வெகு காலத்திற்கு முன்பு, டைனோசர்கள் வாழ்ந்ததற்கு முன்பு, கடலின் ஆழத்தில் எண்ணெய் ஆறுகள் ஓடியதற்கு முன்பு, ஒரு பெரிய ராஜா இருந்தார். இந்த ராஜா எங்கிருந்து வந்தவர் என்று யாருக்கும் தெரியாது. அல்லது, இதுவரை சொல்லப்பட்டதிலேயே சிறந்த கதையை நமக்கு கொடுப்பதற்கு முன்பு அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதும் தெரியாது. விடுதலையான வாழ்க்கையையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் அவருடைய தரிசனத்தோடு அவர் தோன்றியதிலிருந்தே அவரைக் குறித்த நம்முடைய அறிவு துவங்குகிறது. இங்கே தொடர்வது அவருடைய கதை – நம்முடைய கதையும் தான்.

அவருடைய வார்த்தையின் மூலம்

ராஜாவின் முதல் செயல், தன் திட்டத்தை நிறைவேற்றும் ஒர் இடத்தை உண்டாக்குவது. யாராலும் விவரிக்கமுடியாத வல்லமையோடு, அவர் கட்டளையிடுகிறார். பூமி உண்டானது. புதிதாய் பிறந்த அந்த பூமி குழந்தையை ஜலமும் இருளும் ஆக்கிரமித்திருந்தது. “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்று ராஜா கட்டளையிட, இருள் ஓடி ஒளிந்துகொண்டது.

சின்ன சின்ன விஷயங்களைக் கூட நேர்த்தியாய் செய்ய வேண்டும் என்று ராஜா விரும்பினார்.

பிரபஞ்சத்தின் பெரும்பான்மை தரிசாகவும் வெறுமையாகவும் இருந்ததால், ராஜா கீழே இறங்கி வந்து, தண்ணீரினால் சூழப்பட்டிருந்த, தான் தெரிந்துகொண்ட நிலப்பரப்பை மேலே கொண்டுவருகிறார். அதன் பின்பு, அந்த வெட்டாந்தரையை மழைக்காடுகளும் புல்வெளிகளும் நிறைந்த பரதீசாய் மாற்றுகிறார். உயர்ந்த மலைகளையும், ஆழமான பள்ளத்தாக்குகளையும் வெண்மையான கடற்கரைகளையும் உண்டாக்கினார். அதின் சுற்றுப்புறத்தை மகத்தாய் வடிவமைத்தார். பார்;வைக்கு என்றுமே சலிப்பு தட்டாதவண்ணம், பூமியை வர்ணங்கள், வடிவங்கள், ஓசைகள் மற்றும் சுகந்த வாசனைகளால் நிரப்பினார். அவர் உண்டாக்கிய அனைத்தின் மூலமாகவும் அவருடைய ஆளத்துவத்தையும் மேன்மையையும் நிரூபித்தார்.

அவர் முடிவில்லா ஞானத்தோடு, காற்றுமண்டலம், நிலப்பரப்பு, சமுத்திரம் ஆகியவைகளை ஜீவராசிகளைக் கொண்டு நிரப்பினார். ஒட்டகத்திலிருந்து மனிதக்குரங்குகள் வரையிலும், கண்ணிற்கு புலப்படாத உயிரினங்களிலிருந்து இராட்சத செம்மரக்காடுகள் வரையிலும், ஆராய்ந்து முடியாத அளவிற்கு தாவரங்களையும் மிருகஜீவன்களையும் உண்டாக்கினார். அவர் செய்த அனைத்து கிரியைகளிலும் ஓர் ஒழுங்கை ஏற்படுத்தும் நோக்கத்தோடு, அனைத்தையும் ஒன்றுமில்லாமையிலிருந்து படைத்தார். ஆச்சரியமான படைப்புகளால் நிறைந்திருக்கும் அவருடைய பிரபஞ்சத்தின் மூலம், எந்த ஒரு சிறிய காரியமோ அல்லது பெரிய காரியமோ அவருடைய பார்வையை விட்டு விலகுவதில்லை என்னும் உண்மையை வெளிப்படுத்தினார்.

அவருடைய சாயலில்

தன்னுடைய படைப்புகளை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்த ராஜா, கீழே குனிந்து, கைநிறைய மண்ணை அள்ளினார். அவருடைய பார்வையின் கீழ் அந்த களிமண் உருண்டை உருவம் பெற்றது. அந்த உருவத்தில் தன் சாயலை ஊதினார். அது மனிதனானது. அந்த மனிதனின் கண்கள் திறந்த மாத்திரத்தில், விடியற்காலத்தின் மூடுபனி பூமியை நிரப்பி அவனை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. எல்லாம் புதிதாயிருந்தது. காற்று தூய்மையாயிருந்தது. வெண்ணிற வால் கொண்ட வண்ணமயமான மான்கள் அவனை வெறித்து பார்த்து ஆச்சரியத்தில் வீழ்த்தியது. தன்னை வரவேற்க வந்த ஓநாயின் தோல் மேலங்கியை எடுக்க கை நீட்டினான். அந்த ஓநாயை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அவன் காலை தன் தலையால் வருடிய மானைக் கண்டு புன்னகைத்தான்.

