(அன்னாள்) தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள். லூக்கா 2:37
அலிங் மைதாவின் சுருக்கம் நிறைந்த முகமானது, தெருமுனையில் அமர்ந்துகொண்டு அவள் வறுத்த வாழைப்பழங்களை விற்கும் போதெல்லாம் மின்னும் ஒளியுடன் மிளிர்கிறது (அலிங் என்பது பிலிப்பைன்ஸில் வயதான பெண்களுக்கான மரியாதைக்குரிய தலைப்பு). அவர் எப்போதும் என்னைப் பார்த்து எப்படியிருக்கிறாய் என்று விசாரிப்பதுடன், “எப்போதும் ஜெபம்பண்ணு! எப்போதும் தேவனையே நம்பு!” என்று வழக்கமாய் ஆலோசனை சொல்லுவதுண்டு. அவருக்கு இப்போது எண்பது வயதாகிறது. மனீலா நகரத்தின் கோடை வெயிலில் வீதியில் அமர்ந்துகொண்டு விற்பனை செய்யும் போதெல்லாம் தன்னுடைய பாக்கெட் வேதாகமத்தை அவர் படித்துக்கொண்டேயிருப்பார். அவளுடைய குனிந்த உருவம், நரை முடி மற்றும் அவளது கரடுமுரடான கைகளில் வேதாகமத்தின் கிழிந்த பக்கங்களை மென்மையாக கையாளும் முறை, இயேசுவை தியானித்தல் என்றால் என்ன என்பதை விளங்கச்செய்தது.
இந்த அலிங் மைதா, இயேசுவை தேவாலயத்திற்குள் கொண்டுவரும்போது அவரை மேசியா என்று அங்கீகரித்துக்கொண்ட அன்னாள் தீர்க்கதரிசியை எனக்கு நினைவுபடுத்துகிறார். அன்னாளுடைய அர்ப்பணிப்பு அவளுடைய வாழ்க்கையை தீர்மானித்தது. அன்னாள் “தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள்” (லூக்கா 2:37). பண்டைய யூத பாரம்பரியம் விதவைகளின் சலுகைகளை மறுத்து அவர்களை ஒதுக்கி வைத்திருந்தது. ஆனால் அன்னாள் இந்த ஒதுக்கப்படுதலை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, அவள் தன்னுடைய வாழ்க்கையை தேவனைக் குறித்து தியானிப்பதில் செலவழித்தாள். அவளுக்கு எண்பத்தி நாலு வயதானபோது, தேவன் மேசியாவை அவளுக்கு காண்பித்து அவளுடைய விசுவாசத்திற்கு பலனளித்தார்.
அன்னாளைப் போலல்லாமல், நாம் இயேசுவைப் பார்ப்பதற்கு காத்திருந்து அவருடைய பிரசன்னத்தை அனுபவிக்கலாம். அலிங் மைதாவைப் போல, நம்முடைய இருதயங்களை தாழ்த்தி, நம் ஆராதனைக்கு பாத்திரரான இயேசுவுக்கு நேராய் நம் கைகளை உயர்த்துவோம். கேரன் ஹ_வாங்
தியானம் என்ற வார்த்தையானது உங்களுக்கு என்ன அர்த்தம் கொடுக்கிறது? உங்களுடைய தியானத்தின் மையப்பொருள் அல்லது ஆதாரம் யார்?
அன்பான தேவனே, என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும், நான் செய்கிற அனைத்தும் உம்முடைய தியானமாய் மாறட்டும்.
லூக்கா 2:36-38
36. ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானது முதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள். 37. ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள். 38. அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கம் அவரைக்குறித்துப் பேசினாள்.