வாசிக்க: எபேசியர் 4:17-29

நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள் (சங்கீதம் 4:4)

“ரோட்டு சண்டையில், ஒருவரைக் காயப்படுத்தியதாக போதகர் குற்றம் சாட்டப்பட்டார்” என்று தலைப்புச் செய்தியை படித்ததும் என்னுடைய முதல் யோசனை, ‘இயேசுவின் விசுவாசியாக, அந்த போதகர் ஏன் மன்னிக்கவில்லை? தூண்டப்படும்போது அவர் ஏன் சுயக்கட்டுப்பாட்டை பயன்படுத்தவில்லை?’ நானும் அதுபோல நடந்துகொள்ளக் கூடியவன்தான் என்பதை உடனே உணர்ந்தேன். பல முறை நான் வாகனத்தை ஓட்டும்போது, என் மகள், “அப்பா பொறுமையாக இருங்கள்” எனக்கு நினைவூட்ட வேண்டியிருந்தது.

இந்த ரோட்டு சண்டை காரியத்தைப் பற்றி நான் தொடர்ந்து யோசித்தேன்: இயேசுவை உண்மையாக பின்பற்றுபவர்கள் கோபப்படலாமா? கோபம் பாவமா?

எபேசிய விசுவாசிகளுக்கு, “மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள் (எபேசியர் 4:17)” என்று கூறிய பிறகு, கோபத்தை ஆளுவதற்கான சரியான சில ஆலோசனைகளை பவுல் வழங்குகிறார். கோபம் உண்மையில் பாவம் அல்ல என்பதை அவர் வெளிப்படுத்துகிறார். ஆனால் அது பாவத்திற்கு வழிவகுக்கும். தேவன் ஒருவரே கோபமாகவும் இருக்க முடியும் மற்றும் ஒருபோதும் பாவம் செய்யவும் முடியாது என்பதால், நாம் எரிச்சலடையும்போது பாவம் செய்வதற்கான நமது வாய்ப்பைக் குறித்து பவுல் எச்சரிக்கிறார் (வ. 26). நமக்குள் கோபம் கொதித்து, கொப்பளிக்க அனுமதித்தால், நாம் ஆபத்தோடு விளையாடுகிறோம். கோபம் நம்மைக் கட்டுப்படுத்த அனுமதிக்கும் போது, ​​ஒரு பெரிய தீமையைக் கொண்டு வர நாம் சாத்தானுக்கு வாய்ப்பளிக்கிறோம் (வ. 27). பவுல் கோபத்தை நல்லது அல்லது கெட்டது என்று வேறுபடுத்தவில்லை. நாம் கோபமாக இருக்கும்போது, ​​​​நாம் பாவம் செய்யாமல் இருப்பது இன்றியமையாதது என்று அவர் வெளிப்படையாகக் கூறுகிறார்.

கோபத்தைத் தவறாக நிர்வகிப்பதற்கு, காயீன் வாழ்வை ஒரு உன்னத உதாரணமாக முன்வைக்கிறார் (ஆதியாகமம் 4:3-8). அவர் தவறான காரணங்களுக்காக, தேவன் மீது கோபமாக இருந்தார் (வ. 3-5). தேவன் காயீனை தன் கோபத்தைக் கட்டுப்படுத்தவும், அதை அடக்கவும் எச்சரித்தார், அதனால் அவன் அதைக் கட்டுப்படுத்தி பாவம் செய்யாதிருந்திருப்பான் (வ. 7). காயீனோ தனது எரிச்சலைத் தணிக்கக் கூடாமல், தனது சகோதரனைக் கொலை செய்தார் (வ. 8).

நம்முடைய கோபத்தை நாம் அடக்கிக் கொள்ளாதபோது, ​​தீமை வெளிப்படக் காத்திருக்கிறது என்பதை அறிந்து,”கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவி(ட்)டு, பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்ச(லை)ல்” (சங்கீதம் 37:8) விட்டுவிடுவதற்குப் பரிசுத்த ஆவியானவரின் உதவி நமக்குத் தேவை. கோபம் வரும்போது அவருடைய பெலத்திலும் ஆலோசனையிலும் நாம் இளைப்பாறுவோமாக.

—கே.டீ. சிம்

மேலும் வாசிக்க

கோபம் மற்றும் பாவம் பற்றி இயேசு என்ன சொன்னார் என்பதை அறிய, மத்தேயு 5:21-22ஐ வாசியுங்கள்.

சிந்திக்க

உங்களைக் கோபப்படுத்திய ஒருவரை நினைத்துப் பாருங்கள். நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும் அல்லது உங்கள் கோபத்தை என்ன செய்திருக்க வேண்டும்? நீங்கள் தணிந்து சரியானதைச் செய்வதற்குப் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு எவ்வாறு வல்லமையளிக்க கூடும்?