புதிதாய் பிறந்த குழந்தையின் அழுகை மௌனத்தைக் கலைத்தது. அக்குழந்தையின் பிறப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து சரித்திரம் மாறியது. அந்த குழந்தையின் முகத்தைப் பார்த்த ஒரு வயோதிகன், “நான் இவ்வளவு காலம் காத்திருந்த நன்மையை என் கண்கள் கண்டது. இனி நான் சமாதானத்தோடு மரிக்கலாம்” என்று சொன்னார். அருகாமையில் தங்கி, நீண்ட நாட்களாய் ராஜாவின் சேவையில் இருந்த வயதான பெண்மனியும், எதிர்காலத்தைப் பார்ப்பதற்காகவே தான் இவ்வளவு காலங்கள் உயிரோடிருந்ததாக அறிவித்தார்.
தெரிந்துகொள்ளப்பட்ட குடும்பத்தினர் மீண்டும் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ள நேர்ந்தது. ஆனாலும் ஒன்றும் நேரிடவில்லை. அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு மாற்றம் எதுவும் நிகழவில்லை. தன்னுடைய பிறப்பின் மூலம் அதிர்வை ஏற்படுத்திய குழந்தை, சத்தமில்லாமல் வளர்ந்தது. வளர்ந்த மற்ற பிள்ளைகள் திருமணம் செய்து, பிள்ளை பெற்று, சமுதாயத்தில் தங்கள் பெயரை நிலைநாட்ட முயற்சித்தபோது, இந்த பிள்ளை மாத்திரம் தன்னுடைய தகப்பனுடைய தொழிலை ஓர் சிறிய ஊரில், சாதாரணமாய் கற்றுக்கொண்டிருந்தது. ஆனால் யாரும் சற்றும் எதிர்பாராத தருணத்தில் அடையாளமின்றி இருந்த இந்த இளைஞன், அனைவருடைய பேச்சுப்பொருளாய் மாறினார்.
முறையான எந்த பயிற்சியும் இல்லாதபோதிலும், வளர்ந்த இந்த போதகர், குடும்பத்தில் கற்றுத் தேர்ந்திருந்தவர்களை எதிர்கொள்ளும் வகையில் ஞானத்தில் தேறினவனாயிருந்தார். யாரும் இதுவரையிலும் சொல்லாத மற்றும் செய்யாதவைகளை இவர் செய்தார். சிறந்த ராஜாவைக் குறித்து அனைத்தும் தெரிந்தவன் போல் இவர் பேச, திரள் கூட்டம் இவரை பின்தொடர ஆரம்பித்தது. குருடரின் கண்களை பார்வையடையச் செய்தார், செவிடர்களை கேட்கச் செய்தார். தண்ணீரில் நடந்து, பிசாசுகள் துரத்தி, பெருங்காற்றை அமர்த்தி, மரித்தோரை அவர்களின் கல்லறைகளிலிருந்து எழும்பி வரச் செய்தார். அவருடைய தோற்றத்தில் மற்றவர்களைக் காட்டிலும் அவர் எந்த விதத்திலும் வித்தியாசப்படவில்லையெனினும், குடும்பத்தில் இருந்த மற்ற போதகர்களைக் காட்டிலும் அவர் வித்தியாசப்பட்டிருந்தார். சமுதாயம் எதிரியாய் கருதியவர்களை அவர் நண்பர்களாக்கினார். தேசத்தில் கனவீனமாய் கருதப்பட்ட பாவிகளோடு அமர்ந்து உணவருந்தினார். சமுதாயத்தினால் ஒதுக்கப்பட்டவர்களையும், குஷ்டரோகிகளையும், நெருக்கப்பட்டவர்களின் சிந்தையையும் அவர் குணமாக்கினார்.
அவர் சத்தமில்லாமல் வளர்ந்தாலும், அவர் சாதிக்கப் பிறந்தவர்.
அவர் சகல அதிகாரமும் வல்லமையும் படைத்த மனிதனாயிருந்தார். ஆனாலும் அவர் தன்னுடைய வல்லமையை மென்மையாய் கையாண்டார். குடும்பத்திலிருந்த ஆவிக்குரிய தலைவர்களும் அவரை பொறாமையோடும் அவநம்பிக்கையோடும் நோக்க, அவர் அதை சற்றும் பொருட்படுத்தாதவராய் சாதாரண மக்களையும் பெண்களையும் பிள்ளைகளையும் தன்னிடமாய் சேர்த்துக்கொண்டார். ஜனங்களின் கண்களுக்கு முன்பாக ஒரு பெரிய விருந்தை ஆயத்தப்படுத்தி, கனம் மிக்க அனைவருக்கும் அழைப்புகொடுத்து, அத்துடன் அதில் பங்கேற்க விரும்பமாயுள்ளவர்கள் யாவருக்கும் அழைப்பு விடுத்தார்.
