பரிசுத்தஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. ரோமர் 15:13
ஐந்து வயது நிரம்பிய என் மருமகள் அன்னிகா, ஆச்சரியப்பட்டாள். இன்னும் கிறிஸ்மஸ் பண்டிகையே வராதபோது, எதற்காக அலங்கார விளக்குகள்? தோரணங்கள்? என்று கேட்டாள். கிறிஸ்மஸ் என்பது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல, அது ஒரு பருவம் என்று அவளிடம் விளக்கினேன். ஆச்சரியத்தில் அவளுடைய கண்கள் விரிந்தது. “எல்லா நாளும் கிறிஸ்மஸா!” என்று அவள் துள்ளி குதித்து கைகளைத் தட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.
அந்தத் தருணம் எனக்கு கொண்டாடக்கூடிய சுத்தமான மகிழ்ச்சியின் விலைமதிப்பற்ற சித்திரமாகவே இருக்கிறது. அன்னிகா சொன்னது சரிதான். நமக்கு அனுதினமும் கிறிஸ்மஸ் கொண்டாட்டமே. பூமியில் வந்து நம்முடைய வேதனையைப் பகிர்ந்து கொண்டு, தீமையையும் மரணத்தையும் நித்தியமாய் ஜெயிப்பதற்கான வழியை நமக்குக் காண்பிக்க தீர்மானித்த தேவனின் கிரியைகளை நாம் ஒவ்வொரு நாளும் கொண்டாடவேண்டும் (ரோமர் 15:2).
நாம் காணாத வெற்றிகளின் எண்ணிக்கையை பொருட்படுத்தவேண்டாம் (8:24-25). தேவன் நமக்கு செய்த நன்மைகளை நினைக்கும்போது மெய்யான நம்பிக்கையில் (15:4) ஊன்றப்பட்ட மகிழ்ச்சியை நாம் அனுபவிக்கக்கூடும்.
பின்பு அனுதினமும் இயேசுவின் மீது விசுவாசம் வைக்கிற அனைவரும், ஆவியின் அளவில்லாத அன்பினால் நிரப்பப்பட்ட தேவனுடைய குடும்பத்திற்குள் பிரவேசிக்கும் விலையேறப்பெற்ற பரிசை பெறக்கூடும் (வச. 5-7). இயேசுவுடைய ஆவியின் வல்லமையினால் மகிழ்ச்சியும் விடுதலையுமுள்ள வாழ்க்கையை நாம் வாழமுடியும் (வச. 13). ஒவ்வொரு நாளும் அவர் செய்த நன்மைகளை நினைத்து அதை அவருக்கு நன்றி மற்றும் துதி செலுத்தும் வாய்ப்பாய் கருதுவோம் (வச. 5-6). மோனிகா ல ரோஸ்
இயேசு வெற்றிகொண்டதின் விளைவைப் பார்ப்பதற்கு நீங்கள் எங்கே ஏங்கி காத்திருக்கிறீர்கள்? உங்களுடைய ஊக்கத்திற்காய் தேவனுடைய அன்பு மற்றும் கிருபையின் எந்த அனுபவங்களை நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
அன்பான தேவனே, உம்மோடு நடக்கிற இந்த பயணத்தில் நான் எங்கிருந்தாலும், என்னுடைய ஜீவியத்தில் உம்முடைய அன்பு மற்றும் ஒளியின் கிரியையை புதிய மற்றும் ஆழமான வழிகளில் விசுவாசிப்பதற்கு எனக்கு உதவிசெய்யும்.
ரோமர் 15:5-13
5. நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு, 6. பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக. 7. ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். 8. மேலும், பிதாக்களுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்; 9. புறஜாதியாருக்கும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறோன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம்பாடுவேன் என்று எழுதியிருக்கிறது. 10. மேலும், புறஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார். 11. மேலும், புறஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார். 12. மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கைவைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான். 13. பரிசுத்தஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.