வாசிக்க: சங்கீதம் 4:1-8

நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (வ. 4)

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் போர்ச் செயலாளர் எட்வின் ஸ்டாண்டன், தன்னை பாரபட்சமாக நடந்துகொள்வதாகக் குற்றம்சாட்டிய இராணுவ அதிகாரி ஒருவரால் கோபமடைந்தார். ஸ்டாண்டன் லிங்கனிடம் புகாரளித்தார், அவரோ அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதுமாறு பரிந்துரைத்தார். பின்னர், ஸ்டாண்டன் ஜனாதிபதியிடம் கடினமான வார்த்தைகளைக் கொண்ட கடிதத்தை அனுப்பத் தயாராக இருப்பதாகக் கூறினார். லிங்கன், “நீங்கள் அந்தக் கடிதத்தை அனுப்ப வேண்டியதில்லை , அதை அடுப்பில் வைக்கவும். நானும் கோபமாக ஒரு கடிதம் எழுதும்போது அதைத்தான் செய்கிறேன். அது ஒரு நல்ல கடிதம், நீங்கள் அதை உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எழுதும்போது நன்றாக உணர்ந்தீர்கள். இப்போது அதை எரித்துவிட்டு இன்னொன்றை எழுதுங்கள்” என்றார்.

கோபப்படுவதற்கு தாவீதுக்கு எல்லா தகுதியும் இருந்தது. பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு அவதூறாக்கப்பட்டதால் (சங்கீதம் 4:2), அவர் மீது குற்றம் சாட்டியவர்களை எதிர்த்து ஒரு கடினமான கடிதம் எழுதியிருக்க முடியும். அதற்குப் பதிலாக, தாவீது தனது உணர்ச்சிகளையும் வலியையும் தேவனிடம் ஜெபத்தின் மூலம் கொண்டுசென்று தன் நம்பிக்கையை வெளிப்படுத்தினார். பழிவாங்கலுக்குப் பதிலாக, அவர் தனது கோபத்தைத் விட்டுத் திரும்பி, தேவனின் நன்மை மற்றும் உண்மையை அமைதியாகச் சிந்திக்கிறார் (வ. 3-8).

தேவன் தன்னை தேவபக்திக்காக பிரித்தெடுத்ததை அறிந்த தாவீது (வ. 3), அவதூறு செய்பவர்களைப் பழிவாங்கும் அளவுக்குக் கோபமாக இருப்பதன் ஆபத்தைக் குறித்து எச்சரித்தார். “நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்” (வ. 4) என்பது மனக்கிளர்ச்சியினால் உண்டாகும் கோபத்திற்கு ஏற்ற வைத்தியமாகும். கோப உணர்வுகள் பாவம் அல்லவே, ஆனால் கோபம் உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிப்பது கடுமையான பாவங்களுக்கு வழிவகுக்கிறது (ஆதியாகமம் 4:1-8; எபேசியர் 4:26-27). வேறொரு இடத்திலும் தாவீது, “கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு, பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்” (சங்கீதம் 37:8) என்று எச்சரித்தார்.

அப்படியானால், தாவீது மகிழ்ந்து, “சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்” (4:8) என்று கூற முடிந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. தாவீதின் மாற்று வைத்தியத்தை (வ. 4) பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது என் மகள் என்னிடம் அடிக்கடி கூறுவது போல், “அப்பா பொறுமையாக இருங்கள்”.

—கே.டீ. சிம்

மேலும் வாசிக்க

ஒரு மனிதனின் கோபம் எப்படி முதல் கொலைக்கு வழிவகுத்தது என்பதை அறிய, ஆதியாகமம் 4:1-8 ஐப் படியுங்கள்.

சிந்திக்க

உங்களைக் கோபப்படுத்திய ஒருவரை நினைத்துப் பாருங்கள். சங்கீதம் 4-ஐப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள், வேதாகமத்தின்படி அவருக்கு/அவளுக்கு சரியான பதிலளிக்க இது உங்களுக்கு உதவும் என்பதைப் பாருங்கள். கோபத்துடனான போராட்டத்தில் இயேசுவின் முன்மாதிரி உங்களை எவ்வாறு ஊக்குவிக்கிறது?