பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம். லூக்கா 2:12

எங்கள் ஊரில் அலங்கரிக்கப்பட்டிருந்த இயேசு பிறப்பு காட்சி வடிவமைப்பில் இரண்டு கதாபாத்திரங்கள் காணாமல் போய்விட்டனர்: மரியாள் மற்றும் குழந்தை இயேசு. நான் அதிர்ச்சியடைந்தேன். காணாமல் போன அந்த நபர்களைக் குறித்து நான் புகார் பதிவுசெய்யலாம் என்று யோசித்தேன். ஆனால் அவர்களிடம் என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. இந்த இருவரைத் தவிர இயேசுவின் பிறப்பை சாட்சியிட்ட அனைவரும் அங்கிருந்தனர். அங்கு காற்று பலமாய் வீசியதினால், அந்த இரண்டு பொம்மைகளும் அதில் அடித்துசெல்லப்பட்டிருக்கலாம். அல்லது அங்கிருந்த யாரேனும் தவறான நோக்கத்தோடு அதை திருடியிருக்கலாம். எதுவாகிலும், அந்த இரண்டு கதாபாத்திரங்கள் இல்லாமல், இயேசு பிறப்பின் சம்பவத்தை சித்தரிப்பது சாத்தியமில்லாமல் தோன்றியது.

இயேசு பிறப்பின்போது, அங்கிருந்த அனைத்து கதாபாத்திரங்களின் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அச்சம்பவம் அறிவிக்கிறது: யோசேப்பு, “தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே” (லூக்கா 2:4); மரியாள், “மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான(வள்) (வச. 5); மேய்ப்பர்கள், “தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்” (வச. 8); பிரகாசத்துடன் தோன்றிய தேவதூதன் (வச. 9) என்று அனைவரின் பங்களிப்பும் இடம்பெற்றுள்ளதாக வேதம் அறிவிக்கிறது. ஆனால் அந்த முழு காட்சியின் கவனம், கிறிஸ்மஸ் தினத்தின் திறவுகோல், இன்றுவரை அனைவரும் சார்ந்திருக்கிற அடையாளமாகிய “கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்… பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்” (வச. 11-12) என்று கிறிஸ்துவின் மீதே இருக்கிறது.

தேவனுடைய மீட்பு திட்டத்தில் நம்முடைய ஜீவியமும் நம்முடைய பங்களிப்புகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அதில் நேற்றும் இன்றும் என்றும் முக்கிய பங்கு வகிக்கும் கதாபாத்திரம் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே. அவர் இன்னும் குழந்தை இல்லை; என்றென்றைக்கும் அரசாளும் நித்திய ராஜாவாய் வீற்றிருக்கிறார். ஜாண் பிளேஸ்

கிறிஸ்து பிறப்பு காட்சியில் இடம்பெற்றுள்ள எந்த கதாபாத்திரம் உங்களுடைய சுபாவங்களோடு அதிகம் ஒத்துப்போகிறது? கிறிஸ்து உங்களுடைய வாழ்க்கையின் மையம் என்பதை உறுதிபடுத்தும்பொருட்டு இந்த பண்டிகை நாட்களிலும் ஆண்டு முழுவதிலும் நீங்கள் என்ன செய்யலாம்?

இயேசுவே, உம்முடைய பிரம்மாண்டமான கதைக்குள் என்னை வரவேற்றதற்காய் உமக்கு நன்றி. ஜீவியத்தை தேடிக்கொண்டிருக்கும் எனக்கு உதவிசெய்யும். சகல துதி கன மகிமை யாவும் உமக்கே சொந்தம்.

லூக்கா 2:1-12

1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. 2. சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. 3. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். 4. அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, 5. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். 6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. 7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். 8. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். 9. அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். 10. தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். 11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். 12. பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.