வாசியுங்கள்: லேவி 19: 1-18, 33-34

“யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம். உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்”. (வ.33-34)

பெல்ஜியம் நாட்டில் கீல் ஒரு தனித்துவமான மக்கள்தொகை கொண்ட ஒரு அழகான நகரமாக இருக்கிறது. அங்குள்ள மக்களில் கணிசமான சதவீதம் மனநோய் உள்ளவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நபர்களுக்கு விருந்தளித்துப் பராமரிக்கும் குடும்பங்களுக்கு நோயுற்ற அந்த விருந்தினர்களின் நோயைப் பற்றிய விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் விருந்தினர்களை மற்றவர்களைப் போலவே சமூகத்திற்குள் வரவேற்கிறார்கள். “காபி விற்கும் கடையிலும்கூட இந்த நோயால் மருட்சியுண்டாக்கும் இவர்களை வேறு எவரையும் போலவே அதிக மரியாதையுடன் வரவேற்று காபி பரிமாறப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்” என்று ஒரு பார்வையாளர் விவரிக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கீல் பட்டிணத்தில் அதிகமாகப் பெருகுவதில் வளர்வதில் ஆச்சரியமில்லை.

இந்த விசேஷித்த நகரம், நம்மைப் போலப் பிறரையும் நேசிக்கும் அழகான குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது. கீல் நகரத்தில் வசிப்பவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் வெறுப்பில்லாமல் சாதாரண மக்களாகப் பார்ப்பதால், அவர்கள் சமுதாயத்தில் மகிழ்ச்சியாக, முழு வாழ்க்கையையும் வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். தேவன் தம்முடைய ஜனங்களுக்கும் இதேபோல், மற்றவர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியபோது, அவர்களிடமிருந்து மிகவும் வித்தியாசமாகத் தோன்றியவர்கள் கூட அந்நியர்கள் அல்ல என்பதை அவர்களுக்கு நினைவூட்டினார், ஏனென்றால் அவர்களும் ஒரு காலத்தில் அந்நியராக இருந்தார்கள் (லேவியராகமம் 19:33). மற்றவர்களை நீதியாக நடத்துவதற்கான தேவனுடைய கட்டளைகளுக்கு அடித்தளமாக இருந்தது மற்றவர்களையும் தங்களைப் போலவே பார்ப்பது, நடத்துவதாகும். இதில் அந்நியரை நேசிப்பது மற்றும் அவர்களை “சொந்த நாட்டில் பிறந்த இஸ்ரவேலரைப் போல” நடத்துவதும் உள்ளடங்கும் (வச. 33-34).

பெரும்பாலும் நம் கலாச்சாரங்கள் மக்கள் மீது பணக்காரர் அல்லது ஏழை, பழமைவாதி அல்லது தாராளவாதி, பெரும்பான்மை அல்லது சிறுபான்மை இனமக்கள் என்று வேறுபாடுகளை முத்திரை குத்தி அவர்களைப் பிரிக்கின்றன. இந்த பிரிவினை கலாச்சார செயல்பாட்டில், நம் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் மனிதநேயத்தை மறந்துவிடுகிறோம். எல்லா மக்களுக்கும் பொதுவாகவும் சமமாகவும் நீதியுடன் செயல்படுவதற்குப் பதிலாக, நம்மிடமிருந்து வேறுபட்டவர்களைத் தவிர்த்துவிடுகிறோம். லேவியராகமம் 19ம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்ட தேவனுடைய கட்டளையின்படி நாம் நம் அண்டை வீட்டாரை நேசிக்கவேண்டும், இப்படிப்பட்ட சமூகப் பிரிவினைகளை உடைத்து பிறருடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளும்படி இந்தக் கட்டளை நமக்கு நினைவூட்டுகிறது. தேவனுடைய அன்பினால் நாம் வாழும்போது, அவருடைய சாயலில் உருவாக்கப்பட்ட பிறருடன் நம்மை ஒன்றிணைத்து, சேர்ந்து வாழ்வது கடினமல்ல. இந்த அன்பு, எப்போதும் நம்மைப் பிரிவினைக்குள் நடத்தி அச்சுறுத்தும் வேறுபாடுகளைக் காட்டிலும் பெரியது.

—மோனிகா பிராண்ட்ஸ்

மேலும் அறிய

யாத்திராகமம் 22: 21 மற்றும் உபாகமம் 10: 19 ஐ வாசியுங்கள், தேவனாகிய கர்த்தர், இஸ்ரவேல் மக்கள் கடந்த காலத்தில் எப்படி வேறு நாட்டில் அந்நியராக இருந்தார்கள் என்பதை எவ்வாறு மீண்டும் மீண்டும் நினைவூட்டினார், காரணம் வெளிநாட்டினராக இருக்கும் மக்களை அவர்கள் நேசித்து ஏற்றுச் சமமாக நடத்துவதற்காகவே.

அடுத்தது

உங்களை ஒன்றிணைக்கும் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதை வலியுறுத்துவதற்குப் பதிலாக உங்களுக்கும் பிற மக்கள் இனங்களில் இருக்கும் வேறுபாடுகள் மீது நீங்கள் கவனம் செலுத்தும்போது என்ன நடக்கும்? கடந்த காலத்தில் நீங்கள் தவிர்த்திருக்கும் மக்கள் கூட்டங்களோடு வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள நீங்கள் என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம்?