ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். ~ சங்கீதம் 50:15
கடந்த ஆண்டில் தோராயமாக இதே நேரத்தில், இந்திய தேசத்தில் ஒரு தொற்று பரவலின் பாதிப்பு ஆங்காங்கே கண்டறியப்பட்டது. அதுவே தற்போது சர்வதேச பிரச்சனையாக மாறி, நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் தொகையில் உலகில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்த தேசம் இந்த பேரிடரை எவ்வாறு கையாளப்போகிறது என்று உலகமே எதிர்பார்த்தது. இதன் மூலம் மற்ற தேசங்கள் பொருளாதாரத்தை ஈட்டுவதற்கு நாம் உதவுவது போல் இருந்தது. வளர்ச்சியடைந்த நாடுகளில் தொற்று விகிதமும் இறப்பு விகிதங்களும் கணிசமாய் அதிகரித்துக்கொண்டிருக்க, இந்தியா எல்லாவற்றிலும் மிகச் சிறப்பாக செயல்படுவதாக தெரிந்தது. ஆனால் 2021இல் இவை அனைத்தும் தலைகீழாக மாறியது.
இரண்டாம் அலை வெகுவாகப் பரவத் துவங்கியபோது, இந்த தொற்றின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் இந்தியா வர நேரிட்டது. முதலாம் பொதுமுடக்கம் இந்த தொற்றை வெகுவாகக் கட்டுப்படுத்தியது. ஆனால் அதே நேரத்தில், தேசத்தின் பொருளாதார நிலை வெகுவாய் சரிவடைந்தது. மக்களின் தேவையை பொருட்டாய் எண்ணி, பொது முடக்கத்தை நீட்டிக்கமுடியாத நிலையில், இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆட, பிணங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. “தேவன் நம் ஜெபங்களை கேட்கிறாரா?” என்னும் கேள்வி நம் இருதயத்தில் பலமாய் ஒலிக்கத் துவங்கியது.
தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியான இஸ்ரவேலர்கள் தங்களுடைய வாழ்க்கை பாதையில் தேவையின்போது எண்ணற்ற ஜெபங்களை ஏறெடுத்துள்ளனர். அந்த ஜெபத்திற்கெல்லாம் தேவன் பதிலளித்திருக்கிறார். இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டு தேவனுடைய தெரிந்துகொள்ளுதலுக்கு பாத்திரமாக்கபட்ட நாமும் அதிலிருந்து உதாரணத்தைத் தத்தெடுத்துக்கொள்ள முடியும்.
விடுதலைக்கான ஜெபம்
400 ஆண்டுகளாக எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேலர்கள், தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணி கதறினார்கள். தேவன் அவர்களை விடுதலையாக்கினார். தேவன் மோசேக்கு கட்டளையிட்டு, “எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்” (யாத்திராகமம் 3:7) என்று அவர்களை விடுவிக்கும்படி கட்டளையிட்டார். “இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்னும் பெரிய தேவன் இந்த சிறிய அடிமைத்தன கூட்டத்தைக் கண்டு மனதுருகுவது ஆச்சரியமாயிருக்கிறதல்லவா? அவர் மோசேயை அவனுடைய பிறப்பிலிருந்தே பாதுகாத்து, அவனை உருவாக்கும் வாழ்க்கைப் பாதையில் நடத்தி, கடைசியாக தன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்காக வழக்காடி, அவர்களை மீட்டுக்கொள்ளும் பாதையில் தேவன் அவனை நடத்தி வந்தார். நாமும் அவரை நோக்கி வேண்டிக்கொள்ளும்போது, இன்று நம்மையும் மீட்பதற்கு அவர் போதுமானவராயிருக்கிறார்.
ஞானத்திற்கான ஜெபம்
சாலமோன் ராஜா வேதாகமத்தின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவர். அவருடைய புகழ்பெற்ற தந்தையின் பிள்ளை என்னும் செல்வாக்கோடு அவர் ஆட்சிக்கு வந்தாலும், அவர் நிரப்ப வேண்டிய பொறுப்பு மிகவும் பெரியதாயிருந்தது. அவருடைய இயலாமையினால் ஆட்சியை புதிய ராஜாவிடம் ஒப்படைக்கும்படிக்கு தேவன் கூறுகிறார். இங்கு சாலமோனின் விண்ணப்பம் வழக்கத்திற்கு மாறான ஒன்றாய் இருக்கிறது, “ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும், ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்” (1 இராஜாக்கள் 3:9). தேசத்திற்காக சாலமோன் ஏறெடுத்த இந்த சுயநலமில்லாத விண்ணப்பத்தை தேவன் கேட்டு அவனுடைய விண்ணப்பத்திற்கும் மேலாக தேவன் அவனுக்கு அருளினார். இதுபோன்ற இக்கட்டான தருணங்களில் நாமும் சுயநலமில்லாமல் தேவனிடத்தில் விண்ணப்பிக்கவேண்டும். நம்முடைய தேவைகளுக்காக நாம் அதிகம் ஜெபித்துவிட்டோம், தற்போது மற்றவர்களுக்காகவும், குறிப்பாய் தலைவர்களுக்காகவும் அதிகாரத்திலுள்ளவர்களுக்காகவும் ஜெபம் ஏறெடுக்கவேண்டும். இந்த கடினமான சூழ்நிலையில் தேவன் அவர்களுக்கு ஞானத்தையும் பகுத்தறிவையும் கொடுக்கும்படியாக ஜெபிக்கவும்.
