ஒரு மாதத்திற்கு முன்பு வாழ்க்கை முற்றிலும் இயல்பாக இருந்தது. சாலைகளில் எக்கச்சக்கமான போக்குவரத்து இருந்தாலும் வேலைக்கு விரையும் மக்கள், பள்ளிக்குச் செல்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டாவிட்டாலும் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் பிள்ளைகள், தங்கள் அன்றாடத் தேவைகளை சந்திக்க தினசரி கூலி வேலை செய்பவர்கள், நெரிசலான பேருந்துகள், ரயில்கள், மக்கள் நடமாட்டம் நிறைந்த சந்தைகள், சிரிப்பும், வேடிக்கையும் தெறிக்கும் உணவகங்கள்… இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இருப்பினும் கொரொனா வந்தபின் காரியங்கள் முற்றிலும் மாறிவிட்டன; அதற்கெதிரே உலகமே மண்டி இட்டது என்னலாம். முற்றிலும் இயல்பான நடைமுறைகள் எப்படி இவ்வாறு தலை கீழாக மாறிவிட்டன என்று நான் நினைத்தபோது வேதாகமத்தில் இருந்து யோபுவின் கதை ஞாபகம் வந்தது.

யோபு உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான் என்று வேதம் யோபு 1:1-ல் சான்றளிக்கிறது. ஆம், அவன் வாழ்க்கை முற்றிலும் இயல்பாக இருந்தது. அவன் சமுதாயத்தில் மதிப்பிற்குரிய நபராகவும்,, அதிக நண்பர்கள், திரளான கால்நடைகள், அநேக பிள்ளைகள், ஆதரவான மனைவி, ஆரோக்கியமான நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்… தன்னுடைய அன்றாட கடமைகளை ஒழுங்குற செய்து வந்தான்அவன்.

முதலாம் அடி # 1: நிதி இழப்பு

யோபு 1: 14-17-ல் நாம் பார்க்கும்போது, ஒரு ஆள் அவனிடத்தில் வந்து: அவனுக்கு சொந்தமான எருதுகளையும் கழுதைகளையும் சபேயர் சாய்த்துக்கொண்டு; வேலையாட்களை கொன்று போட்டார்கள் என்றான். வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது என்றான். பிறகு கல்தேயர் வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் வெட்டிப்போட்டார்கள்; என்று இன்னொருவன் சொல்லக்கேட்கிறான். மிகுந்த செல்வந்தனாயிருந்த யோபு சடுதியாய் யாவற்றையும் இழந்தான்.

இரண்டாம் அடி # 2: தனிப்பட்ட இழப்பு

யோபு 1:18-19-ல் நாம் பார்க்கிறதென்னவென்றால் வனாந்தர வழியாய்ப் பெருங்காற்று வந்து, வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க, அது யோபுவின் பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்துபோனார்கள். இது யோபூவிற்கு ஏற்கமுடியாத ஒரு கொடூரமான இழப்பு. நான் அவன் இடத்தில் இருந்திருந்தால் இவ்விதமான காரியத்தை மனதில் எண்ணுவது கூட என் இதயத்தை துவளச் செய்திருக்கும். மாறாக யோபுவோ எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து கொள்கிறான். இறைவனை குற்றம் கூறவில்லை.

மூன்றாம் அடி # 3: உடல்நலம் இழப்பு

யோபு 2:7-ல் சாத்தான் யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான் என்று பார்க்கிறோம். ஏற்கனவே நிதி இழப்பு, பிள்ளைகள் மரணம் என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்த யோபு இதற்குமேல் இனி மோசம் வராது என்று நினைத்திருக்கலாம்; ஆனால் மேலும் தீமை வந்தது. இப்பொழுது அவன் உணர்ச்சி ரீதியாக மட்டுமல்லாது, சரீர வேதனையையும் கூட அனுபவிக்க வேண்டியதாயிற்று.

நான்காம் அடி # 4: சமூக விலகல்

யோபு 2:9-ல் நாம் வாசிப்பது: “அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும்” என்றாள். யோபு அனுபவித்த எல்லாவற்றிலும், அவன் தேவனைகுறை கூறாமல் தனது விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் உறுதியாயிருந்தான் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். 10-ம் வசனத்தில் “இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை” என்று பார்க்கிறோம்”.

யோபுடைய மூன்று சிநேகிதராகிய எலிப்பாஸ், பில்தாத், சோப்பார் ஆகியவர்கள் யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது, அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல்சொல்லவும் வந்தனர். பின்னர் அவர்கள் தங்களை சமூக ரீதியாக விலக்கிக் கொண்டு அவனுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பேசினர். யோபு தவறு செய்துவிட்டான் என்று கருதி அவன் மனம் திரும்ப வேண்டும் என்று கோரினர். அவனோடு கூட அமர்ந்திருந்தாலும் அவனைப் புரிந்து கொள்ளவில்லை.

யோபுவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்வது என்னவென்றால் அவன் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்தாலும், தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பை அடைந்தாலும், கொடூரமான உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டாலும், தமக்கு அருமையானவர்களின் நிராகரிப்பை அனுபவித்தாலும் அவன் தேவனை விடவே இல்லை. தனக்கிருந்த மிகுந்த வருத்தத்தில் கூட அவன் தேவனைதொடர்ந்து பணிந்து கொண்டு அவரைத் துதித்தான். தன்னுடைய நேர்மையையும் தேவன் மேல் வைத்த பற்றையும் அவன் ஒருபோதும் இழக்கவில்லை. இதன் விளைவாக யோபு 42: 10-16 வரை காண்பதுபோல், யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார். யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை கர்த்தர் ஆசீர்வதித்தார்.

நம் வாழ்க்கையில் கூட திடீரென்று காரியங்கள் தலைகீழாக மாறினாலும் என்ன நடக்கிறது என்று இறைவனுக்குத் தெரியும். நமக்கு பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் இருக்கலாம்; “ஏன்” என்று புரியாமல் இருக்கலாம்; ஆனால் கர்த்தருக்குத் தெரியும். யோபுவின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை இறைவன் அறிந்திருந்தார்; நம்முடைய வாழ்க்கையையும் அவர் அறிவார்.

யோபுவை போலவே கர்த்தர் நல்லவர் என்று நாம் தொடர்ந்து நம்புவோம்; பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் குறிப்பிடுவதுபோல. தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். நம்முடைய நம்பிக்கையை இறைவன் நமக்கு காட்டும் அன்பிலும் வாக்குத்தத்தங்களிலும் வைப்போம். யோபுக்கு இரட்டிப்பான நன்மையை அளித்தது போல, நிச்சயமாகவே நாமும் இந்த நெருக்கடி காலங்களைவிட பிந்தைய நாட்களில் மிகவும் ஆசீர்வதிக்கப்படுவோம்.

-பென் விஜய்