a long standing debt

a long standing debt

நீண்ட கால கடன்

இன்றைக்கான வேதாகமப்பகுதி:யோவான் 19:28–37
இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். —யோவான் 19:30

பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முந்திய காலத்திற்குரிய 2.6 பில்லியன் பவூண்டுகள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக பிரித்தானியா 2014-ம் ஆண்டில் அறிவித்தது. 1720-ம் ஆண்டில், ‘சவூத் சீ பபிள்’ (South Sea Bubble) எனப்படும் நிதி நெருக்கடிக்குப் பின்பதாக, அரசாங்கம் ஒரு பிணை எடுப்பை (bailout) மேற்கொண்டது; இதன் விளைவாக பல மில்லியன் பவூண்டுகள் கடன் ஏற்பட்டது. இப்போது, வட்டி விகிதங்கள் குறைவாக இருப்பதன் காரணமாக, அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தப்பட்டிருந்ததான பல ஆண்டுகளாகத் திரட்டப்பட்டிருந்த பல்வேறு கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் தயாராக இருந்தது.

இயேசு, “முடிந்தது!” (யோவான் 19:30) என்று கூக்குரலிட்டபோது, அவர் மனிதகுலத்தின் மிகப் பழமையான நீண்ட கால கடனாகிய பாவக்கடன் முழுமையாகச் செலுத்தப்பட்டுவிட்டது என்பதைப் பிரகடனம் செய்தார். சிலுவையில் இயேசு பேசிய ஏழு வார்த்தைகளில் இந்த ஆறாவது வார்த்தையானது, டெட்டெலெஸ்டாய் (tetelestai) என்கிற ஒரு தனி கிரேக்க வார்த்தையாகும். இந்த வார்த்தையானது, வரிகள் அல்லது கடன்கள் முழுமையாக செலுத்தப்படல், வேலையாட்கள் பணிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்தல் உள்ளிட்ட இன்னும் பலவற்றையும் விபரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. மேலும், மரிக்கும்போது, “எல்லாம் முடிந்தது என்று அறிந்திருந்த” (வசனம் 28) மாசற்ற ஆட்டுக்குட்டியான இயேசுவைக் குறித்துப் பேசுகிறது.

கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது, அவர் உலகத்தின் பாவங்கள் அனைத்தையும் தம்மேல் ஏற்றுக்கொண்டு (1பேதுரு 2:24), நியாயப்பிரமாணத்தின் நீதியான நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றினார். அவர் பாவத்தை மூடியது மட்டுமல்லாமல், “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்த்தார்” (யோவான் 1:29).

இயேசு நம்முடைய கடனைச் செலுத்தி முடித்ததால், அவருடைய தியாகபலியாகிய மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் நாம் விசுவாசிப்பதன்மூலம், நாம் நித்திய ஜீவனைப் பெறமுடியும், மற்றும் இன்றும் “நிறைவான வாழ்வினை” (யோவான் 10:10) அனுபவிக்க முடியும். அந்தக் கடன் செலுத்தப்பட்டுவிட்டது!

மார்வின் வில்லியம்ஸ

இயேசுவினால் உங்களுடைய பாவக்கடன் முழுமையாகச் செலுத்தப்பட்டுவிட்டது என்பதை அறிவதானது, உங்களுக்கு என்ன அர்த்தத்தினைத் தருகிறது?
உங்களுக்காக அவர் செய்த தியாகபலி மரணத்திற்காக இன்று நீங்கள் அவருக்கு எப்படி நன்றி செலுத்துவீர்கள்?

அன்புள்ள இயேசுவே, என்னுடைய கடனை முழுமையாக செலுத்தியமைக்காக உமக்கு நன்றி.