அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்… அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது.
லூக்கா 1:78-79

“நாம் இப்போது தேவனுக்கு மகிமை செலுத்தப்போகிறோம்.” ஆர்மோனியம் முழங்க, பாடல் குழவினர் பாட, கூடியிருந்த மக்கள் சேர்ந்து பாட ஆரம்பித்தனர். ஆனால் இது திருச்சபை ஆராதனை அல்ல. அதை நடத்துபவரும் பிரசங்கியுhர் அல்ல. மாறாக, இது பிரிட்டனின் கிளாஸ்டன்பரி இசை விழாவில் ஒரு ராப் இசைக்கலைஞரின் செயல். அன்றிரவு அவர் 100,000க்கும் அதிகமான மக்களை, தேவனின் கிருபைக்கு பாத்திரவான்கள் இல்லாதபோதிலும் அவருடைய கிருபையால் திக்குமுக்காடச்செய்தார் என்னும் வரிகள் கொண்ட ஒரு சுவிசேஷ பாடலை பாடச்செய்தார்.

ஒரு மதச்சார்பற்ற இசை நிகழ்ச்சியில் இந்த ஆவிக்குரிய பாடல் அர்த்தமற்றதாக தெரியலாம். ஆனால் அதில் அர்த்தம் இருக்கிறது என்று நான் எண்ணுகிறேன். ஒரு பிரிட்டிஷ் கருத்துக் கணிப்பு, இயேசுவை விசுவாசியாதவர்கள் கூட வாழ்க்கையின் இக்கட்டான தருணங்களில் பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டு, மக்களில் பெரும்பாலானவர்கள் மதவாதிகள் என்று பரிந்துரைக்கிறது. நாம் உடைக்கப்பட்டவர்கள் என்பதையும் நம்முடைய இருளை அகற்ற நம்மைக் காட்டிலும் பெரியவர் அவசியம் என்னும் நிலைக்கு வாழ்க்கையின் ஒருகட்டத்தில் நாம் வந்து நிற்கவேண்டியிருக்கும்.

முதல் கிறிஸ்மஸின் போது இந்த ஜெபங்களுக்கான பதில் கிடைத்துவிட்டது. இயேசுவின் சம்பவிக்கப்போகிற பிறப்பைக் குறித்து, மரியாள், உலகத்தின் பலவான்களான தலைவர்களை ஆசனங்களிலிருந்து தள்ளினார் என்னும் பாடலையும் (லூக்கா 1:52), சகரியா, “அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்” போகிறவர் (வச. 79) என்ற பாடலையும் பாடினர். இயேசு பிறந்தவுடன் தேவ தூதர்கள் “பூமிக்கு சமாதானம்” (2:13-14) என்று பாடினர். இயேசுவின் மூலமாய் தகுதியற்ற உலகம் தேவனுடைய கிருபைக்கு பாத்திரமாக்கப்பட்டது.

சகரியாவுடன் இணைந்து இந்த கிறிஸ்மஸ் நாளில் நாம் ஒளியை பெற்றிருக்கிறோம் என்று பாடலாம். இந்த ராப் இசைப்பாடகரோடு சேர்ந்து தேவனுடைய ஆச்சரியமான கிருபையை எண்ணி களிகூருவோம். ஒரு நாள், அனைத்து மேடைகளும் இயேசுவின் வருகையை அறிவிக்கட்டும், அனைத்து உள்ளங்களும் அவரை வரவேற்கட்டும் என்று நாம் ஜெபிப்போம். ஷெரிடன் வாய்ஸி

நம்முடைய இயலாமையையும் தகுதியற்ற நிலைமையையும் தேவனுக்கு முன்பாக புரிந்துகொள்வது ஏன் அவசியம்? உங்கள் வாழ்க்கையின் எந்த பகுதியில் இயேசுவின் ஒளி பிரகாசிக்கவேண்டிய தேவை உங்களுக்கு இருக்கிறது?

இயேசுவே, உலகத்தின் ஒளியே, நான் தகுதியற்றவனாயிருந்தும் நீர் என்னை தேடி வந்து இரட்சித்தீர். இன்று உம்முடைய கிருபையினால் நான் மீண்டும் ஆச்சரியப்படுகிறேன்.

லூக்கா 1:67-79

67. அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக: 68. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 69. அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்; 70. தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: 71. உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று, 72. அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்; 73. ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே, 74. தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும் படிக்கு, 75. தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார். 76. நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும், 77. நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய். 78. அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், 79. நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.