எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. ஏசாயா 60:1
ஒரு தேனீர் விருந்தைத் தொடர்ந்து முதல் வார ஞாயிற்றுக்கிழமையின் போது, கிறிஸ்துவை ஒளியாய் கொண்டாடும் கிறிஸ்டிங்கிள் ஆராதனை நடைபெற்றது. அந்த தருணத்தில் இங்கிலாந்து தேசத்தின் தட்பவெப்பநிலை ஈரமாகவும் மந்தமாகவும் இருக்கும். எனவே கிறிஸ்டிங்கிள் சின்னத்தின் மூலம் கிறிஸ்துவின் ஒளியைத் தழுவுவது மகிழ்ச்சியை மட்டுமல்ல, நம்பிக்கையையும் தருகிறது.
திருச்சபை முழுதும் இருளில் இருக்க, நாங்கள் மௌனமாய் அமர்ந்திருக்க, ஒவ்வொரு குழந்தைகளும் தங்கள் கரங்களில் சிவப்பு ரிப்பனால் சுற்றப்பட்டிருக்கும் ஆரஞ்சு பழத்தை கிறிஸ்டிங்கிள் சின்னமாய் வைத்திருந்தனர். அதன் மீது மெழுவர்த்தியும், அந்த ஆரஞ்சு பழத்தின் நான்கு திசைகளிலும் பல்குத்தும் குச்சியில் திராட்சைப்பழமும் குத்தப்பட்டிருக்கும். ஆரஞ்சு பழம் உலகத்தையும், மெழுகுவர்த்தி கிறிஸ்துவின் ஒளியையும், சிவப்பு ரிப்பன் அவருடைய இரத்தத்தையும், திராட்டைப் பழம் பூமியின் கனிகளையும் குறிக்கிறது. அந்த திருச்சபை அறையில் ஒளிரும் வெளிச்சத்தின் புள்ளிகள், இருளில் பிரகாசிக்கும் ஒளியான இயேசுவை எனக்கு நினைவுபடுத்தியது.
தேவன் தன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு தான் வெளிச்சமாய் இருப்பதாக அறிவிக்கிறார்: “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது” (ஏசாயா 60:1). உலகம் இருளால் சூழப்பட்டிருந்தாலும், அதின் மத்தியில் தன்னுடைய வெளிச்சத்தை பிரகாசிக்கச்செய்து, அதை தேவன் தன்னுடையதாக மாற்றிக்கொள்ளுகிறார் (வச. 2-3). புதிய ஏற்பாட்டில், தேவ குமாரனாகிய இயேசுகிறிஸ்து தன்னை உலகத்தின் ஒளியாய் அடையாளப்படுத்தி, அவரைப் பின்பற்றுகிறவர்கள் இருளில் நடப்பதில்லை என்றும் வாக்களிக்கிறார் (யோவான் 8:12).
நாம் இருளால் சூழப்பட்டிருக்கிறோம் என்று உணரும்போது, தேவன் இயேசுவின் மூலம் அவருடைய ஒளியை நம் மீது பிரகாசிக்கச்செய்கிறார். அவரோடு அந்த ஜீவ ஒளியை நாம் பெற்றுக்கொள்ள முடியும் என்னும் சத்தியத்தை நாம் உறுதியாய் பற்றிக்கொள்ளுவோம். எமி பவுச்சர் பை
இயேசு உன்னுடைய வாழ்க்கைக்கு எப்படி வெளிச்சத்தைக் கொண்டுவந்தார்? அவருடைய ஒளியை இன்று மற்றவர்களுக்கு எப்படி பகிர்ந்துகொடுப்பீர்கள்?
இயேசுவே, உலகத்தின் ஒளியே, என் சமுதாயத்திற்கு உம்முடைய வெளிச்சத்தை காண்பிக்கும்பொருட்டு என்னில் பிராகாசியும்.
உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். லூக்கா 2:14
இயேசு இல்லாமல் உலகத்தில் கிறிஸ்மஸ் அன்று கொடுக்கப்படுகிற அனைத்து பரிசுகளும் வீண் —டேவிட் ஜெரேமியா
அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை. யோவான் 1:4-5
இயேசு என்னும் விளக்கை ஏற்றாதவர்கள் இருளிலே நடந்து, அவர்கள் ஆவியில் மரித்தவர்கள் என்னும் உண்மையை அறிவதில்லை. ஆனால் அவர்கள் அப்படியிருக்கவேண்டிய அவசியமில்லை. அவர்கள் செய்யவேண்டியதெல்லாம், இயேசு என்னும் விளக்கை ஏற்றவேண்டும். அவருடைய சத்தத்திற்கு செவிகொடுத்து அவரை பின்பற்றவேண்டும். அவர்களுடைய பாதையில் தடுமாற்றம் இருக்காது, அவர்களால் தெளிவாய் பார்க்கமுடியும் —டோனி இவான்ஸ்
புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான். லூக்கா 2:30-32
தேவனுடைய அன்பு தேவைப்படுபவர்களுக்கு அன்பின் ஒளியை கொடுத்து கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் பண்டிகையே மெய்யான கிறிஸ்மஸ் —ரூத் கார்டர் ஸ்டாபில்டன்
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன். யோவான் 12:46
நம்முடைய தேவையில் நமக்கு உதவிசெய்து நித்திய நம்பிக்கையாய் நிலைத்து, இருளிலே நமக்கு ஒளியாய் இருப்பதாக தேவன் நமக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார் —சோச்சில் டிக்ஸன்
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. யோவான் 1:14
ஒரு நாள் இந்த உலகத்தில் தொழுவத்தில் இருந்த ஒன்று நம் முழு உலகத்தை காட்டிலும் பெரியது —சி. எஸ். லூவிஸ்
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும். ஏசாயா 9:6-7
ஏசாயா 60:1-3
1. எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. 2. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். 3. உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.