வாசியுங்கள்: யாத்திராகமம் 16:16-30

மோசே அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான். (வ.23)

ஒரு உலகளாவிய அறிஞர் வேதாகமக் கல்லூரிக்குச் சென்றபோது, ஞாயிற்றுக்கிழமை அன்று தோட்ட வேலை செய்யும் ஒரு சக அமெரிக்க ஊழியரைக் கண்டு வினோதமாக உணர்ந்தார். அவரைப் பொறுத்தமட்டில், அந்த ஞாயிற்றுக்கிழமை அவரின் இச்செயலானது ஓய்வு நாளுக்கு ஏற்றதாகத் தோன்றவில்லை. ஆனால் அவரது சக ஊழியர் நடுதல், விதைத்தல் மற்றும் தோண்டுதல் மூலம் ஓய்வெடுக்கும் அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் மன நிறைவையும் பெறுவதாகக் கண்டறிந்தார். ஓய்வுநாள் நியமத்தை இருவரும் வெவ்வேறு விதமாகப் புரிந்துகொண்டாலும், ஒவ்வொரு வாரமும் ஓய்வெடுக்க முயல்வதின் முக்கியத்துவத்தை இருவரும் ஏற்றுக்கொண்டனர்..

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் ஓய்வுநாளை ஏற்படுத்தினார். அந்த ஓய்வுநாள் அவருடைய மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. இஸ்ரவேல் மக்கள் இதைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஓய்வு நாளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கான தெளிவான வழிமுறைகளைத் தேவன் கொடுத்தார். ஆறாம் நாளில் அவர்கள் இரண்டு நாட்களுக்கு போதுமான மன்னாவைச் சேகரிக்க வேண்டும், இதனால் ஓய்வுநாளைத் தேவனுக்கென்று அர்ப்பணித்து, அந்நாளில் “முழுமையான ஓய்வை” அனுபவிக்க முடியும் (யாத்திராகமம் 16:23). ஆனால் அவர்களில் சிலர் அதற்குச் செவிசாய்க்கவில்லை, ஆச்சரியப்பட்டு, “கர்த்தர் மோசேயிடம்: என் கட்டளைகளையும் என் பிரமாணங்களையும் கைக்கொள்ள ஏந்தமட்டும் மனதில்லாதிருப்பீர்கள்?” என்று கேட்டார் (வ.28).

தேவன், தம் ஜனங்கள் தம்மையே நம்பி இருக்கவேண்டும் மற்றும் தாம் தரும் இளைப்பாறுதலையும் பெறவேண்டுமென விரும்பினார். அனைத்திற்கும் மேலாக, நாம் இயந்திரங்களைப் போலச் செயல்பட வேண்டும் என்று அவர் ஒருபோதும் விரும்பியதில்லை. நம் சரீரம், உள்ளம் மற்றும் ஆத்துமாவில் புத்துணர்வடைய நம் வேலையிலிருந்து ஓய்வு தேவை என்பதை அறிந்து, ஓய்வுநாளை அவர்களுக்காக ஏற்படுத்தினார். நாம் நமது சொந்த முயற்சிகளை மட்டும் சாராதிருக்கும்போது, நமது சொந்த உழைப்பால் அல்ல தேவனே நம்மை ஆதரிக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

ஓய்வெடுக்க வேண்டும் என்ற தேவனுடைய கட்டளையை நீங்கள் எவ்வாறு விளங்கிக்கொள்கிறீர்கள்? கடந்த காலத்தில் நீங்கள் ஓய்வுநாளை எதிர்மறையாக உணர்ந்திருந்தால், இப்பொழுது அது தேவன் உங்கள் மீது காட்டும் அன்பின் வெளிப்பாடாக எப்படி உங்கள் புரிதலை மாற்றியமைக்கும்? நாம் தேவனாகிய கர்த்தரை முழுமையாக நம்ப வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அது நமது வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு அவரில் இளைப்பாறுவதற்கு போதுமானதாயிருக்கும்..

—எமி பவுச்சர் பை

மேலும் அறிய

தேவனாகிய கா்த்தா் தம் ஜனத்திற்கு வானத்திலிருந்து மன்னாவைக் கொடுத்தாா், பின்பு அவருடைய ஒரேபேரான குமாரனாகிய இயேசுவை ஜீவ அப்பமாகத் தந்தாா் (யோவான் 6:25-59 பாா்க்கவும்).

அடுத்தது

கிருபை மற்றும் ஒழுக்கம் இவைகளுடன் நம் வாழ்க்கையில் ஓய்வை எவ்வாறு நாம் ஒருங்கிணைக்க முடியும்? அவர் தருகிற ஓய்வில் தேவனுடைய அன்பை நீங்கள் எவ்வாறு அனுபவித்திருக்கிறீர்கள்?