நாம் முன்நிகழ்ந்திராத  தருணத்தில் சுவாசித்துக்கொண்டிருக்கிறோம். இன்றைய புள்ளி விபரங்களை வாசிக்கும்போது நாளை எப்படியிருக்குமோ என்ற பயம் என்னைத் தொற்றிக்கொள்கிறது. தேவன் என் பெயரை அறிந்திருக்க, தூசுபடிந்த அரசாங்க பதிவேடுகளில் அடையாளம் தெரியாத நபராய் நான் தொகையிடப்படலாம். ஆம், நாம் வீழ்ச்சியடைந்திருக்கிறோம் என்பது நிஜமே. ஆனால் எங்கே? எப்படி? இந்த பெரிய இழப்பை ஈடுசெய்ய முடியுமா? இந்த கேள்விக்கு பதிலளிக்கும் முயற்சியில் மேலும் பல கேள்விகளை நாம் சந்திக்க நேரிடுகிறது.

1990இல் மறைந்த பாப் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் எழுதிய, இன்றளவும் நினைவில் நிற்கும் பாடல் ஒன்று இருக்கிறது. அதில் அவர் எழுதுகிறார்,

 

தேவன் மதிப்பெண் போடுவதை நிறுத்தினார்.

போகிற பாதையில் எங்கோ

அவர் நம்மை சுதந்திரமாய் விளையாட அனுமதித்திருக்கவேண்டும்.

நம்மைவிட்டு அவர் முகத்தைத் திருப்பினார்

அவருடைய பிள்ளைகள் பின் வாசல் கதவிற்கு ஊர்ந்து சென்றனர்…

 

உறுதியான நிலையில் நம்மையே கணக்கிட மறக்கிறோம். தற்போது இருக்கிற இந்த பெருந்துயர் இன்று முடியப்போவதில்லை. நாளையும் முடியப்போவதில்லை. அது நம்மோடே இருக்கப் போகிறது. இந்த பாதையில் நாம் நடக்கும்போது புதிய எருசலேமின் நம்பிக்கையோடே நாம் வாழப் பழகுவோம்.

கடந்த ஆண்டில் நடந்த ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம், கர்த்தருடைய பந்தி. பலர் கர்த்தருடைய பந்தியை இன்று இணையத்தளத்தில் ஆசரிக்கும் அளவிற்கு தேறிவிட்டோம் (ஒருவரையொருவர் நேரில் சந்தித்து ஐக்கியம் கொள்ளாதிருப்பது மெய்யான பந்தியில்லை). திருச்சபை மக்கள் ஒன்றுகூடி கர்த்தருடைய பந்தியை ஆசரிக்க தவறும்போது திருச்சபை அவசியமற்றதாய் மாறுகிறது. மேலும் திருச்சபையின் பலிபீடம் நம்முடைய சொந்த வீடுகளுக்கு இடம்பெயர்ந்துவிட்டது. கர்த்தருடைய பந்திக்கு புது அர்த்தம் கொடுக்கப்பட்டாயிற்று. ஆம் குறிப்பாய், நம்முடைய ஐந்து அப்பத்தையும் இரண்டு மீன்களையும் இல்லாதவர்களுக்குப் பகிர்ந்துகொடுக்க முடியாதபோது பந்தியின் அர்த்தம் மாற்றப்பட்டுள்ளதை அறிகிறோம். என்னைப் பொருத்தவரையில், அது “வார்த்தை மாம்சமானது” என்பதற்கான சிறந்த நிரூபனமாயிருக்கிறது. திருச்சபை சுவர்களுக்கு மத்தியில் நின்றுகொண்டு அப்பம் பிட்குதலிலும் திராட்சைரசம் பருகுதலிலும் நாம் ஐக்கியப்பட்டிருந்தபோது, நம்முடைய ஆவிக்குரிய நிறைவையும் கிறிஸ்துவின் பிரசன்னத்தையும் நாம் முழுமையாய் அனுபவிக்க நேர்ந்தது. இந்த பேரிடர் காலத்தில் பந்தியில் பங்குபெறாதவர்களை கர்த்தருடைய பந்தியுடன் அணுகுவது இதில் உள்ளடங்குகிறது. இது கண்ணிற்கு புலப்படாத ஒரு சக்தியினால் அனுமதிக்கப்பட்ட தெய்வீக அன்பின் நிரூபனமாய் உள்ளது. இதுபோன்ற சாதகமற்ற சூழ்நிலைகள் மட்டுமே நம்மை இவ்வாறு செயல்படத் தூண்டுகிறது. இயேசு, தவிர்க்கமுடியாத தன்னுடைய மரணம் என்னும் சிலுவையின் பாதையில் நின்று அப்பத்தைப் பிட்கிறார். நாமும் அதை பின்பற்ற வேண்டும். இந்த கணக்கிலடங்கா இழப்புகளின் மத்தியில், பசியுள்ளவர்களுக்கு நாம் நம்மை பிட்கப்படுகிற அப்பமாய் அர்ப்பணிக்கவேண்டும். இதுவே என்னைப் பொருத்தவரையில் திருச்சபையின் மறுரூபமாக்கும் பணி. எந்தவொரு மாம்ச சக்தியோ, வாரியமோ, குழுவோ, போதகரோ அல்லது பி~ப்போ திருச்சபையை தங்களை சுற்றியுள்ள சமுதாயத்திற்கு பிட்கப்படுகிற அப்பமாய் மாற்றுவதே குறிக்கோளாய் வைத்து செயல்படவேண்டும். நாம் திருச்சபையின் ஆராதனைகளை முடக்கலாம், ஆனால் திருச்சபையின் சேவை ஊழியத்தை ஒருபோதும் முடக்கக் கூடாது.

