வாசியுங்கள்: மத்தேயு 25:31-46

வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள் (வச.36).

பல ஆண்டுகளுக்கு முன்பு, இருமுனை மூளைகோளாறால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்ப உறுப்பினருக்குத் தீவிர மனச்சிதைவு ஏற்பட்டது. இந்த தீவிர மனநோயால் அவர் வேலையை இழந்தார், சிறைச்சாலை செல்ல நேரிட்டது மேலும் வீடற்றவராகவும் மாறினார். அவருக்கு எவ்வாறாவது உதவிசெய்ய இரண்டு மாதங்களாக நான் சமூக சேவையாளர்கள், சட்ட அமலாக்க அதிகாரிகள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொலைப்பேசி மூலம் பல முயற்சிகளை மேற்கொண்டேன். எனது குடும்ப உறுப்பினரின் திருச்சபை நண்பர்களையும் தொடர்பு கொண்டேன். ஆனால் எவராலும் எனக்கு ஆக்கப்பூர்வமான உதவிகளை, வழிமுறைகளை வழங்க முடியவில்லை.

தேவனுடைய அளவற்றக் கிருபையால் இன்று அந்த குடும்ப உறுப்பினர் நலமுடன் இருக்கிறார். ஆனால் அந்த நாட்கள், என் வாழ்க்கையின் மிகக் கடினமான நாட்களாக இருந்தது.

திருச்சபைகளில் உள்ள பெரும்பாலான மக்கள் பயிற்சி பெற்ற மருத்துவ மற்றும் மனநல வல்லுநர்கள் அல்ல, எனவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றவர்களுக்கு உதவிசெய்வது, மனதுருக்கம் மற்றும் அன்பிலிருந்து ஆரம்பிக்கிறது என நான் கற்றுக்கொண்டேன். மத்தேயு 14:14 இல் இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனமுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார். அனைத்து வியாதிகளிலிருந்தும் இயேசு அவர்களை சுகமாக்கினார் என்பதைச் சுவிசேஷங்கள் தொடர்ந்து காட்டுகின்றன. அவர் வியாதியைக் கண்டு விலகிச் செல்லவோ அல்லது அவர்களைக் கைவிடவோ இல்லை. அவர் அவர்களைப் புறக்கணிக்கவோ அல்லது அவர்களின் நோய்களுக்காக அவர்களை அவமானப்படுத்தவோ இல்லை. அதற்குப் பதிலாக, இயேசு அவர்களுடன் உரையாடித் தனிப்பட்ட தொடர்பை ஏற்படுத்தினார். அவர் அவர்கள் மீது மனமிறங்கினார் (மத்தேயு 14:13-14, 20:29-32). அவருடைய வல்லமையைப் பெற்று நாமும் அவ்வாறு செயல்பட முடியும்.

நம்மைச் சூழ வாழும் மனநலப் பிரச்சனை கொண்ட சகோதர சகோதரிகளிடம் அன்பு காட்டுவதற்கான ஒரு வழி; அன்பாகவும் கரிசனையுள்ளவர்களாகவும் நடந்துகொள்வதுதான். நம் கண்கள், நமது குரலின் தொனி மற்றும் நமது சொற்களற்ற தொடர்பு ஆகியவை அவர்களுக்கு நம் அவமதிப்பையோ அல்லது இரக்கத்தையோ வெளிப்படுத்தலாம்.

நாம் நமது அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்தும் மற்றொரு வழி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் என்ன என அறிந்து, எப்படியாவது அவர்களுக்கு உதவும்படி செயல்படுவதாகும். தேவனுடைய இரக்கத்தைக் காண்பிப்பதும் மற்றும் நோயுற்றவர்கள் பயனடையும்படியான வழிமுறைகளுக்கு நேராக அவர்களை வழிநடத்துவதின் மூலம் நாம் அவர்களுக்குச் சேவை செய்யலாம். இப்படி உதவி செய்வதினால் நாம் அதை ஆண்டவராகிய இயேசுவுக்கே அச்சேவையைச் செய்கிறோம் (வச.36).

—மர்லேனா கிரேவ்ஸ்

மேலும் அறிய

சங்கீதம் 42:3-5, 11-ல் கூறப்பட்டுள்ள மனிதர்களின் ஆழ்ந்த வேதனையின் வெளிப்பாடுகளை வாசிக்கிறோம், இப்படிப்பட்ட வழியில் பாடுகளை உணரக்கூடிய மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் எவ்வாறு உதவிசெய்யலாம் என்பதை எண்ணிப் பாருங்கள்.

அடுத்தது

பக்தியுள்ள கிறிஸ்தவ விசுவாசிகள் கூட மனச்சோர்வு மற்றும் பிற வகையான மன நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அதை ஏற்க அல்லது புரிந்துகொள்ள முடிகிறதா? ஏன் அல்லது ஏன் இல்லை? இயேசு இப்படிப்பட்ட மனநலப் பிரச்சனை உள்ளவர்களை எப்படி கவனித்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்?