banner image

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக; அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். கலாத்தியர் 1:3-4

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு புதுமையான ஆங்கிலப் பத்திரிகையாளரான டபிள்யூ.டி. ஸ்டெட், சர்ச்சைக்குரிய சமூகப் பிரச்சினைகளைப் பற்றி எழுதுவதில் பேர்பெற்றவர். அவர் வெளியிட்ட இரண்டு கட்டுரைகள், பயணிகளுக்கான உயிர்காக்கும் படகுகள் போதிய விகிதத்திலின்றி கப்பல்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் ஆபத்தை எடுத்துரைத்தது. அதற்கேற்றாற்போல், ஏப்ரல் 15, 1912 இல் வடக்கு அட்லாண்டிக்கில் ஒரு பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பலில் ஸ்டெட் இருந்தார். ஒரு அறிக்கையின்படி, பெண்களையும் குழந்தைகளையும் உயிர்காக்கும் படகுகளில் ஏற்றிய பிறகு, தனது தனது மிதவை சட்டையையும், உயிர்காக்கும் படகிலிருந்து தனது இடத்தையும் மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து, ஸ்டெட் தனது உயிரையே தியாகம் செய்தார்.

சுய தியாகம் குறித்து மிகவும் ஆச்சரியமான ஒன்று உள்ளது. அதற்கு கிறிஸ்துவை விடப் பெரிய உதாரணம் எதுவும் இருக்காது. எபிரேய நிருபத்தின் ஆக்கியோன், “இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து.. பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்” (எபி. 10:12,14) என்கிறார். கலாத்தியர்களுக்கு எழுதிய நிருபத்தில், இந்த மாபெரும் தியாகத்தை விவரிக்கும் வார்த்தைகளுடன் பவுல் ஆரம்பித்தார்: “பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக; அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” (கலா. 1:3-4).

இயேசு நமக்காகத் தம்மையே பலியிட்டது, அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பின் அளவுகோலாகும். அந்த விருப்பமுள்ள தியாகம் ஆண்கள் பெண்கள் என்றனைவரையும் மீட்டு, அவருடனான நித்தியத்திற்கான உறுதியளிக்கிறது.
எழுதியவர்: பில் கிரவுடர்

சிந்தனை
அன்பும் கருணையும் கொண்ட தேவனே, கிறிஸ்து எங்களுக்காகச் செலுத்திய தியாகத்தின் ஆச்சரியத்தை வார்த்தைகளால் ஒருபோதும் விவரிக்க முடியாது. எங்கள் அன்பு, ஊம்மீதான விசுவாசத்துடனும், உமக்கே உரிய ஆராதனையுடனும் வெளிக்காட்டப்படுவதாக. ஏனெனில் அடிக்கப்பட்ட உமது குமாரன் எங்கள் ஆராதனைக்குத் தகுதியானவர்.
இயேசு நம்மீதான தம்முடைய அன்பைக் காட்ட தம் உயிரையே கொடுத்தார்.