வாசிக்கவும்: பிலிப்பியர் 4:5-8

அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். (வச.7)

புதிய வீட்டிற்கு மாறலாமா அல்லது பழைய முகவரியில் தொடரலாமா? நானும் என் கணவரும் வீடு மாறும் சாத்தியக்கூறுகளைப் பற்றி விவாதித்தபோது, இந்த கேள்வி பல நாட்கள் என் மனதை நிரப்பியது. நாங்கள் புதிய வீட்டைக் கண்டுபிடிக்கும் எங்கள் பயணத்தின்போது ஒரு சில பிரச்சனைகள் தெளிவாகத் தெரிந்தன. உதாரணமாக, அடித்தளத்தின் நடு அறையில் ஒரு தண்ணீர் குழாய் தரையிலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தது, நிலவறையில் விசித்திரமான துர்நாற்றம் வீசியது. ஆனாலும், புதிய அலமாரிகளும், சூரிய ஒளி உள்ளே வர அழகான ஜன்னல்களும் இருந்தன.

இந்த புதிய வீட்டின் சம்பந்தமான ஒப்பந்தத்தில் மேலும் மேலும் வந்த சவால்கள் மீது அக்கறை காட்டினேன். ஒருவேளை நான் அந்த வீட்டை விற்க முடியாமல் போனால் என்ன செய்வது? புதிய இடத்தை தேர்வு செய்ய எவ்வளவு செலவாகும்? பிலிப்பியரிடம் பவுல் சொன்ன வார்த்தைகள் என் அச்சத்தைப் போக்கின. அதில், “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல். . . எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப் படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலிப்பியர் 4:6-7). என்னைப் பொறுத்தவரை, எங்கள் சூழ்நிலையில் தொடர்ச்சியான இந்த நெருக்கடியால் சமாதானம் இல்லாதிருந்தது. இதன் பொருள் என்னவெனில் நம்முடைய திட்டங்களின் விளைவை கர்த்தரே வாய்க்கச்செய்வார் என்று நம்புவதே ஆகும்.

பவுல் அப்போஸ்தலன், நாம் சிந்திக்க வேண்டிய ‘முதன்மையான எட்டு ‘ நல்ல ஆலோசனைகளின் பட்டியலைக் கொடுத்துள்ளார். அவற்றில் எதுவுமே ஒரு வீட்டை வாங்குவதையும் விற்பதையும் உள்ளடக்கியதாக இல்லை என்பதில் ஆச்சரியமில்லை. மாறாக, உண்மை, கனம், நேர்மை, தூய்மை, அழகு, போற்றத்தக்கது, மேன்மையானது, புகழத்தக்கது (வச.8) என வகைப்படுத்தியுள்ளார். நாம் அறிந்தே நம் இருதயத்தை நல்ல விஷயங்களால் நிரப்பி, அதையே சிந்தித்து ஏற்றுக்கொள்ளும்போது அது பயத்திற்கும் கவலைக்கும் இடமளிக்காது.

நம் வாழ்வில் முக்கியமான காரியங்களுக்கு நேரத்தைச் செலவிடுவது இயல்பு. நமது அடிப்படைத் தேவைகளான உறைவிடம், உணவு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை நன்கு சிந்தித்துச் செயல்படுத்துவது புத்திசாலித்தனமானது. ஆனால் இந்தத் தேவைகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்று வேதம் நமக்குக் கற்றுத் தருகிறது. தேவனாகிய கர்த்தரை நம்பி, ஜெபத்துடன் நல்ல விஷயங்களால் நம் உள்ளத்தை நிரப்பும்போது சரியான கண்ணோட்டத்தைப் பெற்று நாம் தீர்மானங்களை எடுக்க உதவுகிறது.

—ஜெனிபர் பென்சன் ஷுல்ட்

மேலும் அறிய

தேவனாகிய கர்த்தரின் வழிநடத்துதலையும், நம் தேவைகளை எவ்விதம் உண்மையுள்ளவராக சந்திக்கிறார் என்பதை விளக்கும் சில உற்சாகமூட்டும் உதாரணங்களுக்குப் பின்வரும் வசனங்களை வாசியுங்கள்: யாத்திராகமம் 14:29-30; 2 இராஜாக்கள் 20:5-6; லூக்கா 2:11-14; மற்றும் 2 கொரிந்தியர் 5:18-19.

அடுத்தது

ஒரு தீர்மானம் எடுக்க, கவலைப்படுவதற்கும் சிந்திப்பதற்கும் இடையிலான எல்லை எங்கே உள்ளது? வாழ்க்கையில் கவலை இல்லாமல் இருப்பது எவ்வாறு தேவனிடம் முற்றிலும் சரணடைந்தச் செயலாகக் கருதப்படும்?