நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். சங்கீதம் 34:4
அனுமதியின்றி எனது இதயத்தினுள் பயம் ஊடுருவுகிறது. உதவியற்ற மற்றும் நம்பிக்கையற்றதன்மையை அவை சித்தரிக்கிறது. என் மன அமைதியையும், எண்ண ஓட்டங்களையும் திருடுகிறது. என்னுடைய பயம் எதைப்பற்றியது? எனது குடும்பத்தின் பாதுகாப்பு அல்லது அன்புக்குரியவர்களின் ஆரோக்கியம் குறித்து நான் கவலைப்படுகிறேன். வேலை இழப்பு அல்லது முறிந்த உறவைக் கண்டு நான் பயப்படுகிறேன். பயம் என் கவனத்தை பின்நோக்கித் திருப்பி, நம்புவதற்கு கடினமாக இருப்பவற்றை சில நேரங்களில் வெளிப்படுத்துகிறது.
இத்தகைய பயங்களும் கவலைகளும் நம்மைத் தாக்கும் போது சங்கீதம் 34ல் தாவீதின் ஜெபத்தை வாசிப்பது சிறந்தது: “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப்பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்” (வச. 4). மேலும் தேவன் எவ்வாறு நம் அச்சத்திலிருந்து நம்மை விடுவிக்கிறார்? “அவரை நோக்கிப்பார்த்து” (வச. 5), நாம் அவர்மீது கவனம் செலுத்தும்போது நம் பயம் மங்கிவிடும்; அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்று நம்புகிறோம். மேலும், தாவீது ஓர் வித்தியாசமான பயத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறார்— நம்மை முடக்கிப் போடும் பயத்தைப்பற்றியல்ல; ஆனால் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப்பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறவரின் (வச. 7) மீதான ஆழ்ந்த மரியாதை மற்றும் பிரமிப்பு. கர்த்தர் நல்லவர் என்பதால் நாம் அவரிடம் அடைக்கலம் புகலாம் (வச. 8).
பிரமிப்பான அவருடைய இந்த நற்குணம் நமது பயங்களை புறம்பாக்கி வைக்க உதவுகிறது. கர்த்தர் யார் என்பதையும் அவர் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதையும் நாம் நினைவில் கொள்ளும்போது, அவருடைய சமூகத்தில் நாம் சமாதானத்தோடு இளைப்பாற முடியும். “அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை” (வச. 9) என்று தாவீது முடிக்கிறார். கர்த்தருக்குப் பயப்படுவதன் மூலம் நாம் பயத்திலிருந்து விடுபட முடியும் என்பது எவ்வளவு ஆச்சரியமானது.
– கெய்லா ஓச்சோவா
சிந்தனை
தேவனே, என் கவலைகள் மற்றும் பயங்களை நான் அறிந்திருக்கிறேன், அவற்றை உமது கரங்களில் ஒப்புவிக்கிறேன். சமாதானத்தோடு ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ள எனக்கு பெலன்தாரும்.
பயப்படும் காரியங்களிருந்து உங்களை விடுவிக்க தேவனிடம் கேளுங்கள்.
|
|
|