“அவைகளைப் பராமரி, அப்போது நான் உங்களை எப்படி பராமரித்தேன் என்பதை அறிந்துகொள்வாய்.”

தோட்டத்தில் வாழ்ந்து பழகிய மனிதன், ராஜாவின் ஞானம் மற்றும் படைப்பாற்றலின் அபிமானத்தில் வளர்ந்தான். ராஜாவின் படைப்பாற்றலுக்கும் நன்மைக்கும் முடிவேயில்லை. “இவை அனைத்தும் எனக்கு சொந்தமானவைகள், அதை உன்னை நம்பி ஒப்படைக்கிறேன்; அவைகளைப் பராமரி, அப்போது நான் உன்னை எப்படி பராமரித்தேன் என்பதை அறிந்துகொள்வாய்” என்று ராஜா சொன்னார்.

அவருடைய அன்பினாலே

பராமரிப்பாளன், சிறிது நேரம் தன் வேலையிலிருந்து ஓய்வெடுக்க நேர்ந்தது. அவன் ஒரு கட்டத்தில் தனக்குள் இருக்கும் வெறுமையை உணர்ந்தான். அவன் ராஜாவை அடிக்கடி சந்தித்தாலும், குருவிகள், விலங்குகள் என்று சிநேகிதர்கள் அவனை சூழ்ந்திருந்தாலும், அவனுடைய ஆச்சரியத்தின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள அவனைப்போன்ற ஒரு ஜீவன் அவனுக்கு இல்லை. பராமரிப்பாளனின் இந்த ஏக்கத்தை ராஜா அறிந்தார். இந்த முறை மீண்டும் கிழே குனிந்து மண்ணை அள்ளாமல், அவர் தன்னுடைய அந்த சாயலுக்கு அயர்ந்த நித்திரயை ஏற்படுத்தி, அவனுடைய இருதயத்தின் பக்கத்திலிருந்த ஏதோ ஒன்றை எடுத்து, இரண்டாம் சாயலை உண்டுபண்ணினார்.

பராமரிப்பாளன் எழுந்து, ராஜா அவனுக்கு உண்டுபண்ணிக் கொடுத்த பரிசைக் கண்டு புன்னகைத்தான். இந்த இரண்டாம் சாயலும் பதிலுக்கு புன்னகைத்தது. அவர்கள் ஒன்றுபோல இருந்தனர், ஆனால் அவர்களுக்குள் வேறுபாடு இருந்தது. ஒருவருக்குள் இருக்கும் திறமையைக் கண்டு மற்றவர் ஆச்சரியப்பட்டு வியந்தனர். ராஜா அவர்களுக்கு கொடுத்த வேலையை செய்வதில் அவர்கள் மகிழ்ந்திருந்தனர். இந்த நாட்கள், இந்த முதல் தம்பதியினருக்கு நல்ல நாட்களாயிருந்தது. அவர்கள் ராஜாவோடும் அவர்களுக்குள்ளும் பலமான உறவில் இருந்தனர். இனிமையான மாலை நேரங்களில் ராஜா அவர்களின் பொருப்பில் ஒப்படைத்திருந்த மரங்களின் நடுவே உலா வந்தனர்.

DONATE

இந்த தம்பதியினருக்கு ராஜா நிறைய நன்மைகளைச் செய்துள்ளார். அவர்களுடைய அந்த தோட்ட வீட்டில் அவர்களுக்கான அனைத்தும் ராஜா அவர்களுக்கு அருளிய ஈவு. ராஜா அவர்களுடைய இருதயத்தை வென்றார். அவர்களைக் குறித்து ராஜா என்ன எண்ணுகிறார் என்பதை அவர்களுக்கு மறைக்காமல், அவர்களை வியப்பில் ஆழ்த்தினார். பராமரிப்பாளர்களின் மீதான ராஜாவின் அன்பும் மரியாதையும் தெளிவாய் விளங்கியது.