சீரமைப்பிற்கான ஜெபம்
இஸ்ரவேலிலும் யூதேயாவிலும் ஆட்சி செய்த ராஜாக்களின் நிமித்தம் தேசம் தேவனை விட்டும் அவருடைய வழிகளை விட்டும் பின்வாங்க நேரிட்டது. மக்கள் தேவனை நேசிக்காமல், தங்களுடைய சுகத்திற்காக வாழ்ந்து தேவனுக்கு கீழ்ப்படிய மறுத்தனர். அந்த சூழ்நிலையில் தேவன் அவர்களை அறிவுறுத்தும் நோக்கத்துடன் பாபிலோனியர்களை கருவியாய் பயன்படுத்துகிறார். 70 அண்டுகள் சிறையிருப்பு முடிந்து ஒரு சிறிய கூட்ட இஸ்ரவேலர்கள் சுயதேசம் திரும்புகின்றனர். உடைந்த தங்களுடைய தேசத்தை அவர்கள் சீர்படுத்த துவங்கினர். அவர்களின் மனந்திரும்புதலையும் உபத்திரவத்தையும் பார்த்த வேதபாரகனாகிய எஸ்றா, தன்னுடைய தேசத்தின் சார்பில் தேவனிடத்தில் விண்ணப்பத்தை முன் வைக்கிறார். “என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்குமேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று” என்று முறையிடுகிறார். நாமும் எஸ்றாவைப் போல நம்முடைய தேசத்தின் மக்களுக்காக பரிந்துபேசி, அவர்களின் மன்னிப்பிற்காகவும் மறுசீரமைப்பிற்காகவும் விண்ணப்பிக்கலாம்.
சுகத்திற்கான ஜெபம்
பாபிலோனிய ஆதிக்கம் தங்களுடைய தேசத்தை பாழாக்கிய பின்பு, இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் தேசத்தை மறுசீரமைப்பதற்கு தங்களால் முடிந்தவரை போராடினர். அவர்கள் தங்கள் தேசத்தையும் ஜீவியத்தையும் திரும்பக் கட்டும் முயற்சியில் ஈடுபட்ட தருணத்தில், தேவன் தன்னுடைய ஜனங்களை அவர் குறித்த நேரத்தில் குணமாக்குவார் என்று மல்கியா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைக்கிறார். “என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்” (மல்கியா 4:2) என்று உரைக்கிறார். இங்ஙனம் நீதியின் சூரியன் என்பது மனிதனுக்காக இறங்கிவந்த தேவக் குமாரனையே குறிக்கிறது. அவர் நம் தேசத்தின் மீது அக்கறையுள்ளவராகவும், அவருடைய “செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்” என்றும் அறிவிக்கப்படுகிறது. அவரோடு சேர்ந்து நாமும், இந்த கொடிய தொற்று நோயுடன் போராடிக்கொண்டிருக்கிற நம்முடைய சகோதர சகோதரிகள் இயேசுவின் தழும்புகளால் குணமாக தேவனிடத்தில் மன்றாடுவோம்.
நாம் வேதத்தில் பார்க்கும்போது, தேவனுடைய சர்வ மகத்துவமுள்ள பெரிய திட்டங்களுக்கு ஜெபமே முக்கிய பங்கு வகிக்கிறது. நம்மீது அக்கறையில்லாமல் நம்மை விட்டு தூரம் இருக்கிற ஒரு தேவனை நாம் வழிபடவில்லை. அவர் நம்மை பராமரிக்கிறவர். ஆகையால் நம்முடைய தேசத்திற்காக நாம் ஒருமனப்பட்டு ஜெபிக்கும் வேளையில், ஆபத்து நாட்களில் அவரை நோக்கிக் கூப்பிடும்படிக்கு நம்மை ஊக்கப்படுத்தும் தேவன் நம்முடைய கண்ணீரைக் காண்கிறவர் என்னும் உறுதியான நம்பிக்கையுடன் நாம் ஒன்று திரள்வோம்.
ரெபேக்கா விஜயன்