இடையில் சில மாதங்களாய் திருச்சபைகள் மீண்டும் திறக்கப்பட்டது. திருச்சபைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாய் அதிகரித்திருந்தது. மக்களுக்கு ஓர் நம்பிக்கை அத்தியாவசியமாய் தேவைப்படுகிறது. நாம் நம்முடைய வேலையில் நம்பிக்கை வைக்கவில்லை, நம்முடைய வேலை அந்த நம்பிக்கையை நமக்குக் கொடுக்காது. அலுவலகங்கள் முழுவதுமாய் மூடப்பட்டது. கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு ஒரு ஆண்டு காலமாகிறது. தெருவில் இறங்கி நடப்பதற்கு தயக்கமாக இருக்கிறது. “என்னால் சுவாசிக்கமுடியவில்லை” என்ற ஜார்ஜ் ப்ஃளாய்டின் மரண வரிகள் நமக்கும் பொருந்துகிறது. ஏனென்றால் மனிதத்தன்மையோடு இருப்பதற்கான சுதந்திரம் பறிக்கப்பட்டு, மூச்சு திணறி, சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாமல் தவிக்கிறோம். இந்த அவல நிலையே நம்முடைய யுகத்தின் இன்றைய சூழ்நிலை. “என்னால் சுவாசிக்கமுடியவில்லை” என்பதே உலகத்தின் மந்திரச் சொல்லாய் மாறிவிட்டது. மனிதாபிமானம் என்றால் என்ன என்பதை அறியமுடியாமல் தடுமாறுகிறோம்.

தேவன் நம்மை எழுப்புவதற்கு இந்த வைரஸை அனுப்பி வைத்தாரா? வாழ்க்கையின் இதுபோன்ற பெரிய கேள்விகளுக்கு உடனே பதில் சொல்ல முயற்சிக்காதீர்கள் என்று நான் உங்களை எச்சரிக்கிறேன். பிசாசை தேவனாக சித்தரிப்பது அபாயகரமானது. தேவனே தேவனாக இருக்கட்டும். ஆயினும் இந்த வைரஸ் நம்மை விழித்தெழச் செய்திருக்கிறது என்பது உண்மையே. நாம் திருச்சபையின் வெளியே உள்ளவர்களுக்கு, குறிப்பாக மற்ற மத நம்பிக்கைகளைச் சேர்ந்த நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு, அவர்களுக்கு புரிகின்ற விதத்தில் அன்பை பிரதிபலிப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டோம்.

சங்கீதம் 126:1, “சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்” என்று சொல்லுகிறது. அப்படியென்றால் நம்முடைய வலிகளுக்கு முடிவு உண்டு. அது எப்போது என்று அதின் அமைப்பை தேவன் அறிந்திருக்கிறார். அவருடைய கண்கள் கடிகாரத்தை நோக்கிக்கொண்டிருக்கிறது. நம்முடைய கதை எப்படி முடியும் என்பது அவருக்குத் தெரியும். ஆகாயத்து பறவையை அவர் கவனிக்கிறார் என்பது உண்மையென்றால், நிச்சயமாய் அவருடைய கண்கள் நம் மீதும் நோக்கமாகவே இருக்கவேண்டும். அறிமுகமில்லாத பிரதேசத்தில் நாம் நடந்து இருளில் நம்முடைய வழியை தேடும்போது, நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் என்ற வார்த்தையில், நாம் தான் பள்ளத்தாக்கில் நடக்கிறோமே தவிர, அது நம்மீது நடப்பதில்லை என்னும் ஆறுதலான வார்த்தையை உங்களுக்கு கூறுகிறேன்.

பாஸ்டர். ஆனந்த் பீகா