருக்கும். ஆனால் ஒரு கிறிஸ்துமஸ் பாடலின் ஏழாவது சரணம், நம்முடைய காலகட்டத்திற்கு நேர்த்தியாய் பொருந்தக்கூடியதாய் அமைந்துள்ளது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட, “ஓ, வாரும், ஓ வாரும் இம்மானுவேலே,” என்ற பாடலின் சரணம் இப்படியாக இடம்பெறுகிறது:

“ஓ வாரும், தேசங்களின் ராஜாவே!

மனுஷீகத்தின் இதயங்களை ஒன்றாகக் கட்டும்;

எங்கள் சோகங்கள் அனைத்தையும் மாற்றும்;

எங்களின் சமாதானப் பிரபுவாய் தங்கியிரும்.”

நம்முடைய உடைந்த தலைமுறைக்கு பொருந்தக்கூடிய அளவிற்கு இதைவிட நேர்த்தியான வரிகளை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எப்போதும் கோபத்தினாலும், விவாதங்களினாலும், மனக்கிலேசங்களினாலும் நிறைந்திருக்கிற இன்றைய தலைமுறையினருக்கு சமாதானம் ஓர் அத்தியாவசிய தேவையாயிருக்கிறது. நம்முடைய சமுதாயத்திலும், திருச்சபையிலும், பணி இடங்களிலும், உறவுகளிலும், குடும்பங்களிலும் நிலவுகிற சோக சூழ்நிலையை மாற்றக்கூடிய, மன்னிக்கக்கூடிய, மறுசீரமைக்கக்கூடிய வல்லமை படைத்த தேவனை சார்ந்துகொண்டால் மட்டுமே அதிலிருந்து விடுபடுவது சாத்தியம். ஆகையால் வரப்போகிற இயேசுவை “சமாதானப் பிரபு” என்று ஏசாயா அழைத்தது ஆச்சரியமில்லை (ஏசாயா 9:6).

அதை நம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும்படி பவுல் அப்போஸ்தலர் நம்மை அறிவுறுத்துகிறார். “தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்” என்று எழுதுகிறார் (கொலோசெயர் 3:15). நம்முடைய உடைந்த உறவுகளை சரிசெய்வதற்கு இந்த சமாதானப் பிரபுவை நாம் அனுமதிக்கும்போது, அவருடைய சமாதானத்தின் பிரதிநிதிகளாய் நாம் மாற்றப்படுகிறோம்.

பில் கிரவடர்

என்னுடைய வாழ்க்கையில் உடைந்த உறவுகளையும் பிரிவினை மனப்பான்மையையும் எங்கு நான் பார்க்கிறேன்? இந்த விரிசலை சரிசெய்வதற்கு யாரிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டும்? மற்றவர்களோடு ஒப்புரவாகுதல் எவ்வளவு அவசியம்?

தகப்பனே, சமாதானப் பிரபுவை அனுப்பி எங்களை மீட்டுக்கொண்டதற்காய் நன்றி. அவருடைய சமாதானத்தை எங்கள் இருதயங்களில் மட்டுமில்லாது, எங்கள் உறவுகளிலும் அனுபவிக்க உதவிசெய்யும். அவருடைய சமாதானம் அருளும் அன்பின் பிரதிநிதிகளாய் நாங்கள் செயல்பட எங்களுக்கு உதவிசெய்யும்.