“உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மைநோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.” (சங்கீதம் 31:22)
அண்டார்டிக்காவின் 9 மாத நீண்ட குளிர்காலத்தில், அக்கண்டம் இருளில் மூழ்கி, அதின் வெப்பநிலை -82 °C வரை குறைந்துவிடும். அங்குப் பிப்ரவரி பிற்பகுதியிலிருந்து நவம்பர் வரை விமானச் சேவை நிறுத்தப்படும். 2001 ஆம் ஆண்டில், இதனால் சிதறி இருக்கும் ஆராய்ச்சி நிலையங்களில் உள்ள தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, வெளியுலக தொடர்பிலிருந்து கிட்டத்தட்டத் துண்டிக்கப்பட்டனர். இரண்டு துணிச்சலான மீட்புக் குழுவினர் துருவக் குளிர்காலத்தில் ஊடுருவி, உடனடி மருத்துவச் சிகிச்சை தேவைப்பட்டவர்களை விமானத்தில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
நாம் அனைவரும் சில சமயங்களில் உதவியற்றவர்களாகவும் துண்டிக்கப்பட்டவர்களாகவும் உணர்கிறோம். உதவிக்காக நாம் இடும் கூக்குரலைத் தேவன் கூட கேட்கவோ அல்லது பதிலளிக்கவோ முடியாது என்று தோன்றலாம். சங்கீதக்காரனாகிய தாவீது தனது இக்கட்டான காலத்தில் இவ்வாறுதான் பயந்தார்: “உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்!” ஆயினும், கர்த்தர் தன்னை மறக்கவில்லை என்பதை அவர் கண்டுகொண்டதால், “நான் உம்மைநோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்” (சங்கீதம் 31:22) என தாவீதால் மகிழ முடிந்தது.
எந்தச் சூழ்நிலைகள் இன்று உங்களை உதவியற்றவர்களாகவும் நம்பிக்கையற்றவர்களாகவும் உணர வைக்கின்றன? உடல்நலம் குறைபாடா? உடைந்த உறவுகளா? மிகவும் தேவையிலுள்ள குடும்ப உறுப்பினரா? இயேசு கிறிஸ்துவில், தேவன் நம்மை இரட்சிக்கத் தனது மீட்கும் அன்பின் மூலம் நமது இருண்ட உலகில் ஊடுருவினார். எனவே அவர் நம்மை அணுகி, மிகவும் அவநம்பிக்கையான சூழ்நிலைகளில் நமது அச்சங்களை அமைதிப்படுத்த அவரால்தான் முடியும். தேவனின் வல்லமையினின்றும், தாங்கி பிடிக்கும் சமாதானத்தினின்றும் நாம் ஒருபோதும் துண்டிக்கப்படுவதில்லை.
— டேவிட் சி. மெக்காஸ்லேண்ட்
|
|