அவர்களின் எண்ணங்களையும் தீர்மானங்களையும் அந்த ராஜா கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்றாலும், அவர் ஞானமாய் செயல்பட்டார். அவர் துணிந்து அவர்களுக்கு சுயமாய் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக் கொடுத்தார். அவர்கள் விரும்பினால் ராஜாவை விட்டு விலகும் அளவிற்கு அவர்களுக்கு சுய சித்தம் கொடுக்கப்பட்டது. அவர்களால் அவரை விட்டு விலக முடியாவிட்டால், அவர்கள் அவரோடு இருப்பதையும் அவர்கள் சுதந்திரமாய் தேர்ந்தெடுக்க முடியும் என்பதும் அவருக்குத் தெரியும். சுயமாய் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இல்லாவிடில், ராஜாவின் தரிசனமான சுதந்தர பூமி என்னும் தரிசனம் சாத்தியமில்லாமல் போய்விடும்.

சத்திய சோதனை

பராமரிப்பாளர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுக்கும்பொருட்டு, அந்த தோட்டத்தின் நடுவே ராஜா இரண்டு மரங்களை நட்டார். அதில் ஒன்றை அவர் ஜீவ விருட்சம் என்று அழைத்தார். மற்றதை நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் என்று அழைத்தார். அந்த தோட்டத்தின் மைய பாதை அந்த இரண்டு மரங்களுக்கு செல்லும் வெவ்வேறு பாதைகளை திசை காட்டியது. ராஜாவின் உத்தரவின் பேரில், அந்த தோட்டத்தில் இருக்கும் அனைத்து மரங்களின் பழங்களையும் சாப்பிட அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை முன்வைக்கப்பட்டது.

அவர்கள் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியைப் புசித்தால், அவர்கள் மரித்துவிடுவார்கள். ராஜா தங்களுக்கு தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார் என்பதை பராமரிப்பாளர்கள் விளங்கிக்கொண்டனர். ஆனால் மரணம் என்று அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. அவர்கள் மகிழ்ந்திருக்கும் பொருட்டு ராஜா சகலத்தையும் அவர்கள் அனுபவிக்க அனுமதித்திருந்தார். ஆனால் ஏன் சிலவற்றிற்கு தடைவிதித்தார்?

பாவமற்ற தன்மையின் இழப்பு

மனுஷனுக்கும் மனுஷிக்கும் ராஜாவின் விதிமுறைகளோடு எந்த அளவிற்கு பிரச்சனை இருந்ததோ அதைக்காட்டிலும் அதிக பிரச்சனையுள்ள ஒரு நபரை இருவரும் சந்திக்க நேர்ந்தது. ராஜாவின் எதிரியைக் குறித்து அதுவரை அவர்கள் அறியாதிருந்தனர். அவர்களுடைய வாழ்க்கையில் தற்போது அவர்கள் சந்திக்கப்போகும் இந்த நபர் நிரந்தர கலகக்காரன் அல்ல. அவனுக்கும் ஒரு காலத்தில் கனமும் மேன்மையான ஸ்தானமும் அருளப்பட்டிருந்தது. ராஜாவின் ஆட்சியில் அவனுக்கு “ஒளியின் தூதன்” மற்றும் “விடிவெள்ளி” என்று பெயரிடப்பட்டிருந்தது.

ஒரு கட்டத்தில் இந்த ஒளியின் தூதன் தன் சுயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டான். தனக்குக் கிடைக்கப் பெற்ற அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் தான் பாத்திரவான் என்று நம்பி, தனக்கு ராஜா கொடுக்கத் தவறின அதிகாரத்தையும் பெற்றுக்கொள்ள விரும்பினான். அதிகாரத்திற்கு கீழ்படிந்து நடப்பதைக் காட்டிலும் அதிகாரத்தை செயல்படுத்தி ஆட்சி செய்வதில் இருக்கும் மேன்மையைக் குறித்து இந்த ஒளியின் தூதன் கற்பனை செய்ய ஆரம்பித்தான். அவனுடைய சொந்த இராஜ்யத்தை ஸ்தாபிக்கும் எண்ணத்தினால் ஆட்கொள்ளப்பட்டான். அந்த எண்ணத்தை செயல்படுத்த எண்ணிய அவன் வெறுமனே புறப்பட்டு போகவில்லை. ராஜாவின் ஊழியக்காரர்களில் மூன்றில் ஒரு பங்கை மனம் மாறச்செய்து தன்னோடு அழைத்துக்கொண்டு சென்றான். அதிலிருந்து ஒளியின் தூதன் “அந்தகாரப் பிரபு” என்று அறியப்பட்டான்.

இருண்ட ஆகாயத்தைப் போன்ற ஒரு இருண்ட திட்டத்தோடு, பொல்லாங்கன் மாறுவேடத்தில் தோட்டத்திற்குள் நுழைந்தான்.

