கர்த்தர்: உனக்குச்(கிதியோன்) சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார். நியாயாதிபதிகள் 6:23

முதல் முறையாக தூண்டிலில் மீன்பிடிக்கும் ஆசையிலிருந்த பத்து வயதான க்ளியோ, கொள்கனில் இருந்த புழுக்களைப்பார்த்த போது மீன் பிடிக்கத் துவங்குவதற்கு சற்றுத்தயங்கினார். அவர் எனது கணவரிடம், “எனக்கு உதவுங்கள்” என்றார். என்ன பிரச்னை? என்று என் கணவர் அவரிடம் கேட்டபோது, “எனக்கு புழுக்கள் என்றால் பயம்!” என்று க்ளியோ பதிலளித்தார். அவருடைய பயம் அவரை செயல்படவிடாமல் தடுத்தது.

வளர்ந்து முதிர்ந்த ஆண்களையும் கூட பயம் முடக்கிவிடும். கிதியோன் இரகசியமாக ஒளிந்து கொண்டு, கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிப்பதற்காக ஆலைக்கு சமீபமாய் அதைப் போரடித்துக்கொண்டிருந்த போது, கர்த்தருடைய தூதன் தரிசனமானதும் பயந்திருக்க வேண்டும் (நியாயா. 6:11). தம் ஜனங்களை யுத்தத்தில் வழி நடத்த கர்த்தர் அவரைத் தெரிந்தெடுத்ததாக தேவதூதன் கிதியோனிடம் கூறினார் (வச. 12-14).

கிதியோனின் பதில்? “ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்” (வச. 15). கர்த்தருடைய பிரசன்னத்தால் உறுதியளிக்கப்பட்ட பின்பும் கிதியோன் சற்று பயந்தவராகவே காணப்பட்டார். மேலும், தேவன் வாக்களித்தபடி இஸ்ரவேலரைக் காப்பாற்ற தன்னைப் பயன்படுத்துவார் என்பதனை உறுதிப்படுத்த அடையாளங்களைக் கேட்டார் (வச. 36-40). கிதியோன் வேண்டிக்கொண்டதின் படியே கர்த்தர் பதிலளித்தார். இஸ்ரவேலர்கள் யுத்தத்தில் வெற்றி பெற்று நாற்பது வருடங்கள் அமைதியான வாழ்வினை அனுபவித்தனர்.

சிறிய புழுக்கள் முதல் பெரிய போர்கள் வரை பல்வேறு வகையான பயங்கள் நம் அனைவருக்கும் உள்ளன. கிதியோனின் கதை நமக்கு ஒன்றை உறுதியாகக் கற்பிக்கிறது: தேவன் நம்மை ஏதாவது செய்யச் சொன்னால் அதைச் செய்வதற்கான பலத்தையும் வல்லமையையும் அவர் நமக்குத் தருவார்.

– ஆனிசிட்டாஸ்

சிந்தனை

தேவனே, நீர் எங்களுடன் இருக்கிறீர் என்ற நிச்சயதிற்க்காய் உமக்கு நன்றி.
பயத்தை மேற்கொள்ள ஜீவனுள்ள தேவன் மீது உங்கள் நம்பிக்கையைவையுங்கள்.

 

 

 

banner image