கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர் எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?… நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும். கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன் (சங்கீதம் 13:1, 5-6).

நானும் என் கணவரும் எவரெஸ்ட் அடிவாரத்திலிருந்த முகாமுக்குச் சென்றபோது, எவரெஸ்ட் சிகரத்தின் மிக அருகாமையில் இருக்கும் கண்ணோட்டத்தில், சில கண்கவர் காட்சிகளைக் காண எதிர்பார்த்தேன். ஆனால் 2 நாட்களாக அந்த மலை, மேகங்களால் சூழப்பட்டிருந்தது. அதனால் புகைப்படம் எடுப்பதற்குப் பதிலாகப் புகைப்பட அட்டைகளை வாங்கினேன்.

எங்கள் விடுமுறையானது என்னைச் சுற்றியிருப்பவர்களிடம் எனது நம்பிக்கையை நான் சித்தரிக்கும் விதத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. நான் ‘புகைப்படம்’ போன்ற கிறிஸ்துவத்தை முன்வைக்கிறேனா? என் வாழ்க்கை எப்போதும் பிரகாசமாக உள்ளதாகவும், தேவனைப் பற்றிய எனது பார்வை எப்போதும் தெளிவாக இருக்கிறது என்றும் தவறான எண்ணத்தை நான் கொடுக்கிறேனா?

தாவீது செய்தது அதுவல்ல. 13 ஆம் சங்கீதத்தின் உணர்வு நிரம்பிய பாடலில், தன்னால் தேவனை பார்க்க முடியவில்லை என்றும், அவர் என்ன செய்கிறார் என்று புரியவில்லை என்றும் ஒப்புக்கொண்டார் (வ. 1). ஆனாலும், அவருடைய ஜெபத்தின் முடிவில், தன்னால் பார்க்க முடியாதது அங்கே இருக்கிறது என்பதில் அவர் உறுதியாக இருந்தார், ஏனென்றால் அவர் தேவனின் அன்பான கவனிப்பில் அது இருக்கிறது என்பதை கண்டார் (வவ. 5-6). கிறிஸ்தவர்கள் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் வாழும் மக்களைப் போன்றவர்கள். அவர்கள் மலையை ஏற்கனவே பார்த்திருக்கிறபடியால், மேகங்கள் அதை மூடிக்கொண்டாலும் அங்கே அந்த மலை இருப்பதை அவர்கள் அறிவார்கள்

துன்பமோ அல்லது குழப்பமோ தேவனைப் பற்றிய நமது கண்ணோட்டத்தை மறைக்கும்போது, பிறரிடமும் நம்முடைய சந்தேகங்களைக் குறித்து நேர்மையாக இருக்கலாம். ஆயினும்கூட, நாம் கண்ட அவருடைய மகத்துவத்தையும் நன்மையையும் நினைவுபடுத்துவதன் மூலம் தேவன் இன்னமும் இருக்கிறார் என்ற நம்பிக்கையை வெளிக்காட்டலாம். புகைப்பட கிறிஸ்தவத்தை விட இதுவே சிறந்தது.

— ஜூலி அக்கர்மேன் லிங்க்