தொடர்ந்த நாட்களில், பொல்லாங்கனும் அவனுடைய ஆட்களும் பூமியில் வசிப்பதற்கு தங்களுக்கான ஒரு இடத்தைத் தேடிக்கொண்டிருந்தனர். அவர்கள் போகிற வழியில், ராஜாவின் பராமரிப்பாளர்களையும் அவர்களுக்கு உண்டுபண்ணப்பட்டிருந்த தோட்ட வீட்டைக் குறித்தும் கேள்விப்பட்டனர்;. இருண்ட ஆகாயத்தைப் போன்ற ஒரு இருண்ட திட்டத்தோடு, பொல்லாங்கன் மாறுவேடத்தில் தோட்டத்திற்குள் நுழைந்தான். அவனுடைய வஞ்சகமான திட்டத்தை மறைத்த அவனுடைய வசீகர தோற்றத்தால், தோட்டத்தில் இருந்த மனுஷியிடம் தன் உரையாடலைத் துவங்கினான்.

திருப்பு முனை

நேரத்திற்கு தகுந்த தந்திரமான கேள்வியினால் பொல்லாங்கன் தன் வலையை விரிக்கிறான். “உங்கள் வீட்டிலிருந்த அனைத்தையும் அனுபவிக்க ராஜா உங்களுக்கு தடை விதித்திருக்கிறார் என்று நான் கேள்விப்பட்டது உண்மையா?” பேச்சின் துவக்கத்தில் மனுஷியானவள் ராஜாவை விட்டுக்கொடுக்கவில்லை. ஆனால் அந்த பேச்சின் ஒரு கட்டத்தில், அவளுக்குள் இதுவரை ஏற்படாத ஒரு புதிய எண்ணம் உதித்தது. “ராஜா ஏன் இதைச் செய்யக்கூடாது என்று தடைபோடுகிறார்? நாம் எதை தெரிந்துகொள்ளக் கூடாது என்று அவர் விரும்புகிறார்?” இந்த கேள்விகள் அவள் சிந்தையில் தொடர்ந்து ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது. ராஜா அவர்களை சிறைபிடித்து வைத்திருக்கிறாரா? அவர் தெரிந்துகொண்ட அளவிற்கு அவர்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காகவே அந்த விருட்சத்தின் கனியைப் புசிக்கக்கூடாது என்று தடைவிதித்திருந்தாரோ?

தன்னை படைத்தவரையே சந்தேகப்படும் இந்த அனுபவம் அவளுக்கு சற்று புதியது. ராஜாவின் ஞானத்தைக் குறித்து மனுஷனிடத்தில் அதிகம் பேசியிருக்கிறாள். அவர்கள் இருவரும் ராஜா எங்கிருந்து வந்தவர் என்று அவருடைய ஞானத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டவர்கள். ராஜாவும் தன்னைக் குறித்து அவர்களிடம் அதிகம் பகிர, அவர்களின் உறவு ஆழமானதாயிருந்தது. ஆனால் இப்போது, அவர்கள் தெரிந்துகொண்டவைகள் போதுமானதாக இல்லை என்று தெரிகிறது. அடுத்து சம்பவிக்கப்போகிற நிகழ்வு அவர்களின் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தடைசெய்யப்பட்ட அந்த பாதையில் மனுஷி நடக்க ஆரம்பித்தாள். மனுஷனையும் அவ்வழியில் வரும்படி தூண்டினாள். அந்த முதல் பராமரிப்பாளன் சற்று தயங்கினான். அந்த வழியைத் தெரிந்துகொண்டால் என்ன நேரிடும் என்ற ராஜாவின் எச்சரிப்பை சற்று நிதானித்தான். அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்திய ராஜாவின் சத்தத்தை நினைவுகூர்ந்தான்.

தடைசெய்யப்பட்ட அந்த பாதையில் மனுஷி நடக்க ஆரம்பித்தாள். மனுஷனையும் அவ்வழியில் வரும்படி தூண்டினாள்.

அவனுடைய இருதயம் படபடத்ததை மனிதன் உணர்ந்தான். மனுஷி, ராஜா மற்றும் தன்னுடைய சுயஆர்வம் என்று அனைத்தின் நடுவே அவனுடைய உணர்வுகள் சிக்கித் தவித்தன. வலிமையான போதையை உட்கொண்டவர்கள்போல அந்த புதிய பாதையில் தம்பதியர்கள் நடக்க ஆரம்பித்தனர். அவர்களுடைய சிந்தை மாற்றியமைக்கப்பட்டது. அவர்களுடைய பாவமறியா தன்மை மறைந்தது. அவர்கள் நிர்வாணிகளாகவும் பலவீனமானவர்களாகவும் தங்களை உணரத் துவங்கினர். நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் தங்களுக்கு பின்பாக இருக்க, தோட்டத்திலிருந்த இலைகளைப் பறித்து தங்கள் நிர்வாணத்தை மறைக்க முயன்றனர்.