குடும்பத்தின் மற்ற தலைவர்கள் ஆச்சரியப்படும்வகையில் அவருடைய கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனது. தங்களுடைய விருப்பப்படி வாழுகிறவர்களாய் இல்லாமல், அவரை நம்பும்படிக்கு அவர் அவர்களிடம் கேட்டுக்கொண்டார். அவர்களுடைய இருதயத்திற்கும் மனதிற்கும் இளைப்பாறுதலை அவர் வாக்குப்பண்ணியிருந்தார். மேலும் அவர் தன்னை வாசல், தண்ணீர், அப்பம் என்று அவர்களின் அறிவிற்குட்பட்ட உதாரணங்கள் மூலமாய் அவர்களுக்கு வெளிப்படுத்திக் காண்பித்தார். அவர்கள் அவரை நம்பினால், ஜீவ விருட்சத்தின் கனியையும் தொலைந்த பரதீசையும் அவர்களுக்கு திரும்பக் கொடுப்பதாக வாக்குப்பண்ணியிருந்தார்.
முக்கியமான பண்டிகை நாள் சமீபித்திருக்கும்போது, குடும்பத்தின் தலைவர்கள் எதிராக எழும்பினர். தங்கள் சொந்த செல்வாக்கு குறைவதைக் கண்டும், ஒவ்வொரு ஆண்டும் ஆட்டை பலியிடும் பண்டிகையின்போது, மக்களை தன் பக்கம் இழுத்து, குடும்பத்தின் தலைவனாய் மாறிவிடுவாரோ என்றும் அஞ்சினர். அவர் விரைந்து செயல்பட்டாக வேண்டும் என்று தீர்மானித்த போதகரின் எதிரிகள் துணிகரமான முடிவை செயல்படுத்த முனைந்தனர். குடும்பத்தின் தலைவர்கள் தங்களின் சிநேகிதர்களை ஒன்று திரட்டி, போதகருக்கு விரோதமாய் குற்றஞ்சுமத்தினர். போதகரை பின்பற்றுகிற மக்களின் கோபத்திற்கு காரணமானாலும், பெரிய ராஜாவின் பேரைக் கெடுப்பதாகவும் சமுதாயத்தின் சமாதானத்தைக் குலைப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். அவர்களின் ஊரில் இருக்கும் ஆட்சியர்களிடம் தங்களின் வேண்டுகோளை நிறைவேற்றும்பொருட்டு வற்புறுத்தினர்.
குடும்பத்தினர் இதுவரை பார்த்திராத மிகவும் அன்பான போதகர், வேலியில் தொங்கியிருக்கும் வேட்டையாடப்பட்ட உயிரைப் போல மரத்தில் ஆணி கடாவப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தார்.
சுயபுத்தியில்லாத, ஆனால் அதிகாரமிக்க ஒரு நீதிபதி, போதகரை அடித்து கொலை செய்யும்பொருட்டு கொலைப்பாதகரிடம் அவரை ஒப்புக்கொடுத்தார். இரண்டு கள்ளர்களுடன், குடும்பத்தினர் இதுவரை பார்த்திராத மிகவும் அன்பான போதகர், வேலியில் தொங்கியிருக்கும் வேட்டையாடப்பட்ட உயிரைப் போல மரத்தில் ஆணி கடாவப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தார். அவருடைய தாயும் சிநேகிதர்களும் கதறி அழுதபோது, இராணுவ வீரர்களின் மனம் பதைபதைத்தது. குடும்பத்தின் தலைவர்கள் ஆனந்த பெருமூச்சி விட்டனர். சாலையில் நடக்கும் வழிப்போக்கர்கள், ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். ஒரு சில மணி நேரங்களுக்கு பிறகு, ஆட்டுக்குட்டியை பலியிடும் அந்த பண்டிகை நாளின் சாயங்கால நேரத்தில், அவருடைய உடல் கடன் வாங்கப்பட்ட கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டது.