வாசிக்க: எபேசியர் 4:17-31

பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள். (வ. 27)

சிறுவர்களுக்கான ஒரு பாடல் இவ்வாறு கூறுகிறது “நீ கவலைப்படாதே, நீ சோா்வடையாதே, கடவுள் உன்னை இதுவரை ஏமாற்றியதில்லை என்பது உனக்குத் தெரியும்” . இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த அதே தேவன் நமக்கு முன்செல்கிறார் என்று நம்பலாம். தம் பிள்ளைகளை விட்டு விலகுவதும் இல்லை; ஒருபோதும் கைவிடுவதும் இல்லை (உபாகமம் 31:6).

ஆனால் வாழ்க்கையின் காரியங்கள் நம் மகிழ்ச்சியை அழித்து, பயம் நம்மைத் தேடி வருகையில் என்ன நடக்கும்? நாம் கலங்கி வருந்த ஆரம்பிக்கக்கூடும்; மேலும் சில சமயங்களில் சோதனைகள் அல்லது துன்பங்களால் சோர்வடையும் போது, ​​நாம் கோபமடையக்கூடும். துக்கத்தை தரும் முறையில், கோபம் மேலும் வலியையும் கொந்தளிப்பையும் மட்டுமே அதிகரிக்கச் செய்கிறது. தனிப்பட்ட அனுபவத்திலிருந்து சொன்னால், அது ஒருபோதும் விடுதலைக்கோ, குணமாகுதலுக்கோ அல்லது அமைதிக்கோ வழிவகுக்கவில்லை. உண்மையில், கவலை கோபத்தைத் தூண்டிவிட்டு நம் கட்டுப்பாட்டை இழக்கச்செய்கிறது அதுவோ,”பொல்லாப்புச்செய்ய வழிநடத்துகிறது” (சங்கீதம் 37:8).

போதகர் அட்ரியன் ரோஜர்ஸ் ஒருமுறை, “நீங்கள் துரிதமாகக் கோபமடைகையில்; ​உங்கள் வேலை, நண்பர்கள், குழந்தைகள், மனைவி, உடல்நலம், சாட்சியம் போன்றவற்றோடுள்ள உறவை இழக்க நேரிடும். நீங்கள் கட்டுப்பாடின்றி செயலாற்றுவது உங்கள் கிறிஸ்தவ சாட்சியத்தைப் பலவீனப்படுத்தும் ” என்றார்.

கோபம் உங்களுக்குள் உருவாகத் தொடங்கும் போது அதற்கு எதிர்வினையாற்ற, ரோஜர்ஸ் பின்வரும் ஆலோசனைகளை வழங்கினார்:

அறிக்கையிடுங்கள்: உங்கள் கோபத்தையும் அதன் மூல காரணத்தையும் (கவலை மற்றும் நம்பிக்கையின்மை உட்பட) தேவனிடம் கொண்டு வாருங்கள் மற்றும் அவருடைய மன்னிப்பையும் குணமாக்குதலையும் அனுபவியுங்கள்.

சிந்தியுங்கள்: நீங்கள் ஏன் கோபத்தால் நிறைந்திருக்கிறீர்கள் என்பதை நிதானித்து, அதிலிருந்து விடுபடத் தேவனின் உதவியை நாடுங்கள் (எபேசியர் 4:31).

கட்டுப்பாடு: “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்” (வ. 26—27). மாறாக, உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையும் பிரசன்னமும் “உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களா(வதற்கு)கி” தேவையானதை வழங்கும் (வ. 23).

நாம் தேவனை நம்பி அவரில் இளைப்பாறுகையில், ​​கவலைகள் கரைந்து, கோபம் தணிந்து, நமது வாழ்க்கை அவருடைய “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலு(மான)ம்” வழிகளைப் பிரதிபலிக்கும் (வ. 24)

—ராக்சன் ராபின்ஸ்

மேலும் வாசிக்க

யாக்கோபு 1:19—20 ஐப் படித்து, கோபத்தைப் பற்றி அது என்ன சொல்கிறது என்பதையும் அது எவ்வாறு நம் வாழ்வையும் சாட்சியையும் எதிர்மறையாகப் பாதிக்கலாம் என்பதையும் கவனியுங்கள்.

சிந்திக்க

கவலை கோபமாக மாறுவதை நீங்கள் எவ்வாறு அனுபவித்துள்ளீர்கள்? உங்கள் அச்சங்கள் மற்றும் கவலைகளின் மையத்தில் என்ன உள்ளது? நீங்கள் கவலையும் கோபமும் அடையாதவாறு அவைகளை எப்படிச் சமாளிக்கலாம்?